இளைஞர்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்ற சொல் 'போர்’. இந்தச் சொல் தமிழ்ச்சொல்லாகவே மாறிவிட்டது என்று கூறும் அளவுக்கு பெரியவர் சிறியவர். நகர மக்கள் கிராமமக்கள் எனப் பாகுபாடின்றி அனைவரது வாயிலிருந்தும் மிகவும் சுலபமாக வெளிப்படும் ஒரு சொல். திரும்பத் திரும்ப ஒரே காரியத்தைச் செய்துகொண்டிருப்பதனால் வருகின்ற மனச்சோர்வையும் களைப் பையும் குறிக்கும் ஆங்கிலச் சொல் இது. சொல் ஆராய்ச்சிக்குத் செல்லாமல் இந்தச் சோர்வு மனப்பான்மையை எப்படி நீக்குவது முன்னேற விரும்புபவர்கள் இதை முற்றிலும் எப்படி புறக்கணிப்பது என்பது பற்றி பார்ப்போம்
சுறுசுறுப்பு என்பது உடல், மனம் ஆகிய இரண்டையும் பொருத்தே அமைகின்றது. சிலருக்கு திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் இருக் கும் உற்சாகமும் சுறுசுறுப்பும் வாரத்தின் கடைசி நாட்களில் குறைந்து போய்விடும். எப்படித்தான் இந்த சுறுசுறுப்பு குறைகிறது என்று எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது என்று சிலர் அலுத்துக் கொள்வார்கள். இத்தகைய மனநிலையைப் போக்க சில வழிகளைக் கடைப்பிடித்தால் போதும், குறைகின்ற உற்சாகத்தை நிறைவாக்கிக் கொள்ளலாம்.
காலையில் எழுந்தவுடன், செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது தொலைக்காட்சி வசதியும் இருக்கின்றது. அன்றைய உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளும்போது நாமிருக்கும் உலகம் எவ்வளவு சுறுசுறுப்பாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போவோம்.
பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ சேவை செய்வதற்கான குழுக்கள் இருக்கும். அவற்றில் கண்டிப்பாக ஓர் உறுப்பினராகச் சேர்ந்து, மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விழாக்களுக்கு அழைத்தால் கண்டிப்பாகச் சென்று கலந்து கொள்ளுங்கள். பிறரது பழக்க வழக்கங்களைக் கண்டு, அவற்றிலிருந்து சில நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ள இது உதவும். மேலும் இந்த விழாக்களில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மையும் தொற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
ஆண்டுக்கு ஒருமுறையேனும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுங்கள். பிற ஊர்கள், பிற நாடுகள் ஆகியவற்றைப் பார்த்து ரசிக்கும்போது புதுப்புது எண்ணங்களும், மகிழ்ச்சியும், சுறுசுறுப்பும், கட்டாயம் கிடைக்கும்.
உங்கள் இல்லம் இருக்கும் தெருவில் வசிக்கும் மற்ற குடும்பத்தார் களுடன் நட்பாகப் பழகிக்கொள்ள முயற்சிகளை மேற் கொள்ளுங்கள்.
உங்கள் பகுதியில் தூய்மை மற்றும் வளர்ச்சிப் பணிகள் நடை பெறும்போது கண்டிப்பாக முதல் நபராகக் கலந்து கொண்டு சேவை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பேருந்துகள், ரயில்களில் பயணிக்கும்போது புதியவர்களுடன் பேசிப் பழகுவதற்குத் தயக்கம் காட்டாதீர்கள்.
புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
முடிந்தால் ஏதாவதொரு செல்லப் பிராணியை எடுத்து வளர்க்க முயலுங்கள். அதை முழுதாகக் கவனிக்கும் பொறுப்பையும் நீங்களே ஏற்று செய்யுங்கள்.
உடல் உழைப்பிலும் விளையாட்டுகளிலும் இயன்றவரை உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
உறுதிகொண்ட மனநிலையுடன் உங்களைச் சுற்றிப் பாருங்கள். பிற மனிதர்களும், இயற்கையும் அதில் வாழும் உயிரினங்களும் உங்களுக்குப் பலவற்றைக் கற்றுக்கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களோடு நேசத்தோடு பழகுங்கள். எப்போதும் உங்களைச் சுறுசுறுப்பாக வைக்கக்கூடிய அமிர்தம் இந்தப் பூவுலகிலேயே உங்களுக்குக் கிடைக்கும். இந்த அமிர்தம் மட்டும் கிடைத்துவிட்டால் 'போர்' என்ற சொல்லே உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டுவிடும்.