A rare temple that opens only once a year https://tamil.oneindia.com
ஆன்மிகம்

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் அபூர்வ கோயில்!

நான்சி மலர்

கோயில்கள் தோன்றிய வரலாற்றையும், அக்கோயிலின் புராணத்தையும் தெரிந்து கொள்வது எப்போதுமே சுவாரஸ்யமான ஒன்றாகும். அப்படித் தெரிந்துகொள்வது நமக்கு பலவித ஆச்சர்யத்தையும், வியப்பையும் கொடுக்கும். அப்படி ஒரு வியத்தகு கோயிலை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம், ஹாசன் என்ற ஊரில் உள்ளது ஹாசனாம்பா கோயில். இக்கோயிலில் சக்தி தேவியே பிரதான கடவுளாக அருள்பாலிக்கிறார். ஹாசனாம்பா கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலை வருடத்திற்கு ஒரு முறையே திறப்பார்கள். இந்துக்களின் பண்டிகையான தீபாவளியின்போது அக்டோபர் மாதத்தில் மட்டுமே திறக்கப்படும். இக்கோயில் ஹொய்சால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஹாசனாம்பா கோயில் எறும்புப்புற்று போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் இன்னொரு வியப்பான விஷயம் என்னவென்றால், இக்கோயிலில் ராவணன் பத்து தலை அல்லாமல் ஒன்பது தலைகளுடன் வீணை வாசிப்பது போன்ற சிலை அமைந்துள்ளது.

கோயில் வளாகத்தில் நுழைந்ததும், சித்தேஸ்வர சுவாமியை தரிசிக்கலாம். ஆனால், இவர் மற்ற இடங்களிலும் அருளுவது போல லிங்க ரூபமாக காட்சியளிக்கவில்லை. இக்கோயிலில் சிவபெருமான் அர்ஜுனனுக்கு பசுபதாஸ்திரம் கொடுப்பது போல காட்சியளிக்கிறார்.

இக்கோயில் வருடத்திற்கு ஒரே ஒருமுறைதான் திறந்திருக்கும் என்பதால் தீபாவளி பண்டிகைக்கு தரிசனம் பெறுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதும். நெய்வைத்தியமாக அரிசி இரண்டு மூட்டைகள், தண்ணீர், நெய் விளக்கான நந்தா விளக்கு, பூக்கள் ஆகியவற்றை வைத்து கோயிலை பூட்டி விடுவார்கள். பிறகு அடுத்த வருடமே கோயில் திறக்கப்படும். அப்படித் திறந்து பார்க்கையில், சமைத்து வைத்துவிட்டு சென்ற சாதம் சூடாகவும், கெட்டுப்போகாமலும் இருக்கும். நந்தா விளக்கில் நெய் இன்னும் தீராமல் எரிந்துக்கொண்டிருக்கும். ஹாசனில் இக்கோயில் மிகவும் மதிப்புமிக்க கோயிலாகக் கருதப்படுகிறது.

ஒருசமயம் சப்த மாதர்கள் என்று கூறப்படும், பிராம்மி, மஹேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி,சாமுண்டி தென்னிந்தியாவிற்கு வரும்பொழுது, ஹாசன் என்னும் இடத்தின்அழகை பார்த்து அவ்விடத்திலேயே தங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். மஹேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி கோயிலுக்குள் உள்ள மூன்று எறும்பு புற்றுக்குள் தங்கிக்கொள்கிறார்கள். பிராம்மி கெஞ்சாம்மா என்னும் இடத்தில் தங்கிக்கொள்கிறார். இந்திராணி, வாராகி, சாமுண்டி ஆகிய மூவரும் தேவிகரே ஹோன்டா என்னும் இடத்தில் உள்ள கிணற்றில் தங்கி விடுகின்றனர்.

இந்த ஊருக்கு ஹாசன் என்று பெயர் வரக் காரணம், ஹாசனாம்பா கோயிலேயாகும். ஹாசனாம்பா என்பதற்கு அர்த்தம், சிரித்த முகத்துடன் தன் பக்தர்களுக்கு எல்லா வளங்களையும் அள்ளித் தருபவள் என்பதேயாகும்.

ஹாசனாம்பாள் கோயில் முன் தோற்றம்

ஹாசனாம்பா மிகவும் நற்குணம் கொண்டவள். அவளுடைய பக்தர்களுக்கு தீங்கு விளைவிப்போருக்கு கடுமையான தண்டனைகள் கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.

ஒருமுறை ஹாசனாம்பாவின் பக்தையான பெண் ஒருவர் அவளை வேண்டுவதற்கு கோயிலுக்கு சென்றதைப் பார்த்த அப்பெண்ணின் மாமியார் அவரை கடுமையாகத் தாக்கி விட்டார். இதனால் அப்பெண் ஹாசனாம்பாவை உதவிக்குக் கூப்பிட, ஹாசனாம்பா அப்பெண்ணை கல்லாக மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டாராம். அக்கல்லை, 'சோசி கல்’ என்று அழைக்கிறார்கள். சோசி என்றால் மருமகள் என்று பொருள். அந்த கல் வருடா வருடம் ஒரு நெல்மணி அளவு ஹாசனாம்பாவை நோக்கி நகர்கிறது என்று நம்பப்படுகிறது. கலியுக முடிவில் ஹாசனாம்பாவை சென்று சேர்ந்து விடும் என்று கூறுகிறார்கள்.

இக்கோயிலில் உள்ள ஹாசனாம்பாவை வருடத்திற்கு ஒருமுறையே தரிசிக்க முடியும் என்பதால் அந்த ஒரு நாளில் மட்டுமே பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT