விவேகானந்தர்  
Motivation

சும்மாயிருக்க நேரமில்லை. வெற்றிக்கு விவேகானந்தர் சொன்ன வழி!

சேலம் சுபா


"முதலில் உள்ளுறையும் ஆத்மாவின் பலத்தைத் தட்டியெழுப்புங்கள். பிறகு பொதுமக்களின் நம்பிக்கையை உங்களால் முடிந்த அளவு பெறும் வகையில், முதலில் அவர்களின் உணவிற்கு வழி செய்து, பின் மதத்தைப் போதியுங்கள். சும்மாயிருக்க நேரமில்லை- - மரணம் எப்போது முந்திக்கொள்ளும் என்பதை யாரறிவார்?" -Swami Vivekananda. 

இன்று சுவாமி விவேகானந்தர் ஜீவசமாதி அடைந்த நாள் என்பதால் அவர் சொன்ன இந்தக் கருத்தைப் பார்ப்போம்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மகான் வள்ளலார் பற்றி அறிவோம். தனது சன்மார்க்க நெறிமுறையை சாதாரணமாக அவர் மக்களிடையே புகுத்தவில்லை. எந்த ஒருவரும் "இது என் வழி நீங்களும் இதைப் பின்பற்றுங்கள்' என அழைத்தால் நிச்சயமாக மக்கள் மறுத்து ஒதுங்குவார்கள். ஆனால் வள்ளலார் பசியோடு எந்தவொரு உயிரும் இருக்கக்கூடாது என்பதை உறுதியான கொள்கையாக கடைப்பிடித்து வாழ்ந்தார். அணையா அடுப்பை ஏற்றி பசி என வந்தவரெல்லாம் வயிறு நிறைய உணவளித்த பின்னே மனம் நிறைய நல்ல கருத்துக்களை புகுத்தி தன்னை பின்பற்ற வைத்தார்.

முதலில் தனக்குள்ளிருக்கும் ஆத்மாவின் எண்ணங்களை அறிந்து அதன் பலத்தைப் பெருக்கி அதன் பின் தன்னை நாடி வருபவர்களின் பசி போக்கி அதன் பின்னர் தங்களது கொள்கைகளை பரப்பி மக்களிடையே வெற்றியுடன் வலம் வந்தவர்களில் மகான்கள் மட்டுமல்ல அரசியல் வாதிகளும் அடங்குவர். மேலும் நிமிடங்களை வீணாக்காமல் நித்தம் பரப்புரைகளை மேற்கொண்டும் நற்செயல்களை செய்தும் மக்கள் மனதில் நிலைத்த வெற்றி பெற்றவர்கள் இவர்கள்.

அந்த ஊரிலிருந்த பிரபலம் ஒருவர். நல்ல வசதி. ஏழு தலைமுறைக்கு சேர்ந்த சொத்து. உட்கார்ந்து இடத்தில் ராஜா போல் வாழலாம். ஆனால் இவரோ தினம்தோறும் கோவில் அல்லது யாருமறியாத இடங்களுக்கு பயணம் செல்வது. பின் அதைப்பற்றி காணொலி இடுவது என எப்போதும் பிஸியாகவே இருப்பார். அந்த ஊரில் ஏதேனும் விபரங்கள் வேண்டுமெனில் இவரையே நாடுவார்கள். அந்த அளவுக்கு விபரங்களை சேகரித்து வைத்திருந்தார். பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் இவரை திட்டவும் செய்தனர்." சொத்து கிடக்குது இந்த மனுஷன் சும்மா சுத்தித் திரிஞ்சு பேருக்கு அலையறாரு "என்று காது படவே பேசுவர்.

இவரின் உற்ற நண்பர் இதைப் பற்றி இவரின் காதில் போட அதற்கு அவர் சொன்னது இது "பேசிவிட்டு போகட்டும். சும்மாயிருந்து சுவடில்லாம போக எனக்கு விருப்பமில்லை. கொரானா டைம்ல எத்தனை பேர் செத்தாங்க? அவங்களுக்குத் தெரியுமா? நாம இருக்க மாட்டோம்னு? நம் மரணம் என்னிக்குனு நமக்குத் தெரியாது. ஆனால் அதற்குள் நமக்குத் தெரிஞ்ச நாலு விஷயத்தை இங்கே தந்துட்டுப் போறதுதான் நமக்கு வெற்றி."

இவரைப் பார்த்து மனதார பாராட்டிவிட்டு "உன்னை நண்பனாக அடைவதற்கு உண்மையில் நான் கொடுத்து வைக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு சென்றார் அந்த நண்பர்.

ஆம். நமது மரணம் எப்போது நிகழும் என்பது ரகசியம். ஆனால் நம்மால் என்ன முடியும் இந்த சமூகத்திற்கு நமது தனித் திறமைகளினால் என்ன நன்மைகள் தர முடியும் என்பது நமக்குத் தெரியும். கூடவே நேரமும் காலமும் சென்றால் திரும்ப வராது என்பதும் நமக்கு தெரியும். ஆகவே சும்மா இருந்து நேரத்தை கடத்தாமல் நமக்குத் தெரிந்த தனித்திறமையை  வெளிப்படுத்தி மக்களைக் கவர்வதில்தான் அடங்கி இருக்கிறது நமது வெற்றி.

மதத்தை பின்புலமாக வைத்து விவேகானந்தர் இதைச்சொல்லி இருந்தாலும் வெற்றிக்கும் இதுவே அடிப்படையாகிறது என்பதை புரிந்து கொண்டு செயல்படுவோம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT