நம் வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் நம்முடைய உணர்ச்சிகளுக்கு அடிமையாவதாலேயே பெரிதும் கஷ்டப்படுகிறோம். சில சமயங்களில் தாமரை இலை மேலே இருக்கும் நீர் போல பட்டும் படாமல் இருக்க கற்றுக்கொள்வது நல்லது. தாமரை இலையிலே இருக்கும் நீரைப் பார்த்தால் தெரியும் அது தாமரை இலையில் ஒட்டுவதில்லை. அதற்கு காரணம் தாமரையிலையில் இருக்கும் ஒரு மெல்லிய படலம் நீரை அதன் மீது ஒட்டாமல் பார்த்துக்கொள்கிறது.
இதுவே விளக்கில் இருக்கும் திரியை பாருங்களேன். எண்ணெய் பட்டதும் முழுவதுமாக உறிஞ்சி வைத்துக்கொள்ளும்.
எண்ணெய் என்னும் உணர்ச்சிகளை முழுவதுமாக உறிஞ்சிக்கொண்டால் வாழ்வில் வேதனைப்பட வேண்டியிருக்கும். அதனால் தாமரை இலை போல உணர்ச்சி என்னும் நீர் உங்கள் மீது படாமல் இருக்க ஒரு படலத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.
* உங்களை வேண்டாம் என்று புறக்கனிப்பவர்கள் உங்கள் சொந்தத்திலோ, நட்பு வட்டத்திலோ அல்லது காதலிலோ இருக்குமானால் அதை நினைத்து வருத்தப்படாமல் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
* உங்களுக்கு பதில் வேறு ஒருவரையோ அல்லது வேறு ஏதோ ஒரு விஷயத்தையோ பெரிதாக நினைக்கும் இடத்தில் உங்களுக்கான மரியாதை இல்லாமல் போகிறது. அப்படிபட்ட இடத்தில் நீங்கள் இருப்பது சிறந்ததல்ல அதனால் கடந்து செல்லுங்கள்.
* நாம் அன்பு செலுத்தும் அனைவரும் கடைசி வரை நம்முடன் இருப்பதில்லை. அதேபோல நாம் நம்பிக்கை வைக்கும் அனைவரும் நமக்கு விசுவாசமாக இருப்பதில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
* நம்மை வேண்டாம் என்று கூறி விலகி செல்பவரை நினைத்து வருந்தாதீர்கள். நமக்கு அப்படிப்பட்டவர் தேவையில்லை. அப்படி அவர்கள் விலகி செல்வதால் நமக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை. நாம் நன்றாகவேயிருக்க போகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
* எப்போதுமே உண்மையை பேசிவதற்காக வருத்தப் படாதீர்கள். மனதில் நினைப்பதை ஒளிவு மறைவின்றி பேசிவிடுவது சிறந்ததாகும். நம் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா சூழ்நிலைகளையும் அதன் விளைவுகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அந்த பிரச்னையை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பது நம் கையிலேதான் உள்ளது.
* நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். அது ஏதோ ஒரு சமயத்தில் எதிர்ப்பாராத நேரத்தால் யார் மூலமாவது நமக்கே அது திரும்ப கிடைக்கும்.
* உங்களிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய இலக்கை நோக்கியே உங்கள் பயணமானது இருக்க வேண்டும். அதை நோக்கி உங்கள் செயலும் இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
* நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் முடிவடைந்து விட்டதே என்று நினைத்து வருத்தப்படாதீர்கள். ஒன்று முடிவடைந்தால்தான் வேறு ஒன்று தொடங்க முடியும். நம் வாழ்வில் ஏதோ ஒரு விஷயத்திற்கு போடப்படும் முற்றும் வேறு ஏதோ ஒரு நல்ல விஷயத்திற்கான ஆரம்பமாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.