மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம். இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான். மனிதன் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் அவன் வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகும் திருப்புமுனை. அதேபோல் இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம்பெற்றுவிடும்.
1: இலக்கு நிர்ணயித்தல்
உங்கள் இலக்குகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுதுங்கள். இலக்குகளை எழுதிப்பார்த்து, அவற்றை அடிக்கடி படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அப்படி மனதில் பதிய வைத்தவர்களில் 80 சதவிகிதம் பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
2: திட்டமிடல்
திட்டமிடத் தவறுவது, தோல்விக்குத் திட்டமிடுவதற்கு ஒப்பாகும். எனவே திட்டமிடல் அவசியம். அப்படி நீங்கள் இலக்குகளை அடைய வகுக்கும் திட்டங்கள் சிறியதாக இருக்கும்படியும், எளிதில் செயல்படுத்தக் கூடிய வகையிலும் வகுத்துக்கொள்ள வேண்டும்.
3: காரணங்களை எழுதுங்கள்
உங்களுடைய இலக்குகளுக்கான காரணங்களை எழுதுங்கள். அந்த இலக்குகளை அடைவதற்கு உங்களை உந்தும் காரணிகளையும் எழுதி வையுங்கள். அவை உங்கள் மனதிற்கு ஊக்கக் கிளர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பவையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
4: நேர்மறை எண்ணங்கள்
நேர்மறையான எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்கும் பொருட்டு பல புதிய நேர்மறை வாக்கியங்களை உங்களுக்கென்று உருவாக்கி எழுதி வையுங்கள். ‘என்னால் முடியும்’ (I Can), ‘என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்’ (If not me then Who?), ‘ஒரு வாரத்திற்குள் முடித்துவிடுவேன்’ போன்ற நேர்மறையான எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்கிக் கொண்டு தன்னம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய பல புதிய நேர்மறையான வாக்கியங்களை உங்களுக்காகவே உருவாக்கிக் கொள்ளுங்கள்.
5: உருவகம் செய்யுங்கள்
எப்போதும் உங்கள் மனதில் தோன்றும் இலக்குகளை உருவகம் செய்யப் பழகிக்கொள்ளுங்கள். தெளிவாகவும், எளிமையாகவும் கூறினால் கனவு காணுங்கள். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அது குறித்து அடிக்கடி மனதில் கற்பனை செய்யுங்கள்.