மனிதனின் வெற்றிகளை அனுபவிக்க அவனுக்கு கஷ்டங்கள் தேவை என்ற கருத்தை ஏ.பி.ஜே அப்துல்கலாம் பின்பற்றினார். வாழ்வின் பல கட்டங்களில் இடர்களை நேரடியாக நாம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். எந்தச் சிக்கலும் சோதனையும், வேதனையும் இடரும், தடையும், தடங்கலும், கஷ்டமும் இல்லாமல் யாரும் வாழ்வதில்லை. நாங்கள் சந்திக்கும் இடர்களை அறிந்து அவற்றை திறம்பட வெற்றியாளர்கள் எதிர்கொள்கின்றனர். அந்த இடர்களை வெற்றிக்கான வாய்ப்பாகவே மாற்றியும் விடுகின்றனர். இடர்களைக் கண்டு பயந்து ஒதுங்கி விடுகிறவர்கள் சிறந்த காரியங்களை சாதிக்க தவறிவிடுகின்றனர். கடினமான பாதையில் செல்லும்போது கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சி அளவிட முடியாதது.
எல்லோரும் இடர்களையும் அபாயங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்வதை விரும்பி வரவேற் பதில்லை. பாதுகாப்பான சிக்கலற்ற தெளிவான பயணத்தை மனம் விரும்புகிறது. இடர்களை கண்டு பதை பதைப்பவர்கள் கண்ணுக்கு தெரியாதவற்றைக் கண்டு அஞ்சுகின்றனர். தங்களின் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளிவர தயங்குகின்றனர். கடின செயல்களை செய்வதிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர். அவர்களின் நடவடிக்கைகளில் மற்றவர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் மற்றவர்கள் இவர்கள் மீது குறை கூறாமல் இருப்பதுமே இவர்களின் நோக்கமாக மாறுகிறது.
இடர்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு செயலாற்றுபவர்களின் செயல் திறன் வித்தியாசமாக இருக்கிறது. தங்களின் எண்ண ஓட்டத்தையும், மன உறுதியையும், திறன்களையும் நம்பி செயலாற்றி பெரிய காரியங்களை சாதித்து விடுகின்றனர். இடர்களை நேரடியாக எதிர்கொண்டு செயல்படுகிறவர்கள் வெற்றிகள் மட்டும் பெறுவதில்லை. தோல்விகளையும் சந்திக்கத்தான் செய்கின்றனர் சந்திக்கும் தோல்வியால் இவர்கள் நிலை குழைவதில்லை. தோல்விகளை வெற்றியின் படிக்கற்களாக மாற்றி முன் செல்கின்றனர். மற்றவர்கள் செல்லாத உயரங்களை எட்டியும் விடுகின்றனர்.
சராசரியில் மனநிறைவு கொள்கிறவர்கள் இடர்களை எதிர்கொள்ள தயங்குகின்றனர். பெரும்பாலான வெற்றியாளர்கள் சராசரியாளர்களாகப் பெயர் எடுத்ததில்லை. சராசரியையும் தாண்டி உயர்ந்தவற்றை எட்டியதாலேயே அவர்கள் பெயர் பெற்று விளங்குகின்றனர். விதிமுறைகளை மீறி எதிர்படும் தடைகளைத் தாண்டி சிறந்த செயல்களை செய்பவர்களையே நாம் போற்றி புகழ்கிறோம். பதக்கங்கள் வழங்குகிறோம். உங்கள் முழு திறன்களை பயன்படுத்தி இடர்களை நேரடியாக எதிர்கொண்டு செயல்படும்போது நீங்களும் வெற்றியாளராக மாறுவீர்கள்.
இடர்களை எதிர்கொள்ளும் துணிவு உள்ள போதுதான் அதற்கான தயாரிப்பில் ஈடுபட முடியும். இடர்களை எதிர்த்து வெல்ல தேவையான செயல்களில் ஈடுபடவும் முடியும். இடர்களைக் கண்டு அஞ்சுபவர்கள் வெற்றிக்கான முயற்சியிலும் பின்தங்கி விடுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இடர்களை எதிர்கொள்ளும்போது முன்னோக்கி செல்வதே சிறந்த வழியாக இருக்கும். தகுந்த தயாரிப்புடன் உறுதியாக செயல்படும்போது வெற்றிக்கான புது பாதைகள் உருவாகும்.