உடல் மனத்தின் சொல்லுக்குக் கட்டுப்படுகின்ற பணியாளன். முறையற்ற எண்ணங்கள் உள்ளத்தில் புகுந்தால் நோயினாலும் அறிவினாலும் உடல் தாழ்ந்து போகிறது. அழகிய எண்ணங்கள் மனத்தில் ஆணையாக புறப்படும்போது உடல் இளமையாகிறது.
நோய் பிடித்த எண்ணங்கள் நோய் கொண்ட உடலின் மூலம் வெளிப்படுகின்றன. கெட்ட எண்ணங்கள் நம் நரம்பு மண்டலத்தையே சிதைத்துவிடும். வலிமை வாய்ந்த எண்ணங்கள் உடலில் புத்துணர்வையும் கருணையையும் ஊட்டி உடலுக்கு ஊட்டம் தருகின்றன. நாம் தூய்மையற்ற எண்ணங்கள் விதைத்தால் ரத்தம் நஞ்சாக மாறுகிறது. அசுத்தமான மனம் அசுத்தமான வாழ்வையும் புரையோடிப்போன உடலையும் உண்டாக்குகிறது. எண்ணங்களை மாற்றாமல் மனிதன் எத்தனை கட்டுப்பாட்டுடன் உணவை மேற்கொண்டாலும் எந்த உதவியும் அவனுக்குக் கிடைக்காது. எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருப்பவர்கள் நோய்க்கிருமி தாக்கம் பற்றி பயப்படத் தேவையில்லை.
உடலை ஒரு கட்டுத் திட்டத்திற்குக் கொண்டு வர வேண்டுமானால் உங்கள் எண்ணங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொறாமை வெறுப்பு முதலிய எண்ணங்கள் உடலின் ஆரோக்கியத்தை சூறையாடும். முகத்தில் தெரியும் சுருக்கங்கள் எல்லாம் தவறுகளினாலும் இச்சைகளாலும் கர்வத்தினாலும் உண்டானவை. சுத்தமான காற்றையும் நல்ல சூரிய வெளிச்சத்தையும் தாராளமாக உள்ளே விடும்போது இனிமை சூழ்ந்த ஆரோக்கியமான வீடு அமைவதைப்போல் வலிமையான உடல் பளிச்சென்ற முகம் நிறைவு கொண்ட தோற்றம் எல்லாம் இன்பம் நல்லெண்ணம் நிறைவு என்ற எண்ணங்கள் தாராளமாக உள்ளே செல்வதன் மூலம் விளையும்.அமைதியாக மறையும் அந்தி சூரியனைப்போல் வாழ்ந்தவர்களிடம் வயது மென்மையாக அடங்கி ஒளி விடுகிறது. அவர்கள் வாழ்வைப் போலவே இனிமையாக காலமாவார்கள். உடலின் நோய்களைக் கரைய செய்வதற்கு உற்சாகமான எண்ணத்தைப் போன்ற நல்ல மருத்துவர்கள் கிடையாது.
துக்கம் சோகம் என்ற இருளை ஒழிப்பதில் நல்லெண்ணம் தரும் ஆற்றல்போல் வேறு எதுவும் இல்லை. எதிர்பார்ப்பு சந்தேகம் மற்றும் பொறாமையும் ஆக வாழ்க்கை நடத்துவது நமக்கு நாமே சிறை அமைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். எல்லோரும் வளமுடன் வாழ வேண்டுமென்று எண்ணுவது எல்லோருடனும் உற்சாகமாகப் பழகுவது எல்லோரிடமிருந்து நல்லதைப் பொறுமையுடன் தெரிந்து கொள்வது இப்படிப்பட்ட சுயநலமற்ற எண்ணங்கள்தான் சொர்க்கத்தின் நுழைவாயில்கள்.
ஒவ்வொரு நாளும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டினால் மாசுமறுவற்ற நிறைவு உங்கள் வாழ்வில் தொங்குவதை உணர்வீர்கள்.