Inspirational people 
Motivation

தோப்பாகும் தனித்தனி மரங்கள் - யார் இவர்கள்?

பிரபு சங்கர்

நான் பயணித்த பேருந்து தயங்கித் தயங்கிச் சென்றது. மற்றவர்களைப்போல நானும் பேருந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். முன்னால் எதனாலோ போக்குவரத்துத் தடங்கல்.

அங்கே, அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் போக்குவரத்தை சீராக்க முயன்று கொண்டிருந்தார். தொப்பி, கைகளில் வெள்ளை நிற உறை அணிந்திருந்த அவர் அங்கும் இங்குமாக ஓடுவதும், எதிர்ப்புறத்தில் வரும் வாகனங்களை கைகாட்டி முறைப்படுத்தி ஒதுக்கி, பிற வாகனங்களுக்கு இடையூறு இல்லாதவாறு அனுப்பிவைப்பதுமாக இருந்தார். தனக்குத் தாமதமாகிவிட்டதே என்ற எரிச்சலில் காது கூசும்படி வாகன ஒலி எழுப்பிய சில வாகன ஓட்டிகளிடம் சென்று, இதமாக, சிக்கல் ஏற்பட்டிருப்பதை விளக்கி அமைதி காக்கும்படி அவர் கேட்டுக்கொண்டது வியப்பாகவே இருந்தது.

"அவர் ஒரு தன்னார்வத் தொண்டர் சார்," என்று தகவல் தந்தார் என்னுடன் பயணம் செய்த ஒருவர். "அவரை நான் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். இங்கேதான் அவர் வசிக்கிறார். இந்தப் பகுதியிலேயே வெவ்வேறு இடங்களில் இதுபோல, போக்குவரத்தை சீர் செய்து போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுகிறார்," என்றார் அவர்.

எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனை மற்றும் எதிரே இருக்கும் தாய்-சேய் நல மருத்துவமனை முன்னால் சாலையில் இளம் பெண்கள் இருவர் நோயாளிகள் பாதுகாப்பாக இருபுறமும் போய்வர உதவிக் கொண்டிருந்தார்கள். சாலையின் இரு புறமும் வரும் வாகனங்களை மறித்து நிறுத்துகிறார்கள். பொறுமையிழக்கும் வாகன ஓட்டிகள் பலத்த ஹார்ன் ஒலித்தால் அவர்களிடம் போய், "கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்கள் குடும்பத்து உறுப்பினர்களாக இவர்களை பாவித்துக் கொள்ளுங்கள்," என்று தன்மையாகக் கேட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் எந்த சமூக சேவை நிறுவனத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை என்பது வியப்பளித்தத் தகவல்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் கையில் அச்சடித்த விண்ணப்பத்தை வைத்துக்கொண்டு, பிறரிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார். புரியாததலும், தெரியாததாலும், உதவ மனசில்லாததாலும், உதவப் போய் தன் வேலை ஆகாமல் போய்விடுமோ என்ற கவலையாலும் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. 

அப்போது அவரருகே ஒருவர் வந்தார், விவரம் கேட்டார். ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். பிறகு விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்டிருக்கும் தகவல்களை தானே பூர்த்தி செய்தார். விண்ணப்பதாரருக்கு அந்த விவரம் ஒவ்வொன்றையும் விளக்கிக் கூறினார். பிறகு குறிப்பிட்ட அலுவலரிடம் அவரை அழைத்துச் சென்று படிவத்தை சமர்ப்பித்தார். இனி விண்ணப்பதாரர் சற்று நேரம் காத்திருந்து வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிவிடலாம். 

உதவிய அன்பரிடம் விசாரித்தபோது, "நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன். சும்மா இருப்பானேன் என்று இதுபோல சேவையாற்றுகிறேன். எந்த வகையிலும் இந்த அரசு அலுவலர்கள் பணியில் நான் தலையிடுவதேயில்லை. தேவைப்படுவோருக்கு உதவி செய்து, அவர்கள் இந்த அலுவலக நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறவும் நான் உதவுகிறேன், அவ்வளவுதான்," என்றார் அவர்.

சென்னை மெரீனா கடற்கரையில் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்பவர்கள், சாலையில் விபத்தால் அடிபட்டவர்களுக்கு உடனடி உதவிகள் செய்பவர்கள், பழுதுபட்ட, மிகப் புராதனக் கோயில்களில் திருப்பணிகள் செய்பவர்கள், ஆதரவற்ற வயது முதிர்ந்தவர்களுக்கு உதவுபவர்கள், ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பாடங்கள் சொல்லித் தருபவர்கள், உடல் நலிந்தவர்களுக்காக தெருக்குழாயில் பம்ப் அடித்து நீர் பிடித்துத் தருபவர்கள், அஞ்சல் அலுவலகங்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு கடிதம் எழுதியோ, மணி ஆர்டர் படிவத்தினைப் பூர்த்தி செய்தோ கொடுப்பவர்கள், வங்கியில் பொதுமக்களுக்கு உதவுபவர்கள், சாலைக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் ஏதாவது எங்காவது உடைத்துக் கொண்டு அதனால் நீர் பெருக்கம் ஏற்பட்டிருந்தால், உரிய அரசு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிப்பவர்கள் என்று மக்களின் அன்றாட நடைமுறையில் உதவிகளைச் செய்பவர்கள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறார்கள். 

இப்படி ஆங்காங்கே தனி நபர்களாக பல்வேறு சேவைகள் செய்து வரும் இந்த சமுதாயத் தொண்டர்கள் அந்தந்தப் பகுதியைப் பொறுத்தவரை தனித்தனி சேவை மரங்கள்தான். ஆனால் இவர்கள் தம் சேவை மனப்பான்மையால், ஒரு தோப்பாகவே இயங்கி வருகிறார்கள். 

இவர்களைப் பார்த்து இளகிய மனம் கொண்ட பலர் பொதுச் சேவைக்குத் தம்மை அர்ப்பணிக்க முன்வருவார்கள் என்பது நிச்சயம். 

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

நீங்கள் சாப்பிடுவது தூய்மையான கோதுமையே இல்லை… உண்மைய முதலில் தெரிஞ்சுக்கோங்க!

நீங்கள் தினமும் Mouth wash பயன்படுத்துபவரா? அச்சச்சோ ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT