Motivatonal articles 
Motivation

'பெரிதினும் பெரிது கேள்' என்கிற கோட்பாட்டின் முக்கியத்துவம் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

'பெரிதினும் பெரிது கேள்' என்றார் பாரதியார். மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களையும் குறிக்கோளையும் கொண்டு செயல்பட வேண்டும் என்று விரும்பினார். பெரிதினும் பெரிது கேள் என்கிற கோட்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இலட்சியம் ஏன் அவசியம்?

மனித வாழ்வு இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் ஊசல் ஆடும் ஒரு கட்டமைப்பை கொண்டுள்ளது. தினசரி வாழ்வின் தேவைகள், அன்றாடப் பணிகள், அதற்கான மெனக் கெடல்கள், ஆரோக்கியத்திற்கான செயல்பாடுகள் இவற்றுக்கு இடையே வாழ்ந்தாலும் இலட்சியம் என்கிற ஒன்று அவசியம் மனிதர்கள் வாழ்வில் இருக்க வேண்டும். அது மிகவும் சாதாரணமாக இல்லாமல் உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய இலட்சியமாக இருத்தல் வேண்டும். மனிதர்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு ஏராளமான வாய்ப்புகள் தற்போது கொட்டிக் கிடக்கின்றன.

ஒரு மனிதன் நினைத்தால் நாள் முழுவதும் தனது நேரத்தை செல்போனிலும் டிவி பார்ப்பதிலும் செலவிட முடியும். தீய பழக்கங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் முடியும். ஏனென்றால் இவர்களுக்கு வாழ்வில் லட்சியம் என்ற ஒன்று இல்லை. அப்படியே இருந்தாலும் ஒன்றுக்கும் உதவாத சின்ன சின்ன சந்தோஷங்களையும் விருப்பங்களையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சியங்கள் கொண்ட மனிதர்கள் இவற்றின் பிடியில் சிக்குவது இல்லை. உயர்ந்த நோக்கத்தை கொண்டு செயல்பட ஏதுவாக திட்டங்கள் தீட்டி அதற்கான செயல்முறைகளில் இறங்கி அவற்றை நிறைவேற்ற முனைகிறார்கள். போராட்டங்கள், சவால்கள், அனுபவங்களை சந்திக்கிறார்கள். அவை அவர்களை மெருகேற்றி புடம் போட வைத்து தன்னம்பிக்கையை அதிகரித்து செயல்பட வைக்கும்.

பெரிதினும் பெரிது கேட்பவர்களின் மனப்பாங்கு;

தனது தினசரி வாழ்க்கை அலுவல்களை முடித்து, ஓய்வு நேரத்தை மிகவும் திறம்பட கையாள்வார்கள் லட்சியவாதிகள். உயர்ந்த லட்சியங்களை அடைவது ஒன்றே நோக்கமாகக் கொண்டவர்களுக்கு தேவையில்லாத கவனச் சிதறல்கள் இருக்காது. அவற்றின் பிடியில் சிக்க மாட்டார்கள். இவர்களது சிந்தனை ஆக்கப்பூர்வமாக இருக்கும். புதுமையான வழிமுறைகளுடன் கூடிய ஆக்கப்பூர்வமான சிக்கல் தீர்க்கும்  திறனைக் கொண்டிருப்பார்கள்.

தங்களது வாழ்வு அர்த்தம் நிறைந்தது என்கிற உண்மையை புரிந்து கொண்டவர்கள் இவர்கள். தொலைநோக்குப் பார்வையுடன் தங்கள் இலக்குகளை நோக்கிய பயணத்தில் மிகவும் உறுதியுடன் செயல்படுவார்கள். முன்னேற்றம் தங்களுக்கு மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் நன்மை செய்யும் என்கிற பேருண்மையை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.

பெரிதாக சிந்திப்பதன் நன்மைகள்;

பெரிதாக சிந்திப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் சொந்த திறனை உயர்த்துவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு பயனளிக்கும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவும் திட்டங்களை செயல்படுத்துவார்கள்.  அதில் ஏற்படும் சவால்களில் நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்வார்கள். தோல்விகளை கூட பாடங்களாக ஏற்றுக் கொள்வார்கள்.

பெரிய சிந்தனையாளர்கள் பெரும்பாலும் உலகில் ஒரு அடையாளத்தை விட்டுச் செல்வதை நோக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது நேர்மறையான சமூக மாற்றங்களுக்கு வழிவகுக்கும். எதிர்கால சந்ததியினரை இன்னும் பெரிய அளவில் கனவு காண ஊக்குவிக்கும். இலட்சிய திட்டங்களுக்கு பெரும்பாலும் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் வேலை செய்வார்கள். புதிய யோசனைகள் வழங்கக்கூடிய வலுவான நெட்வொர்க்களை உருவாக்குவார்கள். குறுகிய கால ஆதாயங்களை காட்டிலும் நீண்ட கால ஆதாயத்துடன் கூடிய செயல்பாடுகளைக் கொண்டிருப்பார்கள்.

பெரிதாக சிந்திக்கும் மனநிலையை தழுவுவது, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் அற்புதமான முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சமூகத்திலும் சக மனிதர்களிடையேயும் லட்சியம் மற்றும் படைப்பாற்றல் கலாச்சாரத்தையும் வளர்க்கும்.

ஒரு ஆலமரம் பல விழுதுகளை உருவாக்குவதுபோல பெரிய லட்சியங்களைக் கொண்டவர்கள் தங்களைப் போலவே பல்லாயிரக்கணக்கான மனிதர்களை உருவாக்குவார்கள். இந்த சமூகமும் மனிதர்களும் வருங்கால சந்ததியினரும் இதனால் அடையக்கூடிய பயன்கள் ஏராளம்.

இது தெரிஞ்சா சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கவே மாட்டீங்க! 

விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்!

உங்கள் மகிழ்ச்சிக்கு தடையாய் நிற்கும் 8 பழக்க வழக்கங்கள் என்ன தெரியுமா?

இளையராஜா வந்தவுடன்தான் உயிர் சென்றது… அதுவரை ஊசலாடியது – மலேசியா வாசுதேவன் மகள் ஓபன் டாக்!

காலை உணவை தவறாமல் உண்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்!

SCROLL FOR NEXT