நிபந்தனை அற்ற அன்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் ஒருவர் மீது முழுமையாக அன்பு செலுத்துவது. அப்படி எதையும் எதிர்பார்க்காமல் ஒருவரை நேசிப்பதற்கு நாம் கொடுக்கும் அன்பு ஒருபோதும் ஈடாகாது என்ற உண்மையுடன் வாழ அபரிமிதமான உணர்ச்சி வலிமை, தைரியம் தேவை. நாம் ஏன் நிபந்தனை இன்றி நேசிக்க கூடாது? பொதுவாக அன்பிற்கு பதில் அன்பை விரும்புவது மனித இயல்பு. நாம் பாசமாக உணரும் ஒருவரிடம் இருந்து அதே அளவு உணர்ச்சிபூர்வமான பதிலை எதிர்பார்ப்பது மனித இயல்பு. எல்லோரும் அனைவரையும் நிபந்தனையின்றி நேசித்தால் சண்டைகள், தவறான புரிதல்கள், இதய முறிவுகள் என எதுவும் இல்லாமல் உலகமே மிகவும் அழகானதாக இருக்கும். ஆனால் எந்த நிபந்தனையும் இன்றி அன்பை கொடுக்கும் மனம் நம்மில் வெகு சிலருக்கு மட்டும் தான் உள்ளது.
இங்கு அன்பு என்பது 'கொடுத்து வாங்கும்' பண்டமாற்று போல்தான் உள்ளது. நாம் செய்யும் எந்த ஒரு நல்ல செயல்களுக்கும் ஈடாக ஏதாவது கிடைக்கும் என்ற மனப்பான்மையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் இருக்கிறோம். இது தவறான போக்கு. நாம் ஏன் நிபந்தனை இன்றி நேசிக்க கூடாது? நம் பெற்றோர்கள் நம்மை நிபந்தனை இன்றி, தன்னலமின்றி நேசிக்கின்றார்கள். அவர்களால் முடியும்போது ஏன் நம்மால் முடியாது. நம்மாலும் நிபந்தனை இன்றி நேசிக்க முடியும். அது பிறருக்கு நாம் கொடுக்கக்கூடிய தூய்மையான அன்பு என்பதை உணர்ந்து அன்பு செலுத்தும் பொழுது முடியும். உண்மையான அன்பிலிருந்து நிபந்தனையற்ற அன்பு உருவாகிறது. அதனால் தான் ஒருவரை ஒருவர் நேசிப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
நிபந்தனையற்ற அன்பை கொடுப்பது கடினம் என்று சிலர் எண்ணுகிறார்கள். நிபந்தனை அற்ற அன்பை காட்ட, சுயநலமின்றி சிந்திக்க நம் மனதை தயார்படுத்த வேண்டும். இதை செய்வது எளிதானதல்ல. ஆனால் சாத்தியமானதாகும். நிபந்தனை இருக்கும் பட்சத்தில் அது ஒரு பரிவர்த்தனைக்கு சமமாகும். எனவே நிபந்தனை இல்லாத நேசிப்பு முக்கியம்.
நிபந்தனைகள் கொண்ட அன்பை கொண்டது உறவுகள் என்று சொல்லப்படுவதுண்டு. நம்முடன் சேர்ந்து வாழக்கூடிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளையும், சக மனிதர்களையும் நிபந்தனையற்ற அன்புடன் நேசிக்க பழகவேண்டும். நம்மால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி யாரோ ஒருவரின் வாழ்வை ஒரு நாள் அல்லது ஒரு சில மணி நேரமாவது மகிழ்ச்சியாக மாற்ற முடிந்தால் நமக்குள்ளும் இறைவன் வாழ்கின்றார் என்று கொள்ளலாம்.
அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்? நீங்கள் ஒரு செயலை செய்யும் பொழுது அந்த செயல் நம்மை எப்படி பாதிக்கும் என்பதை மனதுக்குள் நினைத்துப் பார்க்கலாம். அந்த செயலில் ஏதேனும் எதிர்பார்ப்பு ஒளிந்திருக்கிறதா என்பதை காணலாம். "அவனுக்கு நான் எவ்வளவோ செஞ்சிருக்கேன். அவன் எனக்காக இதுவரை ஒன்றுமே செஞ்சதில்லை" எனும் உள் மனப் புலம்பல்கள் இருந்தால் உங்கள் அன்பு எதிர்பார்ப்புடன் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
எதையும் பதிலுக்கு தர இயலாத மனிதர்களிடம் அன்பு செலுத்தும் போது அந்த அன்பு வலிமையாகிறது. நிபந்தனை அற்ற அன்பை வழங்க ஈகோவுடன் சேர்த்து கர்வத்தையும் கழற்றி வைத்தோமென்றால் எதிர்பார்ப்புகளற்ற அன்பு மிக எளிதாய் நமக்கு கை வரும். அன்பு கிடைக்கும் இடத்தில் அன்பு செய்வது சாதாரண அன்பு. அன்பு கிடைக்காத இடத்திலும் கூட அன்பு செய்வது புனிதமானது. வெறுப்பை தருபவர்களை கூட அன்பு செய்வது தெய்வீகம் நிறைந்தது.
நிபந்தனை இன்றி அன்பு செய்வோமா!