-தா சரவணா
ஒருவன் வேகமாக ஓடி வந்தான். எதிரே வந்த முனிவர், ''ஏனப்பா இப்படி தலைதெறிக்க ஓடி வருகிறாய்?'' என்று கேட்டார்.
''என்னை அது துரத்திக்கொண்டு வருகிறது ஐயா'' என்றான் அவன்.
ஏதாவது நாய் துரத்திக்கொண்டு வருகிறதோ என்று நினைத்து அவனுக்குப் பின்னால் பார்த்தார் முனிவர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தெரியவில்லை.
''எதுவும் இல்லையே'' என்றார்.
''நல்லா பாருங்க சாமி'' என்றான் அவன்.
''பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன்'' என்றார் முனிவர்.
''இதோ பாருங்கள்; இதுதான் என்னைத் துரத்துகிறது'' என்று சுட்டிக்காட்டினான் அவன். அந்த இடத்தில் அவனுடைய நிழல் இருந்தது.
''என்னப்பா சொல்றே?'' என்று கேட்டார் முனிவர் கொஞ்சம் சந்தேகமாக.
அதன்பிறகு அவன் விபரமாகச் சொன்னான். ''எனக்கு நிழலைக் கண்டால் பிடிப்பதில்லை. எப்போது பார்த்தாலும் என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனிடமிருந்து பிரிவதற்கு எவ்வளவு முயற்சிகள் பண்ணிப் பார்த்துவிட்டேன். முடியவில்லை'' என்றான்.
''அப்படி என்ன முயற்சிகள் செய்தாய்?'' என்று கேட்டார் முனிவர்.
''ஒரு பெரிய குழியைத் தோண்டி அதிலே என்னுடைய நிழலைப் புதைத்து விடலாம் என்று முடிவுசெய்து மண் வெட்டி எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குப் போனேன். ஆழமான குழியைத் தோண்டினேன். குனிந்துப் பார்த்தேன். அந்தக் குழிக்குள்ளே நிழல் தெரிந்தது. இதுதான் சமயம் மண்ணைப் போட்டு மூடி விடலாம் என்று நினைத்து கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டேன். இப்போது நிழல் மண்ணுக்கு மேலே வந்து இருந்தது. இது என்னடா வம்பா போச்சு என்று சொல்லி அவசரம் அவசரமாக மண்ணை அள்ளிப்போட்டேன். குழி பூராகவும் நிரம்பிவிட்டது. ஆனால், மறுபடியும் நிழல் மேலே வந்து உட்கார்ந்து இருந்தது. சரி இதை குழியில் புதைக்க முடியாது என்று முடிவு பண்ணி இங்கே விட்டுவிட்டு ஓடி விடுவோம் என்று நினைத்து ஓடினேன்'' என்றான் அவன்.
மேலும், ''நான் மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். ஓடி ஓடிப் பார்த்தேன். நிழல் என்னைவிட வேகமாக என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. சரி திரும்பி ஓடிப் பார்ப்போம் என்று நினைத்து அப்படியே திரும்பி ஓட ஆரம்பித்தேன். இப்போது நிழலைக் காணவில்லை. கொஞ்ச தூரம் ஓடிவிட்டு பின்னால் திரும்பிப் பார்த்தால் அது பின்னாலேயே துரத்துகிறது. இந்த நிழலைத் துரத்த ஒரு வழி சொல்லுங்கள் ஐயா'' என்றான்.
முனிவர் சொன்னார், ''அங்கேயும் இங்கேயும் ஓடாதே. அப்படியே கீழே படுத்துக்கொள்'' என்றார்.
அவன் அப்படியே படுத்துக்கொண்டான். அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தான். நிழலைக் காணவில்லை. இப்போதுதான் நிம்மதியாக இருந்தான்.
எல்லா மனிதர்களும் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 'நான்', 'எனது' என்கின்ற ஆணவம் அவர்களைத் துரத்திக்கொண்டிருக்கிறது. அதை விட்டுவிட்டு ஓட வேண்டும் என்று நினைத்தாலும் அது முன்னால் வந்து நிற்கிறது. பரம்பொருளை நோக்கி ஓடும்போது இந்த ஆணவம் பின்னால் வந்துவிடுகிறது. தன்னை உணர்ந்து மனிதனுக்கு விடுதலை உணர்வு ஏற்படுகின்ற நேரத்திலே அதாவது பரிபூரண சரணாகதி என்கின்ற நிலையிலே அது முழுவதுமாக மறைந்து விடுகிறது. அப்படிப்பட்ட சுதந்திர மனிதர்களாக எல்லோரும் மாறிவிட்டால் இந்த உலகமே இன்பமயம்தான்.
என்ன, நான் சொல்வது சரிதானே?