ஒருவர் வாழ்வில் முன்னேறி வெற்றி அடைவதைக் கண்டு பெருமை கொள்பவர்களும் உண்டு. அதே நேரம் அவர்களின் வெற்றியை பொறாமை எண்ணத்துடன் காண்பவர்களும் உண்டு. இந்த இரு வகையான மனிதர்களை பற்றித் தான் இன்றையப் பதிவில் காணப் போகிறோம்.
நம் நாட்டில் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை தான் அதிகம். சொந்தத் தொழில் தொடங்கி முன்னேறுபவர்களும், தங்களின் திறமையை நம்பி வெற்றி கண்டவர்களும் குறைவு தான். இருப்பினும், இவர்களின் வெற்றி சாதாரண ஒன்றாக இருக்காது. வெற்றிக்காக இவர்கள் கடுமையாக உழைத்திருப்பார்கள். பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருப்பார்கள்.
எத்தனை நாட்களுக்கு தான் வேலைக்கே செல்வது, நாமும் ஒரு தொழில் தொடங்கி முன்னேறலாம் என்ற எண்ணம் பலருக்கும் வருகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயலில் நிகழ்த்திக் காட்டுபவர்கள் தான் வெற்றி அடைகின்றனர். இப்படி வெற்றியடையும் சிலரை நினைத்து பெருமைப்படும் இரண்டு பேர்களில் ஒருவர் பெற்றோர், மற்றொருவர் ஆசிரியர்.
பெற்றோர்:
மகன் அல்லது மகளின் வளர்ச்சியைத் தான் பெற்றோர் எப்போதும் விரும்புவர். நாம் எட்டாத உயரத்தை தன் பிள்ளைகள் எட்ட விரும்புவது தான் பெற்றோர்களின் எண்ணம். கடின உழைப்பால் முன்னேறும் பிள்ளைகளைக் கண்டு பெருமைப்படுவது மட்டுமின்றி, நட்பு வட்டாரங்கள் மற்றும் உறவினர்களிடத்தில் பெருமையாக சொல்லி மகிழ்வார்கள்.
ஆசிரியர்:
தன்னுடைய மாணவனின் வளர்ச்சியைக் கண்ட ஒரு ஆசிரியர், இவன் என்னுடைய மாணவன் என்று மற்றவர்களிடம் பெருமையாக சொல்லுவார். ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் குரு மிக முக்கிய அங்கமாக இருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஒரு விஷயத்தில் நல்லவை இருந்தால் கெடுதலும் இருக்கும் என்பது போல, நம் வெற்றியைக் கண்டு பொறாமைப்படும் இரண்டு பேர்களில் ஒருவர் நம் உறவினர்கள், மற்றொருவர் நம்முடன் வேலை செய்யும் நபர்கள்.
உறவினர்கள்:
உறவுகள் உன்னதமானவை தான். இருப்பினும் சில உறவுக்காரர்கள் நாம் எப்போது வீழ்வோம் என்று தான் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் முன் நாம் உயர்நிலையை அடையும் போது நிச்சயமாக பொறாமைப்படுவார்கள். எப்படி இவன் இந்த நிலைமைக்கு வந்தான் என்று மனதில் நினைத்துக் கொண்டு, வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள்.
நம்முடன் வேலை செய்யும் நபர்கள்:
நம்முடன் தானே இவனும் வேலை செய்தான். இவனுக்கு மட்டும் எப்படி உயர் பதவி கிடைத்தது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதுடன், உங்கள் மீது பொறாமையும் கொள்வார்கள்.
மற்றவர்களின் பார்வையை நாம் கவனிக்கத் தொடங்கினால், நமது இலக்கின் மீது கவனச் சிதறல் ஏற்பட்டு விடும். நம் மீது யார் பொறாமை கொண்டாலும் எதையும் கண்டு கொள்ளாமல், உங்கள் வெற்றிப் பயணத்தின் அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருங்கள்.