சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது உள்நாட்டு பிரச்னை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பித்து இருந்தார். ஒரு நாள் மாலை தான் பிறப்பித்த உத்தரவை மறந்து நடக்க ஆரம்பித்தார். அப்போது சங்கு ஒலித்தது. ஒருநிமிடம் தெருவில் நின்றாலும் தன்னை சுட்டு விடுவார்கள் என்ற பயத்தில் ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். நீங்கள் யார் என்ற குரல் வந்ததும் நான்தான் சர்ச்சில் என்றார். ஏற்கனவே உள்ளே 4 சர்ச்சில்கள் இருக்கிறார்கள் என்று வீட்டுக்காரர் சொன்னார். அவரைப் போலவே உடை அணிந்து வாயில் பைப் வைத்து தங்களை சர்ச்சில் என்று கூறியவர்கள் 4 பேர்கள் இருந்தார்களாம்.
1919 ஆம் ஆண்டு காந்தியடிகள் கராச்சியிலிருந்து கல்கத்தாவிற்கு லாகூர் வழியாக செல்ல வேண்டி யிருந்தது. லாகூரில் வண்டி மாறவேண்டும். ஒரே கூட்டம். எந்தப் பெட்டியிலும் ஏறமுடியவில்லை. வண்டிப் பெட்டிகள் பூட்டப்பட்டு பயணிகள் ஜன்னல் வழியாக குதித்தனர். அவர் மூன்றாம் பெட்டியை பார்த்துக் கொண்டே போனார். யாரும் இடம் கொடுக்கவில்லை. இவர் இடம் தேடுவதைப் பார்த்து ஒரு போர்ட்டர் 12 அணா கொடுத்தால் ஏற்றி விடுவதாகச் சொன்னான். வேறு வழியில்லாமல் அவர் ஒப்புக் கொண்டார். அந்தப் போர்ட்டர் எப்படியோ ஜன்னல் வழியாக இவரை உள்ளே தள்ளி விட்டான்.
உள்ளே இருக்கும் நெருக்கத்தில் இவரால் நிற்கத்தான் முடிந்தது. ஒரே புழுக்கம், வேர்வை. ஒரு பிரயாணிக்கு இவரைப் பார்த்து இரக்கம் உண்டாயிற்று. இவரிடம் உங்கள் பெயர் என்ன ஊர் என்ன என்று கேட்டார். உடனே காந்தி தன்னைப்பற்றிக் கூற எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தனர். இவரா காந்தி என்று சாதாரணமான அந்த மனிதரை பார்த்து வெட்கமுற்று மன்னிப்பு கேட்டனர். இடம் கொடுத்தனர்.
நாமும் நமக்கு சில அடையாளங்கள் வைத்திருக்கிறோம். அந்த அடையாளங்களுக்குள் வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியாது. நம்மோடு அவர்களே ஒரு இடத்தில் சரிக்கு சரியாக நிற்கிறபோது நாம் அவர்களை தொலைத்து விடுகிறோம். காந்தியடிகளை இந்த கம்பார்ட்மெண்டில் மக்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். அதேபோல் சர்ச்சிலையும் அவர் கதவு தட்டிய வீட்டுக்காரர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
எந்த அடையாளமும் இல்லாமல் நாம் மனிதர்களை எப்போது கண்டுபிடிக்கப் போகிறோம்?. சிலரை உடம்பு வைத்தும், சிலரை உடைகள் வைத்தும், சிலரை குரல் வைத்தும் நினைவு கொள்கிறோம். நாளடைவில் அவர்கள் உருவம் மறைந்து போகிறது. அதிகமாக கோபப்படுபவரை நமக்கு கோபம் வரும்போது நினைக்கிறோம். அதிகம் ஏமாற்றுபவரை நாம் ஏமாறும்போது நினைக்கிறோம். நம் முகத்தை அவர் முகத்தில் வைக்கிறோம். அவர் முகத்தை நம் முகத்தில் ஒட்டவைத்துப் பார்க்கிறோம்.
பெரிய மனிதர்கள் என்பதற்கு நாம் சில இலக்கணங்கள் வைத்திருப்போம். அவர்கள் அந்த இலக்கணங்களை தாண்டி வரும்போது அவர்கள் சொன்னால் கூட நாம் ஒத்துக் கொள்வதில்லை. இது காந்திக்கும் நேர்ந்தது. சர்ச்சிலுக்கும் நேர்ந்தது. இன்னும் பல பெரிய மனிதர்களுக்கும் இப்படி நிகழ்ந்திருக்கலாம். அப்படி நிகழ்ந்ததால்தான் அவர்கள் இன்னும் பெரிய மனிதர்களாக இருக்கிறார்கள்.