"எளிமையாக வாழ்வது ஒன்றும் எளிதல்ல. எளிமை என்பது ஏழ்மையும் அல்ல. ஆடம்பர வாழ்வு பிறர் கண்களை மட்டுமே கவரும். எளிமையான வாழ்வு பிறர் மனதையும் மயக்கும் தன்மை உடையது. ஏழ்மையில் எளிமையாய் வாழும் எண்ணற்ற மக்கள் இருப்பினும் ஏழ்மையில் வாழ்பவர்களை கண்டு எளிமையாய் வாழ்பவர்கள் ஒரு சிலரே"…
அந்த ஒரு சிலரில் மனிதருள் மாமனிதராக எளிமையில் நேர்மையை கடைப்பிடித்து வாழ்ந்த காமராஜர் பற்றி அறிவோம். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தவர் அவர். இன்றும் எளிமையின் உதாரணமாக சொல்லப்படுபவர் அவரே. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் அவரின் நேர்மையுடன் எளிமையும் மக்கள் மனங்களைக் கவர்ந்ததால்தான் அவர் பெருந்தலைவரானார். அவருக்கு இருந்த செல்வாக்கு நாட்டின் சிம்மாசனத்தையே அளிக்க முன்வந்தும் ஏற்க மறுத்த எளிமையாளராக இருந்தவர்.
எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த மற்றொரு மாமனிதர் உலகம் அறிந்த இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்து அறிவியல் நாயகனாக அறியப்பட்ட அப்துல்கலாம். ஒரு முறை கலாம் அவர்கள் தனது குருவான விக்ரம் சாராபாயை புதுடெல்லி ஹோட்டல் ஒன்றில் பார்க்கச் சென்றபோது மற்றவர் எல்லாம் பகட்டான ஆடைகள் அணிந்து காத்திருக்க இவரோ எளிய ஒரு ஆடையை அணிந்துள்ளதாக அதுவும் காமாசோமா ஆடை என்று அவர் தன் சுயசரிதையில் குறிப்பிடுகின்றார்.
இந்த வெற்றியாளர்கள் வழியைப் பின்பற்றினால் நம்மாலும் சாதனை படைக்க முடியும். திறமைகள் அதிகமிருந்தும் தேவையற்ற அற்ப சந்தோஷங்களில் மூழ்கி தங்கள் வாழ்வை வீணடிப்பவர்கள் உண்டு.
அவர் அனைவரும் அறிந்த இசைக்கலைஞர். அவர் இசையமைத்த ஒரே ஒரு பாடலே அவரை புகழ் உச்சத்தில் உட்கார வைத்தது. திடீரென வந்த புகழ் போதையில் மதுவுக்கு அடிமையாகி நிஜ போதையில் வீழ்ந்தார். போதை எனும் அற்ப சந்தோஷத்தில் மூழ்கி வெற்றி எனும் நிலைக்கும் மகிழ்ச்சியை சாதனையை இழந்த அவர் இன்று மற்றவர்களுக்கு ஒரு பாடமாக தன் தோல்வி பற்றி பகிர்ந்து வருகிறார்.
அற்ப சந்தோஷங்களில் ஈடுபடும் அளவுக்கு அதிகமான நுகர்வோர் கலாச்சாரமும் நமது வெற்றிக்கு நிச்சயம் தடைகளாக இருப்பவை ஆகிறது. தொடர்ந்து பகட்டான விஷயங்களில் கவனம் செலுத்தும் போது நமது லட்சியம் பின் தள்ளப்படுகிறது. அற்ப சந்தோஷத்தின் மோகம் நம்மை மற்ற எதிலும் கவனம் செலுத்த முடியாதபடி செய்து விடுகிறது. கடைசி வரையில் நமது தனித்தன்மையை வெளிப்படுத்த நேரமும் கிடைக்காது.
தற்போது நிறைய இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் அல்லது அரசியல்வாதிகளுக்கு நேரத்தை ஒதுக்கி கொடி கட்டி பாலாபிஷேகம் செய்து அற்ப சந்தோஷங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்கள் பெறப்போவதை விட இழப்பதுதான் அதிகம்.
அறையில் குளிர்சாதன வசதி இருக்கிறது என்பதற்காக அதிலேயே சொகுசாக நீண்ட நேரம் கழித்தால் சாதனை செய்ய முடியாது. அற்ப சந்தோஷத்திற்கான நேரம் நமது விலைமதிப்பற்ற நேரத்தை விழுங்கி விடுகிறது. இறுதியில் நாம் உணரும்போது காலம் கடந்து போகிறது. நமது சாதனைக்கான அடையாளத்தை நம்மால் பதிவு செய்யவே முடியாது.
வாழ்க்கையில் அடிப்படை வசதிகள் தேவைதான். மறுக்கவில்லை. ஆனால் அந்த வசதிகளே நம் முன்னேற்றத்திற்கும் இலட்சியத்திற்கும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதில் கவனம் வேண்டும்.