எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு மட்டுமல்ல.மற்றவர்க்கும் இருக்கும். கொஞ்சம் யோசியுங்கள். சந்தோஷமாக ஒரு விஷயத்தை செய்யத் தொடங்கும்போது அது தப்பு இப்படிச் செய்யாதே என்று சூடான வார்த்தைகளால் தாக்கினால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். நாம் ஒன்றைச் செய்தால் மற்றவர் அக்கறையாக கவனிக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? மற்றவர்களும் தாங்கள் பாராட்டப்பட வேண்டும் என நினைப்பார்கள்.
எப்போது பிறரது சூழலை நீங்கள் புரிந்து கொண்டு பாராட்டவோ, சந்தோஷப்படுத்தவோ செய்கிறீர்களோ அப்போதுதான் உங்களை மற்றவர்கள் பாராட்டுவது நடக்கும். கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் நீங்கள் கலந்து கொண்டால் நீங்கள் கோல் போட முயற்சிக்கும் போது எல்லோருமே உங்களுக்குத் துணை இருக்கமாட்டார்கள். பத்து பேர் ஆதரவு தந்தால் பதினோறு பேர் எதிர்ப்பார்கள்
எதிர்ப்பவர்களைப் பார்க்காமல் உதவுபவர்களை கவனித்துக் பந்தை நகர்த்தினால் தான் கோல் போட முடியும். வாழ்க்கையும் அந்தப் போட்டி போன்றதுதான்.
ஆடு மேய்ப்பவன் தன் 100 ஆடுகளுடன் சென்றபோது வழியில் குறுக்காக கட்டை நீட்டிக் கொண்டிருந்தது. முதல் ஆடு அங்கு சென்றதும் கட்டையைத் தாண்டி குதித்தது. தொடர்ந்து 20 ஆடுகள் அப்படிக் கடந்தன. 21வது ஆடு கடப்பதற்கு முன்பாக கட்டையை ஆடு மேய்ப்பவன் எடுத்து விட்டான். ஆனால் அடுத்து வந்த எல்லா ஆடுகளும் அந்த இடம் வந்ததும் வேகமாகப் தாண்டி குதித்தன. இல்லாத தடையை இருப்பதாக எண்ணித் தாண்டின. இப்படித்தான் பிரச்னைகள் எனும் தடைகள் தங்களைப் தடுப்பதாகவும், சூழ்நிலை எனும் கயிறு கட்டிப்போட்டிருப்பதாகவும் தாங்களே கற்பனை செய்து கொண்டு பலர் முடங்கிப் போகிறார்கள். இதனால் தேவையில்லாத ஒரு கயிற்றின் இறுக்கத்திற்குப் பழக்கப் பட்டுப் போகிறார்கள். கற்பனை பயங்கள் எனும் மாயக்கயிற்றில் நம்மைக் கட்டிப் போட்டு செயலாற்ற விடாமல் தடுக்கின்றன.
இல்லாத கயிற்றை யாரோ வந்து அவிழ்க்க வேண்டும் ஏங்கி தன்னைத் தாங்கிக் கொள்ள ஒருவரை எதிர்பார்த்து மகிழ்ச்சியைத் தள்ளிப் போடும் உங்கள் மாய வலையிலிருந்து வெளியே வாருங்கள். பலவீனமான அந்த மாயக் கயிற்றை உங்கள் மனம் பலத்தால் அறுத்து எறியுங்கள். உங்கள் முன்னேற்றப் பாதையை தடுப்பவர்கள் யார், உதவிக்கரம் கோர்த்திருப்பவர் யார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புரிதல் இருந்தாலே போதும். உங்கள் வாழக்கையில் வெற்றிகள் மலரும். மகிழ்ச்சியும் பூரிக்கும்.