motivation article Image credit - pixabay.com
Motivation

நாம் எந்தக் கட்சி? கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்!

இந்திரா கோபாலன்

வாழ்க்கையில் வெற்றி பெரும் கலையை  முழுக்க முழுக்க இன்னொருவர் கற்றுத் தர முடியாது. சுயமாக முன்னுக்கு வரும் கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்களைப் பார்த்து நீங்கள் முன்னுக்கு வந்த கலையைச் சொல்லிக் கொடுங்கள் என்றால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லித்தரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. இது சொல்லித் தர முடியாதது.

இது பலருக்கும் புரிவதிவதில்லை. நடிப்புக் கல்லூரியில் நடிப்பைப் படிப்பாக முடித்த எவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விஞ்சியது இல்லை. என்ன புரிகிறது? ஒன்றை  சொல்லிக் கொடுப்பதை விட கற்றுக் கொள்வதில்தான்  வெற்றி அடங்கியிருக்கிறது. சிவாஜி கணேசன் எந்தக் கல்லூரியிலும் நடிப்பைக் கற்கவில்லை. ஆனால் உலகம் முழுவதிலிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார். சொல்லிக் கொடுப்பதில் வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் கற்றுக்கொள்வதில் வேறுபாடு இருக்க முடியும்.தனித்தன்மை சுடர்விட முடியும்‌ இதனை புரிந்து கொள்ளாமல் புகழ் பெற்றவர்கள் வெற்றி ரகசியங்களை மறைப்பதாகக் குற்றம் சாட்டுவது தவறு.

சமைத்துப்பார் என்ற புத்தகத்தைக் படித்துச் செய்த சமையலை விட அருமையாக சமைக்கும் அம்மணிகள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். காரணம் அனுபவம் மட்டுமல்ல. பழக்கம் மட்டுமல்ல. மனம் விழித்த நிலை. விவரிக்க முடியாத சக்தியான மனம்  விழித்திருந்தால் நுட்பமான பல கலைகளைச் சுலபமாகத் கற்றுக்கொள்ளும். தூக்கத்திலிருந்து விழித்தால் மட்டும் போதாது. மனதும் விழிக்க வேண்டும். மூளையின் சாளரங்களை மூச்சுக் காற்றால்  திறக்கவேண்டும். சொல்லிக் கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டும் நம்பி ஒருவர் அறிவாளி ஆக முடியாது.

ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி கண்ணில்லாதவர். இருந்தபோதும்,  அவர் ஆசிரியர் ஆனி சல்லிவன்  கண்ணிலாத போதும் கல்வி கற்பது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார்.

ஆனால் ஆசிரியர் கற்றுக் கொடுக்காத ஆற்றலை ஹெலன் கெல்லர் சுயமாகப் பெற்றார். அதுதான் அவரை உலகின் ஆச்சரியப் பொருளாக்கியது. விழித்திறன் இல்லாத அவர்  ஒவ்வொரு பொருளையும்  தொட்டுத் தொட்டு உணர்ந்து பெயர் குறிக்கும்  வித்தையை அவரது ஆசிரியர் கற்றுக் கொடுத்தார்.

ஹெலன் கெல்லர் மேலும் ஒரு படி போய் ஒரு பொருளைத்தொட்டு அதன் நிறத்தையும் சொன்னார். விழிப்படைந்த  மனம் அவர் விரல் நுனியில் பூரணமாக நின்றதால் கண்களின் வேலையை  கைகளே செய்தன.   பள்ளி கல்லூரிகளில் படித்துவிட்டால் படிப்பே முடிந்து விட்டதாகக் பலர் கருதுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் எதையும் பூரணமாகக் கற்றுத்தர முடியாது.

கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்தப் படிப்பும் எத்தனை நாள் வரும்  என்ற கிராமத்துப் பழமொழியை உணருங்கள். வெற்றி நிச்சயம். முட்டாளைப் படிப்பாளி ஆக்க முடியும். ஆனால் அறிவாளி ஆக்க முடியாது. அதனால்தான்  கீதையில் புத்திமான் களுக்குள்  நான்  புத்தி என்றான் கண்ணன் புத்தியில்லாத  புத்திமான் கள் அநேகம் பேர் செவன்ஸ் சென்ஸ் பெறத் தியானம் செய்கிறார்கள். காமன் சென்ஸ் இல்லாவிட்டால் நான்சென்ஸ்தான். படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு. நாம் எந்தக் கட்சி? கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT