'அனுபவம் என்பது வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப்பைப் போன்றது' என்ற ஒரு பொன்மொழி உண்டு. அனுபவ பாடங்களை கற்பதற்கு கொஞ்சம் நாட்கள் பிடிக்கும்தான். ஆனால் அதனால் கிடைக்கும் பலன்களைப் பற்றி அறிந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை இப்பதிவில் காண்போம்.
எனது தோழி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். அப்பொழுது சில நாட்களில் கல்லூரியில் இருந்து வரும் பொழுதே மிகவும் சோர்வுற்று வருவார். அவரிடம் ஏன் இவ்வளவு மனச்சோர்வு என்று கேட்டால், அவர் கூறும் பதில் வகுப்பில் ஒரு பாடத்தை நடத்தினால் ஒரு சிலர் ஒரு முறையே நன்றாகப் புரிந்து கொண்டு விடுகிறார்கள். இன்னும் சிலருக்கு இரண்டொரு முறை சொன்னால் போதும் புரிந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் மூன்று நான்கு முறை சொன்னால் கூட புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் .
அவர்களுக்குத் திருப்பித் திருப்பி நான் சொல்லித் தரும்போது முதலிலேயே புரிந்து கொண்டவர்களுக்கு எத்தனை தடவை இதையே கேட்பது என்று சலிப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். புரியாத மாணவர்களோ இன்னும் சொல்லி கொடுத்தாலும் பரவாயில்லை என்று இருக்கிறார்கள். ஆதலால் எனக்கும் இதில் ஒருவித சலிப்பு இருக்கிறது. பேசாமல் இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப்போய் விடலாமா? என்று கூட நினைக்கிறேன் என்று கூறினார்.
அப்படியெல்லாம் சொல்லாதே, ஆசிரியர் பணி அறப்பணி. உன்னைப் போன்றவர்களால்தான் நல்ல மாணவர்களை சமுதாயத்திற்கு உருவாக்க முடியும். உன்னால் முடியாதது எதுமே இல்லை. ஆதலால் வேறு வேலைக்கு மாறலாம் என்பதை விட்டுவிட்டு இதிலே தொடர். உன்னால் பல மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று அனைவரும் கூறினோம். சொல்வது எளிது. ஆனால் செய்வது சிரமமாக இருக்கிறதே என்று கூறினாள்.
பல மாதங்கள் கடந்து முன்புபோல் முணுமுணுப்பதை விடுத்து அமைதியாக இருந்தாள். இன்னும் சொல்லப் போனால் கல்லூரியில் இருந்து வரும் பொழுதே ஒரு உற்சாகத்துடன் வருவதைக் காண முடிந்தது. அப்பொழுதும் அவளிடம் காரணம் கேட்டதற்கு அவள் கூறிய பதில் எனக்கு வியப்பாக இருந்தது.
இப்பொழுது எல்லாம் மாணவ மாணவியர் நான் சொல்வதை கவனித்து நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். கூட அடுத்த முறை சொன்னாலே நன்றாக விளங்கி விடுகிறது. இதனால் எனக்கு பாடம் நடத்துவது எளிதாகி விட்டது. வகுப்பறையில் அன்றன்று நடத்தும் பாடங்களை தொய்வின்றி நடத்தி முடிக்க முடிகிறது. மேலும் மாணவர்களிடமிருந்து அதிகமாக எனக்குத் தகவல்கள் கிடைக்கிறது. அந்தப் புதுப் புது தகவல்களால் என் மனம் உற்சாகம் அடைகிறது. அவர்களுக்கு நான் கற்றுத் தருவதை விட அவர்களிடமிருந்து நான் அதிகமாக கற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதன் பிறகு இப்பொழுது ஓய்வும் பெற்று விட்டார். கல்லூரியில் இருந்ததை விட உறவு, நட்பு என்று அங்கு நடக்கும் விசேஷங்களுக்கு சென்றால் ப்ரொபசர் வருகிறார் என்று எனக்கு ஒரு தனி மரியாதையே முன்பை விட இப்பொழுது அதிகமாகக் கிடைப்பதை காண முடிகிறது. இதுதான் இந்த தொழிலின் மகிமை என்பதை என் அனுபவம் மூலம் நான் தெரிந்து கொண்டேன். அங்கு நடக்கும் திருமணங்களிலோ ஏனைய விசேஷங்களிலோ என்னை பேச அழைத்தால் மேடையில் எனக்கு பேசுவது எளிமையாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு பிளஸ் பாயிண்டாக எனக்கு இப்பொழுது தோன்றுவதால் நான் மிகவும் இந்த ஓய்வு வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறேன் என்று கூறினார். தோழியின் அந்த உற்சாக உள்ளத்தில் நானும் மகிழ்ந்தேன்.
வாழ்க்கையில் அனுபவங்கள் கற்றுத் தருவது…
வாழ வழியை மட்டுமல்ல...
வாழ்வில் வந்து போகும் மாற்றங்களையும்,
மாறிச் செல்லும் மனித குணங்களையும்தான்..!