Motivation image
Motivation image Image credit - pixabay
Motivation

அழுதாலும் வராது கடந்த காலமும், வெற்றியும்!

சேலம் சுபா

"Work hard. Don't quit. Be appreciative, be thankful, be grateful, be respectful. Also, never whine, never complain. And always, for crying out loud, keep a sense of humor".

கடுமையாக உழையுங்கள். விட்டுவிடாதீர்கள். நன்றியுள்ளவராகவும், மரியாதையுடனும் இருங்கள். சிணுங்காமல், புகார் செய்யாமல் இருங்கள். வாய்விட்டு அழுவதற்குப் பதில் எப்பொழுதும் நகைச்சுவையுணர்வுடன் இருங்கள்."-- Michael Keaton.

தனது கடுமையான உழைப்பினாலும் நகைச்சுவை நிறைந்த நடிப்புத் திறனாலும் பெரும் புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் மைக்கேல் கீட்டன் வெற்றி குறித்து சொன்ன மொழி இது.

வாழ்வில் வெற்றி பெற்று மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பவர்கள் வெகு சிலரே அனைவருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் இருந்தாலும் இடைவிடாமல் உழைக்கும் திறன் அவர்களிடம் இல்லாதது அவர்களின் வெற்றியைத் தடுக்கும்.

பலரும்  திறமைகள் இருந்தாலும் தாங்கள் அடைந்த வெற்றி போதும் என்ற நினைப்பில் அதற்கு மேல் முயற்சி என்று ஒன்றை செய்யாமல் இருந்த இடத்திலேயே தேக்கமடைந்து விடுவதும் வெற்றி பெறுவதற்கு தடையாக உள்ளது.  ஆனால் பெற்ற வெற்றிகளை திரும்பிப் பாராமல் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் சிலர் மட்டுமே உலகத்தின் பார்வையில் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். முக்கியமாக எந்த ஒரு தடை இருந்தாலும் அவற்றைப் பெரிதாக நினைத்துப் புலம்பாமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக எண்ணி கடுமையாக உழைப்பதுடன் அடுத்தவரைப் பற்றி  சிந்திக்காமல் முன்னேறுபவர்களின் வெற்றியே  அடுத்தவர்களின் பேசுபொருளாகிறது.

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அதேபோல் நகைச்சுவை மாமணியாக இருந்தவர் என். எஸ். கிருஷ்ணன் ஒரு கட்டத்தில் இருவர் மீதும் விழுந்த குற்றச்சாட்டு ஒன்றினால் சிறை செல்ல நேர்ந்தது. இதில் மனவலிமையுடன் சிறையிலிருந்து வந்ததும் உழைப்பை நம்பி மீண்டும் நகைச்சுவையுடன் நடித்து  தனக்கான இடத்தை தக்கவைத்து மக்களிடையே புகழ் பெற்றார் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். ஆனால் பல திறமைகள் இருந்தும் சிறை சென்றதை ஏற்கும் மனமின்றி தனக்குள்ளேயே மருகி வேதனைப்பட்டு இறுதியில் தனது சுயத்தை இழந்து மறைந்தவர் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். இவர்கள் போன்ற பல உதாரண புருஷர்கள் உள்ளனர்.

வாய்விட்டு அழுவதால்  மன அழுத்தம் குறையும். ஆனால் விடாமல் அழுதால் மட்டும் சென்ற காலம் திரும்பி வரப்போகிறதா? அல்லது இழந்த வெற்றிகளை பெற முடியுமா? இதுவே நகைச்சுவை உணர்வுடன் ஒரு செயலை அணுகிப் பாருங்கள். முதல் முறை வெற்றி கிடைக்காவிடினும் நிச்சயம் தெளிந்த மனதுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம் தேடி வரும்.

தமிழர்களின் அடையாளமாக விளங்கிய மரம் எது தெரியுமா?

ஆன்மீகக் கவிதை - தமிழ் வளர்த்த சமயக் குரவர்!

அதிக மனக்கவலையின் பரிசு உடல் பருமன்; எப்படித் தெரியுமா?

The Color Code: A Child’s Perspective on Pink and Blue!

குடும்பத்தின் மகிழ்ச்சியில் பெண்களின் அளப்பரிய பங்கு!

SCROLL FOR NEXT