motivation article Image credit - pixabay
Motivation

முன்னோர்களின் வழியை பின்பற்றலாமே..!

ம.வசந்தி

நாம் இன்று அனுபவிக்கும் நற்பலன்கள் பலரும் நம்முடைய முன்னோர்கள் பாடுபட்டு அமைத்ததின் மூலமே நமக்கு கிடைத்திருக்கின்றன. கரிகாலன் கட்டிய கல்லணையும், ராஜராஜன் கட்டிய தஞ்சை கோவிலும், மன்னர்கள் காலத்து சாலைகளும், குளங்களும் பிற்கால மக்கள் போட்ட தண்டவாளங்களும், ரயில் நிலையங்களும் இன்றைய சமூகத்தின் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்கி இருக்கின்றன. வருங்கால சமுதாயத்திற்கு கூட எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

சாலையோரங்களில் இன்றைக்கு எத்தனை ஆயிரம் புளிய மரங்கள்! அவைதானே நாட்டிற்கு புளியை உற்பத்தி செய்து தருகின்றன. அந்த மரங்கள் எல்லாம் நாமா செடியாக நட்டு வளர்த்தோம். மூன்று தலைமுறைக்கு முந்தைய சமுதாயத்தினர் செடியாக நட்டு நீரூற்றி வளர்த்தவை இன்றைக்கு நாம் பழம் பறித்து உண்டு மகிழ்கிறோம்.

கோபுரங்களில் கொலுவிருக்கும் பொம்மைகள் எல்லாம் யார் படைத்தது? இக்கால தலைமுறையினரா! இல்லை நம் முன்னோர்களின் கலை திறத்தை அல்லவா அவை பறைசாற்றுகின்றன! ஆலயத்து மண்டபங்களும், பிரகாரங்களும் நம் முந்தைய மக்களின் கல்வி, ஞானம், உழைப்பு ஒற்றுமை எல்லாவற்றுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன என்பதுதானே உண்மை.

ஆனால் நம் முன்னோர்களின் பெருமைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன பெருமை! ஒன்றும் பயனில்லை. அவர்கள் எந்த கொள்கைகளை கடைபிடித்தார்களோ அதை நாமும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

அவர்களுடைய சாதனைகளைப் பற்றி மட்டும் பேசி பயனில்லை. அவர்கள் ஆற்றிய சாதனைகளில் ஓரளவாவது நாம் செய்ய முன்வர வேண்டும். அவர்கள் சந்ததியில் வந்தவர்கள் நாம் என்று சொல்லிக் கொள்வதில் மட்டும் பெருமை இல்லை. அதற்கு ஏற்ற முறையில் பண்புகளை கடைப்பிடிப்பதன் மூலம்தான் நாம் அந்த பெருமைக்கு உரியவர்கள் ஆவோம்.

இன்றைய காலச் சூழலை போல எந்த வசதிகளும் இல்லாத காலம் நம் முன்னோர்கள் காலம். விஞ்ஞானம் வளரவில்லை. சாலை வாகன வசதி இல்லை. மோட்டார் மின்சார வசதி இல்லை. எத்தனை எத்தனை தடைகள். ஆனால் அத்தனை தடைகளையும் தகர்த்து தங்கள் நோக்கில் வெற்றிபெற செயலாற்றி வென்று காட்டி இருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.

இயற்கை கூட மண்ணில் தான் உண்டாக்கிய உயிர்களை தானே காக்க வேண்டிய கடமை கருதி, மரங்களை உற்பத்தி செய்து நாம் வெளியிடும் கரியமில வாயுவை உயிர்தரும் பிராணவாயுவாக மாற்றித் தருகிறது. இல்லை என்றால் இவ்வளவு மரங்கள் இருப்பது சாத்தியமே இல்லை.

உப்பு நிறைந்த கடல் நீர் நமக்கு தூய நீரை வழங்குகிறது. பூமி தன்னுள் விழும் விதைகளை பயிராக்கி ஒரு தானியத்தை ஒன்பது தானியமாக்கி தருகிறது. மண்ணுக்குள் இருந்து கனிமத்தையும் உலோகத்தையும் தருகிறது  இப்படி எல்லாம் நமக்கு உதவியதற்காகத்தான் நம் முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வழிபடத் தொடங்கினார்கள்.

நமது நாகரிகத் தேவைகளின் காரணமாக இயற்கையை அழிக்காமல் தூய்மையை கெடுக்காமல் உலகை மாசு படுத்தாமல் நமக்கு உதவாது என்று நாம் கழித்து கட்டிய குப்பைகளையும் கழிவு பொருட்களையும் அதற்கு ஏற்ற முறையில் அப்புறப்படுத்தி நாட்டுக்கும் இயற்கைக்கும் உறுதுணையாக இருப்போம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT