ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் https://epuja.co.in
ஆன்மிகம்

ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் நடைபெறும் திருக்கோயில் எது தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ஞ்சை மாவட்டம், திருவையாறு - கும்பகோணம் சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோயில். கபி என்ற சொல்லுக்கு குரங்கு என்று பொருள். ராம பக்தனான அனுமனுக்கு திருமால் இத்தலத்தில் ராமபிரானாகக் காட்சி அளித்ததால் கபிஸ்தலம் எனப் பெயர் பெற்றது.

இந்தத் தலத்தில் மூலவர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கிபடி புஜங்க சயனராக பாம்பணையில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். உத்ஸவர் வரதராஜ பெருமாள். தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம்.

இந்ரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் ஏகாதசி தோறும் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். ஒரு முறை அகஸ்திய முனிவர் தனது சீடர்களுடன் மன்னனைக் காண வந்தார். பகவானை நினைத்து தியானத்தில் இருந்த மன்னன் அகத்தியரை கவனிக்கவில்லை. ஆணவத்தில் தன்னை அவமரியாதை செய்ததாகக் கருதிய அகஸ்தியர், மன்னனை யானையாகும்படி சபித்தார். சாபம் உடனே பலித்தது. மன்னன் கஜேந்திரனாக (யானை) பிறந்தான். குளத்தில் பூத்திருந்த தாமரை மலரை எடுத்து வந்து தினமும் பகவானை அர்ச்சித்து வழிபட்டு வந்தது அந்த யானை.

புகூ என்ற கந்தர்வன் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து கபிஸ்தலத்தில் உள்ள குளத்தில் குளிப்பது வழக்கம். ஒரு நாள் அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த காசிப முனிவரின் காலை கந்தர்வன் பிடித்து இழுத்தான். உடனே கோபம் கொண்ட முனிவர், அவனை முதலையாகப் பிறக்கும்படி சாபமிட்டார். கந்தர்வன் முதலையாக மாறி அந்த தாமரைக் குளத்தில் இருந்து பெருமாளை பிரார்த்தனை செய்து வந்தான் முதலையாக மாறி இருந்த கந்தர்வன்.

ஒரு நாள் மலர் பறிக்க வந்த கஜேந்திரனின் காலை பிடித்துக் கொண்டது அந்த முதலை. முதலையின் பிடியிலிருந்து யானை தனது காலை விடுவிக்க முயல, யானையை முதலை தண்ணீருக்குள் இழுக்க ஓராயிரம் வருட காலங்கள் இந்தப் போராட்டம் நீடித்தது. கடைசியாக கஜேந்திரன் பகவானின் பாதத்தை சரணடைய, பகவான் ஸ்ரீமன் நாராயணன் சங்கு சக்கரதாரியாக கருடன் மீது விரைந்து வந்து தனது சக்ராயுதத்தால் முதலையை சம்ஹாரம் செய்தார். முனிவரின் சாபம் நீங்கப் பெற்ற முதலை கந்தர்வனாக ஆனது. அவனுக்கு பெருமாள் மோட்சம் அளித்து தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட்சமளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வலது கரத்தில் முத்திரையுடன் ஆதிமூலப் பெருமாள் பள்ளிகொண்ட திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார் கனகவல்லி தாயார் உடன் இருக்கின்றனர் ஆடி மாதம் கஜேந்திர மோட்ச உத்ஸவம் மூன்று நாட்கள் இத்தலத்தில் நடைபெறுகிறது.

இங்கு உங்கள் மனதில் உள்ள குறைகளை எல்லாம் கொட்டினால் பகவான் கருடன் மூலம் பறந்து வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார் குறிப்பாக, எதிரிகளிடம் சிக்கி உயிருக்கு பயந்து கொண்டிருப்பவர்கள் இத்தலத்து பெருமாளை வழிபட, அவர் கஜேந்திரநாதனாக வந்து உங்களைக் காத்தருள்வார். தீராத நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை ஆராதனை உள்ளிட்ட எல்லா பூஜைகளும் செய்ய, அவர்களின் குறைகள் சூரியனைக் கண்ட பனி போல மறையும்.

இந்தக் கோயில் காலை எட்டு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை நாலு மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT