காஞ்சியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு படு விமர்சையாக வைகாசி பிரம்மோத்ஸவம் எப்போதும் போல ப்ருஹ்மாண்டமாய் நடந்து கொண்டிருக்கிறது. மே 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், மே 22ம் தேதி கருட சேவை அற்புதமாக நடந்தேறியது. மே 26ம் தேதி (நாளை) நடக்கவிருக்கும் மகாரதம் எனப்படும் தேரோட்ட நிகழ்வை காணவும், வரதனின் தேரை வடம் பிடித்து இழுக்கவும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் ஒன்றுகூடும் நிகழ்வை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. பேரருளாளன் அல்லவா இப்பெருமான்?
‘பெருமாள் கோயில்‘ என்றாலே அது காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்தான். இக்கோயிலில் சேவை சாதிக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாளின் பெருமைகளை பல ஆழ்வார்களும் ஆசார்யர்களும் புகழ்ந்து தம் ஸ்லோகங்களின் வழி போற்றி இருக்கின்றனர். கூரத்தாழ்வான் தம் ‘வரதராஜ ஸ்த்வத்திலே’, ‘ஸ்ரீநிதிம் நிதி மபார மர்த்தி நாம்’ என்று பெருமாள் கோயிலில் சேவை சாதித்து கொண்டிருக்கும் மஹாலக்ஷ்மியான பெருந்தேவி தாயாருக்கே நிதியாய், திருவுக்கே திருவாய் பேரருளாளன் சேவை சாதித்து கொண்டிருக்கிறான் என்கிறார்.
நாம் கேட்பதை எல்லாம் அள்ளி வரமாக வழங்கி கொண்டிருக்கிறார் வரதராஜ பெருமாள். ஒரு ராஜாவானவர் எப்படி குறையோடு வரும் மக்களின் குறைகளை அக்கறையோடு கேட்டு அவர்களின் குறைகளை களைந்து விட உடனடியாக நடவடிக்கை எடுப்பாரோ அப்படித்தான் தேவாதி ராஜனான வரதராஜன், இந்த ஜகத்துக்கே ராஜாவாக இருந்து நம் குறைகளை எல்லாம் உடனடியாக களைந்து நல் வரங்களை அள்ளி அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறார். அப்படிப்பட்ட வரதராஜன் , இந்த அவனிக்கே அரசனானவன் தேரேறி வரப்போகும் அழகே அழகு தான். ‘ஸர்வபூத ஸுஹ்ருதம் தயாநிதிம்’ அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நன்மையை நினைத்து, அந்த நன்மையையே வாரி வாரி கருணையால் நிதியாய் வழங்கி கொண்டிருக்கும் அந்த வரதராஜ பெருமாளை மனதால் நினைத்தாலே போதும், நல்லவை யாவுமே நம்மைத் தேடி தானாகவே வர ஆரம்பிக்கும் என்பது சத்திய வாக்கு.
ஹஸ்திகிரி, அத்திகிரி என்ற மலை மீது, தியாக மண்டபத்தில் சேவை சாதித்து கொண்டிருக்கிறார் தேவாதி ராஜன் எனும் வரதராஜ பெருமாள். ஹஸ்திகிரி என்றால் வேழ மலை, யானை மலை என்றே பொருள். அஷ்ட திக் கஜங்கள் என்று எட்டு திக்குகளிலிருந்தும் யானைகள் வந்து வணங்கிய மலை என்பதாலேயே இந்த மலைக்கு இப்படி ஒரு பெயர் காரணம் வந்ததாக புராணக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
‘முத்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி தன்னில் அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே’ என்று தம்முடைய, ‘அடைக்கலப்பத்து’ எனும் ஸ்தோத்திரத்தில், அத்திகிரி அருளாளனான வரதராஜரின் திருவடி தாமரையில் தாம் சரண் புகுந்த, சரண் அடைந்ததை தெரிவிக்கிறார் ஸ்வாமி தேசிகன். நினைத்த மாத்திரத்திலேயே முக்தி தரக்கூடிய முக்கியமான ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் என்ற பெருமை வாய்ந்தது, இந்த காஞ்சி ஸ்தலம்.
ஸ்வாமி தேசிகன் தம்முடைய, ‘ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸத்தில்’ 50 ஸ்லோகங்களின் வழி வரங்களை தந்தருளும் ராஜாவான ஸ்ரீ வரதராஜ பெருமாளின் பெருமைகளை அவ்வரதனின் திருவடியிலேயே சமர்பித்திருக்கிறார். ப்ருஹ்ம தேவன் செய்த அஸ்வமேத யாகத்தில் தோன்றி (ஷ்யாமளோ ஹவ்யவாஹ; ) அந்த யாகத்தின் ஹவிசை பெற்று கொண்டு நமக்கு நன்மைகள் செய்வதற்காகவே வேழமலையில் நின்ற பெருமாள் நமக்கு சகல விதமான நன்மைகளையும் தரட்டும் என்ற வேண்டுகோளை வரதனின் திருவடியில் சமர்பித்தபடியே தொடங்கும், ‘ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸத்தின் ‘முதல் ஸ்லோகம். யுகங்கள் பல தாண்டியும் நமக்காக, நம்மை எல்லாம் காப்பதற்காகவே காஞ்சியில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாளை , நாமும் மனதில் நிறுத்துவோம். நமக்காக நன்மைகள் பல செய்யக் காத்துக்கொண்டிருக்கும் அந்த பெருமாளை நம் மனதுள் வரவழைத்துக்கொள்வோம்.