உங்கள் வளர்ச்சியில் உண்மையிலேயே விருப்பம் இருந்தால் பிரச்னைகளை ஆசையோடு வரவேற்கப் பழகுங்கள். கடினமான சந்தர்ப்பங்கள் உண்மையில் சாபமல்ல. உங்களுக்கு அருளப்படும் வரங்கள். ஒரு சினிமாவிற்கு போகிறீர்கள். அடுத்தடுத்த காட்சிகள் நீங்கள் எதிர்பார்த்தபடியே வந்து கொண்டிருந்தால் அந்த சினிமாவை ரசிப்பீர்களா, அல்லது போர் என்று எழுந்து வெளியே வருவீர்களா?. எதிர்பாராத திருப்பங்கள்தானே ஒரு வாழ்க்கையை சுவையாக அமைத்துத்தர முடியும்.
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். "உனக்கு பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். பேசாமல் அந்த வேலைகளை விவசாயி ஒருவரிடத்தில் ஒப்படைத்து விடேன்" என்றான்.
கடவுள் உடனே ஒப்புக்கொண்டு வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும் உன் என்று அருளிவிட்டுச் சென்றார்.
விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த பருவம் வந்தது. மழையே பெய் என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னான். நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான நேரத்தில் காற்றை வீசச் செய்து விதை தூவினான். பயிர் பச்சை பசேலென்று வளர்ந்தது. அறுவடைக்காலம் வந்தது. கதிரை அறுத்துப் பார்த்து அதிர்ந்தான் விவசாயி. ஒன்றிலுமே தானியம் இருக்கவில்லை.
கோபமடைந்த விவசாயி கடவுளைக் கூப்பிட்டு இதற்கான காரணத்தைக் கேட்டான். உடனே கடவுள் "என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது கதிர்கள் எல்லாம் அம்மாவை இறுக்கிக் கொள்ளும் குழந்தைபோல் பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பி பிடித்துக் கொள்ளும். மழை குறைந்தால், தண்ணீரைத்தேடி வேர்கள் நாலாபக்கமும் அலையும். போராட்டம் இருந்தால்தானே தாவரங்கள் தங்களைப் பாதுகாத்து வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. தளதளவென்று வளர்ந்ததே தவிர தானியங்களை கொடுக்க அவற்றுக்குத் தெரியவில்லை." என்றார்.
வேண்டாம்டா சாமி. உன் மழை காற்றை நீயே வைத்துக்கொள் என்ற விவசாயி திருப்பி தந்து விட்டான்.
வாழ்க்கை எல்லாவிதத்திலும் சௌகரியமாக இருந்துவிட்டால் அதைப்போன்றதொரு வெறுமை வேறெங்கும் இல்லை. இருட்டு என்ற ஒரு பிரச்னை இருந்ததால்தானே மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்னையாக இருந்ததால் தானே வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. தொலைவில் இருப்பவர்களை தொடர்பு கொள்ளத்தானே தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.
பிரச்னைகளே இல்லாவிட்டால் உங்கள் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?. பிரச்னைகளை எதிர் கொள்ள தைரியபில்லாமல் வாழ்க்கை மட்டும் வசதியாக அமைய வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள். நீங்கள் எதில் ஈடுபட்டாலும் முடிவு சாதகமாக இருக்குமா, இருக்காதா என்று வீண் யோசனை செய்யாதீர்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள். இனிமேல் சவால்கள் வந்தால் அவற்றுக்கு சாபம் கொடுக்காதீர்கள். அதை எதிர்த்து போராடும் வலிமையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.