வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு பயணமாகும். அதில் நாம் அனைவருமே பல சவால்களை எதிர்கொள்கிறோம். இருப்பினும் சில நபர்கள் வாழ்க்கை முழுவதும் எல்லா சூழ்நிலைகளிலும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதை நாம் பார்க்க முடியும். அவர்களால் மட்டும் ஏன் வாழ்க்கையில் முன்னேற முடிவதில்லை?. இவ்வுலகில் ஒவ்வொருவரது சூழ்நிலைகளும் தனித்துவமானது என்றாலும், இறுதிவரை ஒருவருக்கு சிரமங்கள் மட்டுமே ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. இந்த பதிவில் ஒருவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவார் என்பதற்கான முக்கியமான 4 அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.
நோக்கமின்மை: வாழ்க்கையில் எந்த இலக்குகளும் நோக்கமும் இல்லாமல் இருப்பது நீங்கள் இறுதிவரை கஷ்டப்படுவீர்கள் என்பதற்கான முதல் அறிகுறியாகும். இலக்குகளை நிர்ணயிப்பது, கடினமான விஷயங்களை முயற்சிப்பது சவாலானது என்றாலும், அவைதான் உங்களது வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரும். வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லாமல் எதிலுமே நாம் வெற்றி காண முடியாது. எனவே உங்களுக்கான நோக்கங்கள் மற்றும் ஆர்வங்களை ஏற்படுத்திக்கொண்டு, வாழ்க்கையை முன்னேற்ற முயலுங்கள்.
எதிர்மறை எண்ணம்: ஏதோ சில தருணங்களில் எதிர்மறை எண்ணம் வருவது சாதாரணமானதுதான். ஆனால் அனைத்தையுமே எதிர்மறையாக நினைப்பது, உங்களை கஷ்டமான நிலையிலேயே வைத்திருக்கும். எதை செய்வதற்கும் உங்களுக்கு தைரியம் வராது. ஏதேனும் தவறாக மாறிவிடுமோ என்ற பயத்திலேயே, உங்களது வாய்ப்புகள் அனைத்தையும் தவற விட்டுவிடுவீர்கள். எனவே நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்வது, உங்களது வாழ்க்கையின் கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றி, மோசமான சுழற்சியில் இருந்து நீங்கள் விடுபட உதவும்.
நிதி சிக்கல்கள்: தொடர்ச்சியான நிதி சிக்கல்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மனஅழுத்தம், வாய்ப்புகளைத் தவறவிடுதல் மற்றும் மோசமான வாழ்க்கைமுறை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே முறையாக சம்பாதிக்காமல் இருப்பது, முன்னேற்றத்திற்கான திட்டம் இல்லாமல் இருப்பது, அதிக கடன் சுமையைக் கொண்டிருப்பது இறுதிவரை உங்களை போராட்டத்துடன் வைத்திருக்கலாம்.
ஆதரவளிக்கும் உறவுகள் இல்லாமை: ஒருவருக்கு முக்கியமான மற்றும் ஆதரவளிக்கும் உறவுகள் இல்லாமல் போவது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் திருப்தி இல்லாமல் வைத்திருக்கும். இதன் காரணமாக மோசமான உறவுகளில் சிக்கிக்கொண்டு தொடர்ச்சியான போராட்டங்களை சந்திக்க நேரிடலாம். எனவே நண்பர்கள் குடும்பத்தினர் என உங்களுக்கு ஆதரவளிக்கும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை வளமாக்க முயலுங்கள்.
இந்த 4 அறிகுறிகள் உங்களிடம் இருந்தால், இப்போதே இதிலிருந்து மீண்டு வந்து, உங்கள் வாழ்க்கை பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முற்படுங்கள். மேற்கூறிய விஷயங்களை நீங்கள் சரி செய்து கொண்டாலே, வாழ்க்கையைப் பிடித்து வாழ ஆரம்பித்து விடுவீர்கள். ஒரு கட்டத்தில் உங்களது கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்.