"உயர்தரமான எண்ணங்களை நினைத்து வருவதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட உயர்ந்த நிலையை நீங்கள் அடைய முடியாது" இது பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli) என்ற அறிஞரின் கூற்று.
வாழ்க்கையில் முன்னேறி மற்றவர்களின் நன்மதிப்பை பெற விரும்புபவர்கள் மனித இனத்திற்கு பயன் தரும் மாபெரும் திட்டங்களை பற்றிய எண்ணங்களை மனம் எனும் திரையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சாதாரண எண்ணங்களை நினைத்து வருபவன் சாதாரண மனிதனாகத்தான் உருவெடுப்பான்.
பொதுநலமாக சிந்திக்காமல் தன்னுடைய சுயநலத்தை பற்றி எப்போதும் நினைத்து வருபவன் மற்றவர்களை கவர முடியாது. மாபெரும் எண்ணங்களை நினைத்து வருவதை வழக்கமாக ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் மட்டும் அல்ல உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் வெற்றியே கிடைக்கும். எப்படி தெரியுமா? நீங்கள் படித்து திறமைகளை அடைந்து ஒரு பெரிய தொழிற்சாலையைக் கட்டி நிறைய பேர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்படி நினைத்து உங்கள் எண்ணத்தை செயலாற்றுகிறீர்கள் என்றால் அதன் மூலம் பயன் பெறும் இளைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உங்களை மனதார பாராட்டுவார்கள்.
உங்களிடம் இருக்கும் பணம் நகைகளை ஒருவனால் சுலபமாக திருடிச் சென்று விட முடியும். உங்களை ஏமாற்றி உங்களிடம் இருக்கும் சொத்துக்களை உறவினர் அபகரித்து சென்றுவிட முடியும். ஆனால் உங்களுடைய உள்ளத்தில் பிறக்கும் எண்ணங்களை யாராலும் திருடி சென்று விட முடியாது. அது உங்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று.
பணம், சொத்து போன்றவைகளை இழந்தாலும் மன உறுதியுடன் நல்ல பலன் தரும் எண்ணங்களை நினைத்து அவைகளை செயல்படுத்த தீவிரமாக முயற்சி செய்தால் இழந்தவைகளை விட இன்னும் அதிக அளவில் சம்பாதிக்கும் வாய்ப்பு வரும்.
பணக்காரராக இருக்க யாருக்குத்தான் ஆசையில்லை? ஆனால் முடியுமா என்ற சந்தேகத்தை ஒதுக்கி, அதை நோக்கிய எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். முதலில் பணம் தரும் சௌகரியமான வாழ்க்கையை தன் மனதில் முதலில் வாழ்ந்து வரவேண்டும் அதற்குப் பின்னால் விரும்பியதை அடைய ஒரு சிறந்த திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். அதன் பின் "செய் அல்லது செத்துமடி" என்ற முனைப்போடு தன் திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி செய்தால் கிட்டும் வெற்றி.
எண்ணங்களை யாராலும் சிறையில் அடைக்க முடியாது. இப்படிப்பட்ட எண்ணங்களை மட்டுமே நினைக்க வேண்டும் என்று யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனாலும் சில எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
ஆம். எந்த எண்ணங்கள் நம்முடைய வருத்தத்தை அதிகரிக்கச் செய்கிறதோ அல்லது தாழ்வு மனப்பான்மையை கூட்டுகிறதோ அந்த எண்ணங்கள் நம்மிடமுள்ள நம்பிக்கையை அழித்து விடுகிறது. நமக்குள் இருக்கும் திறமையை முழுக்க உபயோகிக்க முடியாதபடி செய்து விடுவதும் இந்த எண்ணங்கள்தான். கெடுதல் தரும் எனத் தெரிந்தும் அதை நினைத்தேதான் தீர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
ஆகவே கெடுதலான எண்ணங்கள் தோன்றினால் அதை அப்படியே தள்ளிவிட்டு அப்படிப்பட்ட எண்ணங்கள் நம் உள்ளத்தில் நுழையாதபடி கவனமாக இருக்க வேண்டும்.
"மனிதன் என்ன பேசுகிறான், படிக்கிறான் தெரிந்து கொள்கிறான் என்பதை விட அவன் என்ன சிந்திக்கிறான் என்பதை பொறுத்துதான் அவன் எதிர்காலம் அமையும்" என்ற ஒரு கருத்தை மனோவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது நாம் நினைக்கும் எண்ணங்களின் தரத்தை பொறுத்துதான் நம்முடைய வெற்றியும் வாழ்க்கையும் அமையும். ஆகவே நல்ல எண்ணங்களை நினைப்போம்… வெற்றி பெறுவோம்!