மனித குலத்தை ஆன்மிகப் பாதையில் நடத்திச்செல்ல மகான்கள் இவ்வுலகில் தோன்றுகின்றனர். அவ்வகையில் மக்களை நல்வழிப்படுத்த பகவான் ரூபத்தில் அவதரித்த ஷீரடி சாய் பாபா பக்தர்களால் ஈஸ்வர ரூபத்தில் வணங்கப்படுகிறார். பகவான் நாமத்தை இடைவிடாமல் ஜபிப்பதே மனதை கெட்ட எண்ணங்களில் செல்ல விடாமல் தடுக்கும் ஒரே வழி. நாம ஜபம் எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று. இதற்காகவே சேவை மையங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. அத்தகைய ஒன்றுதான் தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலிருந்து யாதகிரிகுட்டா செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பீபீ நகரில் கொண்டமடுகு என்ற அமைதியான கிராமத்தில் கோயிலுடன் கூடிய ஷீரடி சாயி சேவா ஆசிரமம். ஆந்திரா, தெலங்கானாவில் பல இடங்களில் சாயி சேவா ஆசிரமத்தை நிறுவியவர் பூஜ்யஸ்ரீ அம்முல சாம்பசிவ ராவ் மகராஜ்.
இந்த ஆசிரமத்தில் மேல் மட்டத்திலிருந்து 105 அடி உயரத்திலும், தரை மட்டத்திலிருந்து 151 அடி உயரத்திலும் பாபாவின் மிகப் பெரிய திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. பாபாவின் திருவுருவச் சிலையை குருஜி ஸ்ரீ அம்முல சாம்பசிவ ராவ் 2010ம் ஆண்டு பிரதிஷ்டை செய்து வைத்தார். கீழ் தளத்தில் உள்ள கோயில் கருவறையில் ஏழு குதிரைகளுடன் கூடிய ரதத்தில் சாரதியாக குருஜி அமர்ந்திருக்க பாபா சூரிய ரத சாயியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பலவித எண்ணங்களால் ஓடித் திரியும் மனித மனதை குருவானவர் அடக்கிக் கெட்ட எண்ணங்களை நீக்கி நல்வழிப்படுத்தி பகவானுடன் ஐக்கியப்படுத்துகிறார் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
கோயில் வளாகத்தில் சாயி பாபா விநாயகர், கிருஷ்ணர், ராமர் மற்றும் ஆஞ்சனேயர் ரூபங்களில் காட்சி தருகிறார். ‘சாயி’ என்று கூப்பிட்டவுடன் ஓடி வரும் பாபாவின் நாமம் இக்கோயில் எங்கும் ஒலிக்கிறது.
இந்த ஆசிரமத்தின் சிறப்பு அம்சம் ஸ்ரீ சாய் கோடி நாம லிகிதா மகா யாகம். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு, ‘ஸ்ரீ சாய்’ என்ற பாபாவின் நாமத்தை எழுதும் நாம புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. பக்தர்களால் எழுதி முடிக்கப்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு இங்குக் கட்டப்பட்டுள்ள கோயில் ஸ்தூபங்களில் அமைந்துள்ள பெட்டகங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றன. ஒரு கோடி நாமம் ஒரு யக்ஞம். இரண்டு கோடி நாமம் ஒரு மஹா யக்ஞமாக நடத்தப்படுகிறது. உகாதியிலிருந்து ஸ்ரீராமநவமி வரை நடத்தப்படும் ஹோமங்களில் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம். ‘அனைவருக்கும் இறைவன் ஒருவரே’ என்பது பாபாவின் கூற்று. ஸ்ரீராமநவமியன்று ஸ்தூப பெட்டகங்களில் உள்ள நாம புத்தகங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன.
இந்தக் கோயிலில் பக்தர்களே பாபாவுக்கு ஆரத்தி எடுப்பது மற்றுமொரு சிறப்பு அம்சம். அன்னதானம், ஏழை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்குதல் போன்ற சமூக சேவைகளும் ஆசிரமத்தில் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இளைய சமுதாயம் நம்பிக்கை, பொறுமை என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்தால் பெற்றோர்களுக்கும் சமுதாயத்துக்கும் உபயோகப்படும் விதத்தில் வாழ்க்கையில் மேலும் உயர்ந்து உன்னத நிலையை அடையலாம் என இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஆசிரமமாக இது விளங்குகிறது.
ஜெய் சாய்ராம்...