Try until you find a sign of your own! 
Motivation

உனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்!

பொ.பாலாஜிகணேஷ்

முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று கூறுவார்கள். முடியாதது என்னும் சொல்லில்கூட முடி என்னும் சொல் உள்ளது. இவ்வுலகில் முயற்சியை விட வேறு எதுவும் சிறந்த இடத்தைப் பெற முடியாது. நம்மால் இது நிச்சயமாக செய்ய முடியாது என்று கூறும் காரியத்தைக்கூட மீண்டும் மீண்டும் விடா முயற்சியுடன் செய்தால், ஒரு நாள் கட்டாயமாக வெற்றி கிடைக்கும். அது மேலும் நமக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

நாம் தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதத்தை ஏந்தி, தோல்வியுடன் போராட வேண்டும். நமது செயலில் முயற்சி இருந்தால், தோல்வி நம்மிடம் வந்து சேராது. நாம் முயற்சியில் வெற்றிபெற நம்மிடம் மூன்று விஷயங்கள் காணப்பட வேண்டும். அதாவது நமது நோக்கம் மிகச் சரியானதாக காணப்பட வேண்டும். மற்றும் நாம் எடுக்கும் முயற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, அனைவரும் எடுக்கும் வழியில் முயலாமல் நமது அறிவு, சிந்தனை என்பன தனித்துவமாகக் காணப்பட வேண்டும். இம் மூன்றும் நம் முயற்சியை வெற்றிப் பாதையில் செல்ல வழிவகுக்கும்.

நாம் எக்காரியத்தை ஆரம்பிக்கும் போதும் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். அதாவது குழந்தைகள் நடக்க ஆரம்பிக்க முன் விழுந்து, எழுந்து தான் நடை பயிலுகின்றனர். கீழே விழுந்து விட்டோமே என்று நடை பயிலாமல் விட்டுவிடுவதில்லை. வெற்றி பெறுவதற்கு முடிவில்லா முயற்சியும், அதீத நம்பிக்கையும் தேவையானதாகும். நன்றாக “உழைத்திரு உனது குறிக்கோளை நீ நிச்சயம் அடைவாய்” என்று விவேகானந்தர் கூறுகின்றார். அது மட்டுமல்ல, “தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்” என்று திருவள்ளுவரின் இரு வரிகளிற்கு ரோஜர் பேனிஸ்டர் வாழ்க்கையானார். அதாவது நாம் மேற்கொள்ளும் செயல் சிறப்பினைத் தரும் என்று உணரும்போது முயற்சி ஆர்ட்டீசியன் ஊற்றுகள் போல் ஊற்றெடுக்கும். விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால், பல சாதனைகள் நிகழ்ந்திருக்க மாட்டாது.

இலக்குத் தெரியாமல் முயற்சிப்பதுதான் கடினம். இலக்கினை மிகச் சரியாக கணித்துவிட்டு, முயற்சித்தால் வெற்றி நிச்சயம். உயர உயர குதித்துப் பார்த்து தன்னால் திராட்சைப் பழத்தை உண்ண முடியவில்லை என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டு, இந்தப் பழம் புளிக்கும் என்று பாதியிலே கைவிடுவது முயற்சியல்ல. குடுவையிலுள்ள நீரைப் பருக முடியவில்லை என்றதும் முயற்சியினால் கற்களை குடுவையில் இட்டு நீரை மேலேறச் செய்து பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சி. அதாவது ஒரு செயலினை செய்யத் தொடங்கி, அது முடியாமல் போனதும் கைவிடுவதல்ல முயற்சி. அச்செயலை வெற்றியடையச் செய்ய நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தான் வெற்றி.

துன்பம், வேதனை, சங்கடம், மற்றும் விருந்தோம்பல் அனைத்திற்கும் வரம்புகள் உள்ளன. எனினும் கடுமையான முயற்சி ஒன்றிற்கு மாத்திரமே வரம்புகள் காணப்படாது. சூறாவளி பறவைகளின் கூடுகளை சேதமாக்கி அழித்து விடும். எனினும் பறவைகள் தங்களது முயற்சியால் மீண்டும் கூடுகளை அமைத்துக் கொள்ளும். அதேபோல இரவை காரிருள் சூழ்ந்தாலும் தாரகைகளின் ஒளி இருளோடு போராடி ஒளிரும். அதன் இறுதியில் விடியலும் கண் திறக்கும். ஏனெனில், எல்லைகள் இன்றி செய்தாலே வெற்றி நமக்குக் கிடைத்துவிடும். அதற்கான முயற்சி வரம்பற்றது.

தோல்விகள் கதவை மூடும்போது, தொடர்ந்து விடா முயற்சியுடன் கதவைத் தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி ஆகும். நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடா முயற்சியோடு செயற்படுகின்றவர்களிடம் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். வெற்றி பெற்றவர்கள் வரிசையில் இணைய விடா முயற்சியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT