நம்மில் பெரும்பாலோர் விரும்புவது இன்பத்தை மட்டுமே. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதே வாழ்க்கை என்ற நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எது நிதர்சனமான வாழ்க்கை என்பதை இப்பதிவில் நாம் சற்றுத் தெரிந்து கொள்ளுவோம்.
உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் இன்பமாகவே கழிகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். இப்படி நடந்தால் ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கும். இரண்டு நாள் மகிழ்ச்சியாக இருக்கும். இதுவே தொடர்ந்தால் வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல் போய்விடும். துன்பமும் அப்படித்தான். எப்போதாவது வந்தால் சரி. ஒவ்வொரு கணமும் துன்பத்தை சந்தித்தால் அந்த வாழ்க்கையும் நரகமாகத்தான் இருக்கும். மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். அது பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி. இந்த நியதி ஒன்றுதான். இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை ஒரு நதி போல ஓடும்.
காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தார் ஒரு துறவி. சற்று தொலைவில் ஒரு மூங்கில் காடு தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு மனிதன் சோகத்தோடு நின்று அதை வேடிக்கை பார்த்தவாறு இருந்தான்.
துறவி வருவதைக் கண்ட அவன் துறவியை வணங்கினான்.
“மானிடனே. ஏன் உன் முகத்தில் சோகம் ?”
“மூங்கில் காடு எரிகிறது. அதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். கடவுள் அதைக் காப்பாற்ற மாட்டாரா ?”
“இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். நிலைத்த இன்பத்திற்கும் மரியாதை கிடையாது. நிலைத்த துன்பத்திற்கும் மரியாதை கிடையாது. இதுவே உலக நியதி”
இவ்வாறு சொன்ன துறவி தன் வழியே நடக்கத் தொடங்கினார்.
சில மாதங்கள் கழித்து துறவி அப்பகுதிக்கு மீண்டும் வந்தார். முன்பு சந்தித்த அதே மனிதன் இப்போது நின்று கொண்டு பசுமையாக வளர்ந்திருந்த அந்த மூங்கில் காட்டைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.
அவன் துறவியைக் கண்டான்.
மீண்டும் அவரை மகிழ்ச்சியோடு வணங்கினான்.
“மானிடனே. இப்போது நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் அல்லவா ?”
“ஆம் ஸ்வாமி. கடவுள் காப்பாற்றிவிட்டார். சில மாதங்களுக்கு முன்னால் எரிந்து சாம்பலான மூங்கில்காடு மீண்டும் துளிர்த்து செழிப்பாய் வளர்ந்து நிற்கிறது. அதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
துறவி புன்னகைத்தார்.
“ஆறுமாதங்களுக்கு முன்னால் துன்பம் தந்த அதே மூங்கில்காடு இப்போது உனக்கு இன்பத்தைத் தருகிறது. கடவுள் காப்பாற்றவில்லை என்று சொன்ன நீயே இப்போது கடவுள் காப்பாற்றிவிட்டார் என்று சொல்லுகிறாய். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இல்லையேல் வாழ்க்கை கசக்கும். இதுவே உலக நியதி”
“ஆம் ஸ்வாமி உண்மைதான்” என்று பதிலளித்த அந்த மனிதன் வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டான். துறவியும் தன் வழியே நடக்கத் தொடங்கினார்.
ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பம் என்பது நிரந்தரமல்ல. துன்பம் என்பதும் நிரந்தரமல்ல. இன்பம் ஏற்பட்டால் துள்ளிக் குதிக்கக்கூடாது. துன்பம் ஏற்பட்டால் துவளவும் கூடாது.
மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை மனதுள் வைத்துக் கொண்டாடப் பழக வேண்டும். அதை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. அதேபோல துன்பம் ஏற்பட்டால் அதை பிறரிடம் சொல்லி புலம்பவும் கூடாது. துன்பத்திற்கான காரணம் என்ன என்பதைப்பற்றி சிந்தித்து அதை எப்படி சரிசெய்வது என்று முயற்சி செய்யவேண்டும்.
இந்த உலகத்தில் எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கத்தான் செய்கிறது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் மகான் புத்தர். ஆசைப்படாமல் வாழ முடியாது. எனவே அளவாக ஆசைப்படுங்கள். உங்கள் ஆசையானது நியாமான ஆசையாக இருக்க வேண்டும். எளிமையாக வாழப் பழகுங்கள். எளிமை துன்பங்களை எளிதில் கடக்கும் மனநிலையை உங்களுக்குக் கற்பிக்கும்.