motivation articles 
Motivation

மறப்பதும் நல்லதே மன்னிப்பதும் நல்லதே!

ஆர்.வி.பதி

வறு செய்யாத மனிதன் இவ்வுலகில் இல்லை. தவறுகளில் தெரிந்து செய்யும் தவறு, தெரியாமல் செய்யும் தவறு என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டு தவறையும் செய்யும் மனிதர்கள் உள்ளனர். இதில் தெரியாமல் செய்யும் தவறை நாம் மன்னித்தே ஆக வேண்டும். மன்னிப்பு என்பது மிகச்சிறந்த ஆயுதம். இப்படி பெருந்தன்மையுடன் நாம் மன்னிக்கும் போது தவறு செய்தவர் நெகிழ்ந்து பிறகொருமுறை அத்தகைய தவறைச் செய்யாமல் இருக்க முயற்சி செய்வார்.

தெரிந்து செய்யும் தவறையும் மன்னித்தே ஆக வேண்டும். நம்மில் பலர் பொறாமை குணத்தோடு நமக்குத் தீங்கிழைக்க தெரிந்தே சில தவறுகளைச் செய்வர். மனிதர்களுக்கு உரிய குணம் இது. இப்படிச் செய்வது தவறுதான். ஆனால் அப்படிச் செய்பவர் மீது கோபம் கொண்டு அவரைப் புறக்கணிப்பதன் மூலம் அவர் இது போன்ற பல தீங்குகளை உங்களுக்குத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார். நீங்கள் செய்வது தவறு என்பதை அவருக்குப் புரியும்வண்ணம் எடுத்துக் கூறி இனி இதுபோலச் செய்யாதீர்கள் என்று நாசூக்காக அறிவுறுத்தி அவர் செய்த தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் போது அவர் மனம் மாறக் கூடும். உங்கள் மீது அன்பை செலுத்தக் கூடும்.

ஜப்பான் நாட்டில் புகழ் பெற்ற ஒரு துறவி இருந்தார். அவர் ஞானம் அடைவதற்கான வழியினையும் சிறந்த போதனைகளையும் தன்னை நாடி வந்தவர்களுக்கு கற்பித்து வந்தார். இதற்காக அவருடைய மடத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்து தங்கி பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.

அவ்வாறு தங்கியிருந்த சீடர்களில் ஒருவன் தன்னுடன் தங்கியிருந்த சிலருடைய பொருட்களைத் திருடத் தொடங்கினான். ஒருநாள் சிலர் அவனை கையும் களவுமாகப் பிடித்து துறவியிடம் கொண்டு வந்து நிறுத்தி விஷயத்தைத் தெரிவித்தனர்.

துறவி அவனை ஏதும் செய்யாமல் மன்னித்து விட்டுவிட்டார்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அவன் திருடிவிட்டான். அப்போதும் சிலர் அவனை துறவியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி அவனை மடத்தை விட்டு வெளியேற்றுமாறு வற்புறுத்தினார்கள்.

துறவி இப்போதும் ஏதும் செய்யாமல் அந்த திருடனை மீண்டும் மன்னித்து அனுப்பினார். இதனால் கோபமடைந்த சிஷ்யர்கள் ஒன்று சேர்ந்து துறவியைச் சந்தித்தார்கள்.

“இரண்டு முறை திருடிய ஒருவனை நீங்கள் தண்டிக்காமல் மன்னித்து விட்டீர்கள். இனி நாங்கள் திருடனுடன் சேர்ந்து இந்த மடத்தில் இருப்பது நல்லதல்ல. ஓன்று நாங்கள் இந்த மடத்தில் இருக்க வேண்டும். அல்லது அந்த திருடன் இருக்க வேண்டும். இதை நீங்களே முடிவு செய்யுங்கள்”

துறவி இதைக் கேட்டு சிறிது நேரம் அமைதி காத்தார். பின்னர் அனைவரிடமும் சில வார்த்தைகளைக் கூறினார்.

“நீங்கள் அனைவரும் புத்திக்கூர்மை உடையவர்கள். உங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை பகுத்தறியத் தெரியும். நீங்கள் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளவீர்கள். உங்களை யார் வேண்டுமானாலும் சீடர்களாகச் சேர்த்துக் கொள்ளுவார்கள். ஆனால் இவனைப் பாருங்கள். இவனுக்கு நல்லது கெட்டது ஏதும் தெரியாது. இவனை நானே புறக்கணித்தால் இவனுடைய எதிர்காலம் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். அதனால் நீங்கள் வேண்டுமானால் இங்கிருந்து செல்லலாம். ஆனால் இவன் என்னுடன்தான் இருப்பான்.”

துறவி தீர்க்கமாக இவ்வாறு கூறியதைக் கேட்ட அந்த சீடனின் கண்கள் கலங்கின.

இரண்டு முறை திருடிய தன் மீது மீது துறவி காட்டிய கருணை அவனை நெகிழச் செய்து விட்டது. இனி எக்காரணத்தைக் கொண்டும் திருடக்கூடாது என்று முடிவெடுத்தான்.

மறப்பது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம். சக மனிதன் செய்த தவறை மனப்பூர்வமாக மன்னிக்கும் மனம் கொண்ட மற்றொரு மனிதன் உயர்ந்த மனிதனாகிறான். நீங்கள் எப்போதும் உயர்ந்த மனிதனாகவே இருக்கப் பாருங்கள்.

Meet Gitanjali Rao: The Young Scientist and Inventor Changing the World!

கோலாரம்மன் கோவிலில் மறைந்திருக்கும் மர்மங்கள்!

சருமத்தையும் அழகையும் மெருகேற்ற உதவும் நெய்!

உங்க கிட்ட வந்து பேச பலருக்கும் தயக்கமா? வாய் துர்நாற்றமா? போக்க 10 குறிப்புகள் இதோ!

தோரணங்கள் கட்டும் காரணங்கள் தெரியுமா பாஸ்?

SCROLL FOR NEXT