motivation article Image credit - pixabay
Motivation

தோல்வியை வெற்றியாக்கும் தந்திரம்!

இந்திரா கோபாலன்

வெற்றி பெற்ற மனிதனிடம் உலகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அவன் எல்லா செயல்களையும் கூர்ந்து கவனிக்கிறது. வெற்றியின விலை அதிகம். முன்னைவிட இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறது‌. பாரதிராஜா, மணிரத்னம் போன்றோர் நல்ல படம் எடுத்திருந்தால் கூட இதைவிட அதிகம் உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம் என்று பொதுமக்கள் பேசுவார்கள்.

வெற்றி பெற்றவர்கள் தங்களைப் பற்றி அதிகம் எண்ண வேண்டுமே தவிர, தாங்கள் செய்யும் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டுமே தவிர, ஊர் உலகம் அபிப்ராயங்கள் கேட்டு மனம் புழுங்கக் கூடாது. திரைப்படத்துறையில்  உள்ள ஒருவர் "நான் பத்திரிகையே படிப்பதில்லை. விஷயம் தெரியாதவன் எல்லாம் என்னைப்பற்றி எழுதியிருப்பார். அது என்னை பாதித்துவிடும்.அதனால் பார்ப்பதே இல்லை" என்றாராம். பிறர் நம்மை பாதிக்க அனுமதிக்கிறோமா , அனுமதிப்பதில்லையா,   என்பது நம் கையில்தான் உள்ளது. மனம் நம் மனம். அதில் எதை உள்ளே விடுகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.

தோல்விகளை சமாளிக்க ஒரு தந்திரம் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் சீட்டு விளையாடுவார்கள். அதில் பெரும்பாலும் மனைவியே வென்றார். கணவனுக்கு தொடர் தோல்வியை  ஏற்க முடியவில்லை. சில சமயம் வேலை உள்ளது என்று தட்டிக் கழித்தார். அதன் பின் நிறைய யோசித்து "கேவலம் ஒரு விளையாட்டு. இதில் காசா பணமா விளையாட்டை கூட என்னால் விளையாட்டாக எடுத்துக் கொள்ளமுடிவதில்ல. விளையாடுவதில் எவ்வளவு ஆனந்தம். அதை இழக்கலாமா"என்று யோசித்து மீண்டும்  ஜாலியாக விளையாடத் தொடங்கினார் கணவன்.

நாம் சில முயற்சியில் வெற்றியை எதிர்பார்க்கிறோம். தோல்வி வருகிறது. அதை விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்  வெற்றி காணும் தந்திரம் இருக்கிறது. விளையாட்டில் வெற்றி தோல்வியை அணுகும் முறை ஒரு அற்புதமான பண்பு. விளையாட்டில் தோற்றாலும் என்ன செய்கிறார்கள். சிரித்த முகத்துடன் எதிரியிடம் சென்று பாராட்டிக் கை குலுக்குகிறார்கள்.

குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வெற்றி தோல்வி இயல்பு என்ற மனப்பான்மையையும் நாம் தோற்றுப் போனால் வெற்றி பெற்றவன் நம் எதிரி அல்ல என்கிற நல்ல பண்பாட்டையும் இது வளர்க்கிறது. பொது வாழ்க்கையில் இந்தப் பழக்கம் அரிதாகிவிட்டது. அறிஞர் அண்ணா எதிர்கட்சித் தலைவர்களுடன் அன்பாக பழகுவார். பெரியாரும் அப்படித்தான். ஆனால் இன்றைய அரசியலில்  நிலைமை இப்படியில்லை. அதுசரி நீங்கள் எப்படி? விளையாடுங்கள். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளையும் அப்படி எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு ஏற்படும். அப்பொழுது தோல்வியைக் கண்டு துவளமாட்டீர்கள். அடுத்த பந்தயத்துக்கு தயாராவீர்கள். அடுத்து முயன்றால் ஆகாதது உண்டா என்ன?.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT