போகிற போக்கில், எத்தனை பேர் ஒரு விஷயத்துக்காக பயந்து நடுங்கி அதே இடத்தில் நின்றிருக்கிறீர்கள்? எத்தனை பேர் அந்த வழியை விட்டுவிட்டு வேறு வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்?
பலருக்கும், தங்கள் லட்சியத்தில் சாதிக்க வேண்டும் என்று ஒரு கனவு இருக்கும். ஆனால், அந்த லட்சிய பாதையைக் கடக்கும்போது ஒரு வித பயமானது துரத்திக்கொண்டே வரும். அந்த பயத்தை எதிர்கொள்ள துணிவில்லாமல் அந்த லட்சிய கனவிலிருந்து விலகி விடுவார்கள்.
உதாரணத்திற்கு, சிறு வயதிலிருந்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசை உள்ள ஒருவருக்கு ரத்தம் பார்த்து பயம் என்றால், அந்த லட்சியத்திலிருந்து ஒதுங்கி விடுவது நல்லதா? அல்லது இதற்கான தீர்வுகளை கண்டுப்பிடித்து அந்த பிரச்னையை சரி செய்வது நல்லதா?
ஆம்! ஒரு பயத்தைக் கண்டு அதே இடத்தில் நிற்பதை காட்டிலும், வேறு பாதையில் செல்வதை காட்டிலும் அந்த பயத்தினுடைய வழியில் செல்வதே பயத்தை எதிர்கொள்ளும் சரியான வழி.
பயத்தின் வழியிலேயே சென்று, பயத்தை எதிர்கொண்டு லட்சிய பாதையில் பயணிக்கும் ஒருவரின் கதையைப் பார்ப்போம்.
ஒரு நபருக்கு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவருக்கு திக்கு வாய். ஒரு கதையை மற்றவரிடம் சொல்லும்போது திக்கி திக்கி சொல்வதிலேயே கதை வேறு மாதிரி எதிரே உள்ளவர்களுக்கு புரிந்துபோகும். சிலர் அவருடைய கதையை கேட்கக்கூட மாட்டார்கள்.
அந்த சமயத்தில், சிறிது காலம் வேறு வேலைக்கு செல்வோம் என்று முடிவெடுத்தார் அந்த நபர். வந்த வாய்ப்பு எல்லாம் Voice over artist மற்றும் news reading ஆகிய வேலைகளுக்குத்தான் இருந்தன. மற்ற துறையில் வாய்ப்பு கிடைத்தப்பாடும் இல்லை.
அப்போதுதான் அவனுக்கு ஒரு யோசனை வந்தது. ‘நம்முடைய லட்சியத்திற்கு நன்றாக பேச வேண்டும். நாம் ஏன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நம்மை மேம்படுத்தி கொள்ளக்கூடாது’ என்று யோசித்து, தினமும் வீட்டில் பேச பயிற்சி எடுத்துக்கொண்டு, அந்த voice over artist வேலைக்கும் சில மாதங்கள் சென்று தன்னை மேம்படுத்திக்கொண்டான். தனது பேசும் திறனை நினைத்து எவ்வளவு பயந்தாரோ அதே வழியில் சென்று இப்போது ஒரு குறும்படம் எடுக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டார்.
நம் லட்சியத்தில் முன்னேற வேண்டுமென்றால் பல விதங்களிலும் தடங்கல் வரத்தான் செய்யும். தடங்கல்கள் இல்லாமல் முன்னேற வாய்ப்பே இல்லை. தடைகள் இல்லையனில் நாமே நம் லட்சியத்திற்கு தடையாக மாறிவிடுவோம். அப்படியிருக்க இதுபோன்ற தடைகளைக் கண்டு பயந்து நின்றுவிட்டால் நம் லட்சியத்தை அடைய அல்ல பார்க்கக்கூட முடியாது. நமது லட்சியத்தின் பாதையில் கரடு முரடான மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். விழுந்துவிடுவோமோ என்று பயந்து பயணிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் ஏது வெற்றி? அந்த கரடு முரடான பாதை வெறும் பாதை மட்டும் அல்ல, ஒவ்வொரு மேட்டிலும் பள்ளத்திலும் ஓர் அனுபவம் உள்ளது. ஆகையால், அந்த கஷ்டங்களை தடைகளாக நினைக்காமல் அனுபவமாக நினைத்தால் பயமும் பயந்து ஓடும்.
நண்பர்களே! உங்கள் லட்சியத்திற்கான தடையை நினைத்து பயம் கொண்டால், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்து, அதை எதிர்த்து கொன்று, உங்கள் இலட்சியத்தை அடையுங்கள்.