Motivation Image 
Motivation

சோர்வான மனநிலையை உற்சாகமாக்க என்ன செய்யணும்?

கல்கி டெஸ்க்

"நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி, சுற்றி நடப்பதை உணர்ந்து அனுபவியுங்கள். கூட்டுக் குடும்பங்களில் உள்ளுக்குள் ஒடுங்கி வாழும் சூழலே இருந்திருக்காது. இப்போதும் ஒன்றும் குறைவில்லை. நாள் தோறும் நம்மைச் சுற்றி பூக்களின் வாசம், பறவைகளின் கீச்சொலி, வாய்க்கு ருசியான உணவு, வான் மேகங்களின் தொடர் ஓவியங்கள் என்று புலன்களுக்கு விருந்தாக எத்தனையோ இருக்கின்றன! வாழ்வின் சின்னச்சின்ன மகிழ்ச்சியான தருணங்களை முழுமையாக அனுபவியுங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள். உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி மற்றும் உடல் இயக்கம் ஆகியவை நம்மை நன்றாக உணர வைப்பதாகவும், சாதாரணமான மனச்சோர்வுக்கு உளவியல் மருத்துவத்தில் தரப்படும் பெரும்பாலான மருந்துகளைப் போலவே சிறப்பாக செயல்படுகின்றன என்பதை நிரூபிக்கும் பல தரவுகள் இப்போது உள்ளன.

வாழ்க்கையில் இலக்குகளை கண்டறியுங்கள். அது உலகத்தை மேம்படுத்தும் பெரிய தத்துவார்த்தமானதாக இருக்கத் தேவையில்லை.‌ உங்கள் அளவில் இனிமையான நிகழ்வுகள், இனிமையான நடவடிக்கைகளை திட்டமிடுங்கள். முடிந்த அளவுக்கு உதவி தேவைப்படும் பிறருக்கு உதவுங்கள். மனதில் ஒரு நிறைவு உண்டாகும்.

உள் மனதில் ஏதாவது அச்சமிருந்தால் அதை எதிர்கொள்ளுங்கள். நெருக்கமான நபர்களுடன் மனம்‌ விட்டுப் பேசுங்கள். மனநல சிகிச்சையில் மனம் விட்டுப் பேச வைப்பது ஒரு பகுதியாக உள்ளது. உங்களுக்கு பேசுவதற்கு கடினமாக இருக்கும் விஷயங்களைத் தவிர்க்காதீர்கள்.

உற்சாகபானம் என்று அதிகமாக எதையும் அருந்த வேண்டாம். சிலருக்கு, உற்சாகபானம் ஒரு பிரச்சனையாக மாறி‌ மனச்சோர்வை அதிகரித்துவிடும்.

ஆரோக்கியமான உணவை உண்ண முயற்சி செய்யுங்கள். வைட்டமின் பி-3 மற்றும் வைட்டமின் பி-9 உள்ள உணவுகள் மனச்சோர்வு உள்ளவர்களுக்கு உதவலாம். ஏனெனில் பி வைட்டமின்கள் மனநிலையை நிர்வகிக்க உதவுகின்றன. வைட்டமின் டி, மெலடோனின் ஆகியவை பருவகால மனச்சோர்வுக்கு பரிந்துரைக்கப் படுகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை மனச்சோர்வுக்கு உதவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஒழுங்காக தூங்குங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு உறங்கச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்".


தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ்

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT