motivation articles 
Motivation

விடாமுயற்சியே மேன்மேலும் வெற்றியை பெற்றுத்தரும்!

இந்திரா கோபாலன்

தூங்கும்போது காண்பதல்ல கனவு. நம்மை தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு என்றார் அப்துல் கலாம். சாதிப்பதற்கும், சாதிக்காமல் இருப்பதற்கும் இடையிலான பாலமே விடாமுயற்சி. மரத்தில் பழுக்கும் விதைகள் மண்ணில் விழுந்தால்தான் முளைக்கும். முளைத்து மரமாகி விண்ணைத் தொடமுடியும். அடிமேல் அடிபட்டாலும், தோல்விமேல் தோல்வியை எதிர்கொண்டாலும், நமக்குள் இருக்கும் இலட்சியக் கனவு மறைந்துவிடக் கூடாது. ஆயிரம் அடிகளை வாங்கிய கல்லுக்குள் தெரியாது அது நாளை கோபுரத்தின் மேல் இருக்கப்போகிறேன் என்று. பருத்தி செடியிலேயே இருந்துவிட்டால் பலன் ஏதும் இல்லை. அது அடிபட்டு நூலாக மாறியதால்தான் ஆடையாகிறது. இன்னல்களை நினைத்துக் கலக்கினால் முன்னேற்றம் ஏற்படுவதில்லை.

மனம் எனும் சிறையிலேயே கனவுகளையும், இலட்சியங்களையும் கட்டிப்போட்டால் கனவுகள் நினைவுகள் ஆவதில்லை. நமக்கென்று ஒரு தனிப்பாதையை அமைத்து அதில் பயணிப்பது கனவு. இருக்கும் நிலையை மற்றவர்கள் வியக்கும் அளவு மாற்றி அமைக்க நினைப்பது கனவு. ஆனால் அவற்றை அடைய சராசரியான முயற்சி போதாது. துணிவுடனும், நம்பிக்கையுடனும் விடாப்பிடியாக முயன்றால் மட்டுமே கனவுகள் நனவாகும். கனவுகளை எட்டுவதற்கான வல்லமையும் சக்தியும் விடாமுயற்சியில் புதைந்துள்ள.

கடைக்குச் சென்று பொருள் வாங்குவது போன்று வெற்றிகளை எளிதாக பெற்றுவிட முடியாது. வெற்றிக்காகச் செல்லும் பாதையில் ஏராளமான ஏற்றத் தாழ்வுகள், இடர்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் தொடர்ந்து பாதையில் சென்றால் நம் கனவை நனவாக்க முடியும். உலகின் குத்துச் சண்டை வீரர் முகம்மது அலியின் வெற்றிக்கான காரணத்தை குறித்து கேட்டபோது அவர் "நான் பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெறுத்தேன். ஆனால் நானே என்னிடம் இப்போது விட்டு விடாதே. இப்போது துன்பப்பட்டால் வாழ்நாள் முழுவதும் வெற்றியாளராக தன் நிகழலாம்" என்று கூறினேன் என்றார்.

விடாமுயற்சிதான் அவரை பெரிய வீரர் ஆக்கியது. இக்கட்டான நிலையில் பொறுமையை காக்கிறவர்களே வெற்றியடைகிறார்கள். வெளியேறுபவர்கள் தோல்வியை சந்திக்கிறார்கள். பல நேரங்களில் இலக்கை அடைய எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாமல் இருக்கும். விடாமுயற்சி நம் நம்பகத்தன்மையை அதிகரிப்பதால் மற்றவர்களை நம்மை நோக்கித் திரும்பி வைக்கும். கடினமான ஒரு செயலை செய்து முடிக்க விடாமுயற்சியுடன் தொடரும்போது அது எளிதாகிறது.

ஒரு தோல்வி ஏற்பட்டால் மீண்டும் முயற்சி செய்யாமல் இருப்பது நம் பலவீனம். தோல்வி கதவை அடைக்க முயலும்போது விடாமுயற்சி பல புதிய வழிகளைக் திறக்கிறது. வெற்றிக்கான வழியைப் பற்றி தாமஸ் ஆல்வா எடிசன், "வெற்றிக்கு ஒரு சதவீதம் ஊக்கமும், 99 சதவீதம் விடாமுயற்சியும்தான் காரணம்" என்றார். திறமை, துணிவு, கடின உழைப்பு இவற்றுடன் விடாமுயற்சியும் சேரும்போதுதான் வெற்றி கிடைக்கிறது. நம் கனவை அடைய தகுந்த நேரம் என்று ஒன்றில்லை. உழைக்கும் உழைப்பே நேரத்தைத் தருகிறது. விடாமுயற்சியுடன் உழைப்பவர்களிடம்தான் வெற்றி வந்துசேருகிறது. கனவுகளும் மெய்ப்பட காத்திருக்கின்றன. அதை எட்டுவது நம் கையில்தான் உள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT