திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள முறப்பநாடு திருத்தலத்தில் உள்ளது அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில். இது நவகயிலாயத் திருத்தலங்களில் ஒன்றாகும். நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய தலமாகவும் இது வணங்கப்படுகிறது. சூரபத்மன் வழியில் வந்த அசுரன் ஒருவன் முனிவர்களுக்கு பெருந்தொல்லை கொடுத்து வந்தான். அவனிடமிருந்து தங்களை காத்தருளும்படி முனிவர்கள் பலரும் இத்தல இறைவனிடம் முறையிட்டனர். அதன்பேரில் சிவபெருமான் முனிவர்களுக்கு அருள் புரிந்ததால் இத்தலம், ‘முறைப்படி நாடு’ என்று வழங்கப்பட்டு பின்னர் முறப்பநாடு என்றானது.
சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகத்துடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதைக் கண்டு கவலை கொண்ட மன்னன், தனது மகளின் குதிரை முகம் மாற வேண்டி பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வழிபட்டான். சிவபெருமான் மன்னன் முன்பு தோன்றி, ‘முறப்பநாடு சென்று அங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடு’ என்று ஆசி வழங்கினார்.
சிவபெருமானின் திருவுளப்படி மன்னன் தனது மகளோடு இத்தலம் வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடினான். என்ன ஆச்சரியம்! அந்த மன்னனின் மகள் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிகவும் அழகாக விளங்கினாள். மன்னன் மகளின் குதிரை முகத்தை இக்கோயிலில் உள்ள நந்தி ஏற்றுக் கொண்டது. இக்கோயில் நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிப்பதை இன்றும் காணலாம். உடனே மன்னன் மனம் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு ஒரு கோயில் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
நவ கயிலாயத்தில் எந்தக் கோயிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்த ஆலயத்திற்கு உள்ளது. சிவபெருமான் குரு பகவானாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு இந்தக் கோயிலுக்கு மட்டுமே உண்டு. புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு காசியில் உள்ள கங்கை போன்று வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இங்கு செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை என்று பெயர்.
இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள். அது மட்டுமல்லாது புராணச் சிறப்பு பெற்ற தசாவதார தீர்த்தக்கட்டம் இங்கு உள்ளது. அதாவது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இந்தக் கோயிலில் உள்ளது.
இத்தலத்தில் சுவாமி கயிலாசநாதராகவும் அம்பிகை சிவகாமியாகவும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தல இறைவனை வழிபட்டால் திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள குரு பகவானை வழிபட்டதற்கு சமமாகும். இங்குள்ள இறைவனையும் அம்பாளையும் வழிபட திருமணத்தடை நீங்கும். நல்ல குடும்பம் அமையும். உடல் ஆரோக்கியம் கிட்டும்.