lifestyle article Image credit - pixabay
Motivation

காலத்தைக் கடைப்பிடித்து ஞாலத்தில் சிறந்தவர் யார் தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

காலம் இயற்கையால் வழங்கப்பட்ட வரம். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம்முடைய உயர்வு தாழ்வும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம். ஒவ்வொரு செயலையும் செய்யும் பொழுதும் அதற்கான காலத்தை பங்கீடு செய்து செய்தோமானால் நேரமும் நிறைய கிடைக்கும். எல்லாவற்றையும் செய்த திருப்தியும் அடைவோம் என்பது உறுதி. 

தவத்தினால் வாழ்வை ஒளிமயமாக்கிக் கொள்ள முடியுமா? முடியும். தவப்பயனால் நினைத்ததை சாதிக்க முடியும் என்று மெய்ப்பித்துக் காண்பித்தவர் அன்னை தெரசா அவர்கள். 

"ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்

 தாழாது உஞற்று பவர்"

என்னும் குறட்பாவே இதற்குச் சரியான சான்று. விதியை மதியால் வெல்லலாம் என்னும் பழமொழியையும் நினைத்துப் பார்க்க வேண்டும். மதி என்பது அறிவு. தவம் செய்வதினால் வலிமையையும், கூர்மையையும் மதிபெறும். அத்தகைய மதியானது இனி ஆற்ற இருக்கும் செயல்களை ஒழுங்குப்படுத்தி வாழ்க்கையில் இதுவரை கிடைக்காத வெற்றியையும், மேன்மையையும் ஏற்படுத்தித் தரும். தவம் செய்பவர்கள் முறையாகவும் தொடர்ந்தும் செய்து வருவதால்  "எப்படி நீண்ட நேரம் நாணில் ஏற்றிய அம்பை  வளைத்துப் பிடித்திருந்து எய்தும் பொழுது குறி தவறாமல் குறிப்பிட்ட இடத்தில் விழுந்து வெற்றி வாகை சூடுகிறதோ" அதுபோல் செய்யும் செயல் எல்லாவற்றிலும் மேன்மையை அடைய முடியும்.

ஒருங்கிணைத்த மனத்தால் தவம் முடிந்து வாழ்த்தும் பொழுதும் பிறருக்கு கருணை உடன் நல்லாசிகளை வழங்க முடியும். மனம் நிலையாக நின்றால் எடுத்த காரியத்தை துணிவுடன் முடிக்கலாம். இதை அனுபவ பாடமாக அறிந்தவர் அன்னை தெரசா. அதனால்தான் அவர் ஜெபிப்பதற்கு அவ்வளவு ஆர்வத்தை மேற்கொண்டார். இதனால் கருணை பெருகி மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டாக கருதி வாழ்க்கையை நகரத்தினார் என்றால் மிகையாகாது. 

ஒருமுறை அன்னை தெரசா அவசர அவசரமாக கல்கத்தா விமான நிலையம் வந்தார். ஆனால் விமானம் புறப்பட வெகு நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. பலரும் எரிச்சலும், வருத்தமும், கோபமும் அடைந்தபோது அவர் மட்டும் நல்லது என்று சொல்லிவிட்டு ஒரு மூலையில் சென்று மண்டியிட்டு ஜெபம் செய்ய தொடங்கிவிட்டார். காலையில் அவசரமாக புறப்பட நேர்ந்ததால் நிதானமாக ஜெபிக்க முடியவில்லை. இப்போது நல்ல நேரம் கிடைத்திருக்கிறது என்று அதை பிரார்த்தனைக்குப் பயன்படுத்திக் கொண்டார். வீணாய்ப் போகக்கூடிய பொழுதையும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள கொஞ்சம் விவேகம் தேவை.

நமக்கு கிடைத்திருக்கும் 24 மணி நேரத்தையும் முழுமையாக பயன்படுத்துவோம். காலத்தின் மதிப்பை உணர்ந்து அதை வீணடிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்வோம். காலத்தை வீணடித்தவர்கள் கால வெள்ளத்தில் காணாமல் போகிறார்கள் என்பதையும்  காலம் நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதையும் நினைவில் கொள்வோம் . 

காலத்தைக் கடைபிடிப்போம் ஞாலத்தில் சிறந்து வாழ்வோம்!

வெடித்து சிதறிய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அதிர்ந்தது லெபனான்!

முன்னேறியவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டே இருப்பார்கள்!

ஆங்கிலேயர்களை அதிரவைத்த கம்பீரமான களரிப்பயட்டின் வரலாறு தெரியுமா?

இனிய உளவாக இனிமையே பேசுக!

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

SCROLL FOR NEXT