ஒருமுறை ரோட்டில் நடந்து செல்லும்பொழுது பழக்கடைக்காரருக்கும் இனிப்புக்கடை காரருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. என்னவென்று விசாரித்துப் பார்த்தால் ஸ்வீட் கடைக்காரர் கூறுகிறார், அந்தப் பழக்கடைக்காரர் வருவதற்கு முன்பு வரை எனக்கு வியாபாரம் நல்ல சூடு பிடித்திருந்தது. அவர் வந்த பிறகுதான் எல்லோரும் அவரிடமே பழம் வாங்கிக் கொண்டு, என்னிடம் யாரும் வருவதில்லை. இதனால் என் வியாபாரம் நஷ்டம் அடைகிறது என்று கூறிக் கொண்டிருந்தார்.
அதைக் கேள்விப்பட்ட நாங்கள் அது எப்படி இரண்டு பேரும் ஒரே வியாபாரம் கூட செய்யவில்லை. வித்தியாசமான பொருட்கள் வியாபாரம் செய்தும் இப்படி கூறுகிறார்களே என்று நினைத்துக் கொண்டுசென்றோம். ஒரு சிலர் உன் திறமையை வியாபாரத்தில் காட்டு. வீண் சண்டையில் மூழ்காதே! என்று புத்திமதி கூறிவிட்டுச் சென்றார்கள். இப்படியும் நடக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.
ஆலன் பெர்க் என்பவர் மிகச்சிறந்த ரொட்டிக் கடையை ஆரம்பிக்க நினைத்தார். ஏற்கனவே ரொட்டிக் கடை நடத்திக் கொண்டிருந்த ரஃபேல் நார்ட்டன் என்பவரிடம் சென்றார்.
இதே தெருவில் நான் ரொட்டிக்கடை ஆரம்பிக்கப் போகிறேன். உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை உள்ளதா? என்று கேட்டார். நார்ட்டன் 'ஏன் என்னிடம் அடிக்கடிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு உரிமை இருக்கிறது. திறமை இருந்தால், தாராளமாக நடத்தலாமே!' என்றார்.
ஆலன் அந்த இடத்தில் இருந்து சென்ற பிறகு நார்ட்டனின் நண்பர்கள் ஏன் நீங்கள் மறுத்திருக்கலாமே என்று கேட்டனர். அவரோ அவருக்கு சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும். அவருக்கு உரிமை இருக்கிறது. திறமையை பயன்படுத்தி அவரும் ரொட்டிக்கடை நடத்துவதை தடுக்க நான் யார்?
நண்பர்கள் வாயடைத்துப் போயினர்.
பிற்காலத்தில் ஆலன்பெர்க்கும், ரஃபேல் நார்ட்டனும் மிகப்பெரிய போட்டியாளர்களாகவும், அதே நேரத்தில் மிகச் சிறந்த நண்பர்களாகவும் இருந்தனர்.
நாம் பள்ளியில் படிக்கும்பொழுது கூட ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கொண்டு படியுங்கள். ஆனால் பொறாமைப் படாதீர்கள். திறமையால் எதையும் வெல்லலாம் என்றுதான் கூறுவார்கள். இங்கே நடந்ததும் அதுதான்.
வெற்றிக்கு வேண்டிய
திறமை
நம்மிடம்தான்
என்பதை உணர்ந்தால்
எந்த ஒன்றிலும்
அதுவே சாத்தியம்!