motivation article Image credit - pixabay
Motivation

மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!

கல்கி டெஸ்க்

-ம. வசந்தி

டலைப் போலவே மனமும் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் நாம் அழுக்குபோக தேய்த்து குளிக்கின்றோம். மன ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்கிறோம்? மனமும் உடலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை. ஆரோக்கியத்தில் இரண்டு பக்கங்கள் அவை. உடல் வலியால் துடிக்கும்போது மனம் சந்தோசமாய் இருப்பதில்லை. மனம் வேதனையில் மாறும் பொழுது உடல் உல்லாசத்தை அனுபவிப்பது இல்லை.

உடல் நோய்களில் பெரும்பான்மை மனநோயால் உண்டாகுபவையே. ஆகையினால் உடலை பரிசோதிக்கும் மருத்துவர்கள் நம் மனநிலையையும் கண்டறியும் முயற்சிக்கிறார்கள். நம்முடைய மனதில் நிறைய குப்பை கூழங்கள்,  அழுக்குகள் நிரம்பி இருக்கின்றன. அவற்றை அகற்றி மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன்  'இன்று எந்த ஒரு கவலையும் கோபம், பொறாமை, எரிச்சல் போன்ற உணர்வுகள் என் மனதில் தோன்றாமல் பார்த்துக் கொள்வேன்" என உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்.

சிலருடைய நடவடிக்கைகள் சில சம்பவங்கள் மனதில் கலக்கத்தையும் கசப்பையும் தருவது இயற்கை. ஆனால் அந்த கலக்கமும் கசப்பும் நாள் முழுவதும் மனதில் தங்கி இருக்க அனுமதிக்காதீர்கள். 'இதுதான் உலகம். மனிதர்கள் பலர் இப்படிப்பட்டவர்கள்தான்" என்று உணர்ந்து உங்களை சமாதானப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை ஏமாற்றியவர் உங்களை தூற்றியவர் தான் செய்த அநியாயத்தை மறந்துவிட்டு உல்லாசமாக இருக்கும்பொழுது நீங்கள் மட்டும் ஏன் மனதில் வேதனையால் துடிக்க வேண்டும்.

மறத்தல், மன்னித்தல் இரண்டும் அருங்குணங்கள். இந்த குணத்தை பெற்றவனின் மனதில் மேற்சொன்ன அழுக்குகள் சேராது. சிலர் பழைய கஷ்டங்களை வேதனைகளை மறக்காது மனதின் ஒரு மூலையில் பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து 'வேதனையை புதுப்பித்தல்' என்ற கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகி அதை அடிக்கடி திறந்து பார்த்து வேதனையை புதுப்பித்துக் கொள்வார்கள். அதை விடுத்து வேதனைகளை மனதில் அடக்கி வைக்காது நெருங்கியவர்களிடம் சொல்லி ஆறுதல் பெறுவது ஒரு சிறந்த வடிகால் என்பதில் சந்தேகமே இல்லை.

வாழ்க்கையில் முக்கியமானது சந்தோஷமும் சமாதானமும் தான். "என் சந்தோசமும் சமாதானமும் என் பிறப்புரிமை எந்த சம்பவமும் எந்த மனிதனும் என் சந்தோஷத்தை சமாதானத்தை என்னிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள நான் அனுமதிக்கப்பட மாட்டேன்" என்று மனதில் தீர்மானமாக நினைத்துக் கொள்ளுங்கள்.

இரவில் படுக்கைக்கு செல்லும் முன் மனதில் அழுக்குகளை எல்லாம் குப்பை கூடையில் போட்டு விடுங்கள். நம்முடைய பிரச்சனைகளை துன்பங்களை ஏமாற்றங்களை ஒவ்வொன்றாக கசக்கி குப்பை தொட்டியில் போடுவதுபோல் கற்பனை செய்து மனதை சுத்தப்படுத்துங்கள் என்கிறார் மனோதத்துவ எழுத்தாளர் டேல் கர்னிஜி. இதனால் மனதில் குப்பைகள் ஒழிந்து மனம் சுத்தமானதும் அது தெளிவடைந்து ஆரோக்கியமாக இருக்கும். இரவு நன்றாக உறக்கம் வரும்.

நல்ல எண்ணங்கள் மனஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. எண்ணங்கள் வலுப்பெறும் பொழுது மனசக்தியும் வலுப்பெறுகிறது. நேர்மறையான எண்ணங்கள் மனசக்தியை பெருக்குகின்றன. மனமும் உடலும் களைத்துப் போகும் பொழுது ரிலாக்ஸேஷனுக்காக நீங்கள் விரும்பும் ஒரு நபரோடு அல்லது இயற்கை அழகு கொஞ்சம் ஓர் இடத்தில் (மலை அடிவாரம், நீர்வீழ்ச்சி, நீரோடை, பூங்கா எதுவானாலும் சரி) இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த இடத்தின் அழகை ரசித்து அதன் தனிமையில் இனிமையில் லயித்துப் போங்கள். இது உங்களுடைய மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். மனம், உடல்களைப்பைப் போக்கி சுறுசுறுப்பை கொடுக்கும்.

அச்சம், ஆங்காரம், கோபம், அன்பு தயை இந்த உணர்ச்சிகள் மனநிலையை பாதிக்காமல் சீரான நிலையில் வைத்திருந்து மன ஆரோக்கியத்தை கண்போல காப்போம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT