Motivation Image pixabay.com
Motivation

முன்னேற்றம் தடுக்கும் கூச்சத்தை அகற்றி வெற்றி காண்போம்!

சேலம் சுபா

’வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்கள் எதிர்நீச்சல்’ என்ற பாடலைப் கேட்டிருப்போம். வாழ்க்கை எனும் அலை கடலில் நம்மை முன்னேற விடாமல் பின் இழுக்கும் அலைகளாக சில விஷயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கூச்ச சுபாவம்.

பழகிய நண்பர்களிடையே மணிக்கணக்காக அரட்டை அடிப்பவர்கள் பலரால் அறியாத  நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேச சொன்னால் விலகிப் போவார்கள். காரணம் கூச்சம். பெரிய எழுத்தாளராக இருப்பார்கள் அல்லது மெத்தப் படித்து அரசுப் பதவிகளை அலங்கரிப்பார்கள். அவர்களிடம் மேடைகளில் ஏறி பேசச் சொன்னால்  அவ்வளவுதான் வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கீழே இறங்குவார்கள்.

இந்தக் கூச்சம் காரணமாக வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் தொடர் தோல்விகளை சந்தித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்கு முதல் காரணம் கூச்சமே.

"இந்த கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்கு சென்று இருப்பேன் நான் " என்று பலர் புலம்புவதை கேட்டிருப்போம். ஆம் நமக்குள் இருக்கும் சின்ன தயக்கம் நம் திறமையை நாம் உணராதபடி செய்து விடுகிறது.

திக்குவாய் என்பதால் கூச்ச சுபாவம் உடையவராக இருந்த ஆபிரகாம் லிங்கன் தன் குறையை  புறக்கணித்து தன் கூச்சத்தை மீறியதால்தான் அவரால் புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஆக முடிந்தது. திக்குவாய் கொண்ட அவர்தான் புகழ்பெற்ற உரையான கெட்டிஸ்பர்க்  உரை நிகழ்த்தினார்.

கோமாளி போன்ற உருவத்தையும் மோசமான தன் குரலையும் நினைத்து கூச்சப்பட்டவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். ஆனால் அவர் கண்டுபிடித்த சினிமாதான் இன்று உலகின் முதன்மையான பொழுதுபோக்கு.

இப்படி எண்ணற்ற சாதனையாளர்கள் உள்ளனர். கூச்சப்படாமல் முன்னேறிச் செல்பவர்கள்தான் மற்றவர்கள் பின்தொடரும் தன்னம்பிக்கை சாதனையாளர்களாக வெற்றி பெறுகிறார்கள்.

நமக்கு இருக்கும் குறைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைகளாக்க நம்மால் மட்டுமே முடியும். கூச்சப்பட்டு ஒதுங்குவதால் நம்மை நோக்கி வரும் வாய்ப்புகளையும் தடுத்து விடுகிறது. "அவரால் நாலு பேரிடம் சகஜமாக பேசக்கூட முடியாது அவர்கிட்ட  எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பைத் தருவது?" என்பார்கள். ஆனால் அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் திறமை நிச்சயம் நம்மிடம் உண்டு என்பது நமக்குத் தெரியும்.

ஆகவேதான் நமக்கு என்ன குறை என்பதை நாம்தான் உணர வேண்டும். குறைகள் இருக்கின்றனவே என்று நினைத்து ஒதுங்கி நிற்பதில் பயன் ஏதுமில்லை. தன்னால் மற்றவர்களை போல் இயல்பாகவும் இயற்கையாகவும் பேச முடியும் என்ற நம்பிக்கை மிகத் தேவை . இந்த நம்பிக்கை வாய்ப்புகளை எதிர்நோக்க உதவும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்போது வெற்றி தானாக வருகிறது.

மற்றவைகளை யாராவது கற்றுத்தரலாம். ஆனால் கூச்சத்தை  நாம் மனது வைத்தால் மட்டுமே விலக்க முடியும். அதிகமாக கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கு திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவர் களால்தான் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் சென்று வெற்றிக்கனியை ருசிக்க முடியும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT