ஸ்ரீராமர் 
ஆன்மிகம்

அயோத்தி ஸ்ரீராம ஜன்ம பூமி: அறிய வேண்டிய சில செய்திகள்!

லதானந்த்

த்தரப் பிரதேச மாநிலம், ஃபைஸாபாத் நகருக்கு 7 கி.மீ. தொலைவில் உள்ளது அயோத்தி. மஹாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதாரம் செய்தபோது, பிறந்த புண்ணிய பூமி இது. இராமாயணக் காவியத்தின் முக்கிய நகரமும் இதுவே. ஹிந்துக்களின் ஏழு புண்ணிய நகரங்களில் அயோத்தியும் ஒன்று. பண்டைய கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக அயோத்தி விளங்கியது. வைகுண்டத்தின் ஒரு பகுதியான அயோத்தியை, மனு பூவுலகம் கொண்டுவந்து, சரயூ நதியின் தெற்குக் கரையில் நிறுவியதாகப் புராணங்கள் சொல்கின்றன. 9,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரம் இதுவெனக் கூறப்படுகிறது. இன்னும் சிலர், ‘அயுத்’ என்ற மன்னரால் நிறுவப்பட்ட நகரம் என்பதால் அயோத்தி எனப் பெயர் பெற்றது என்றும் கூறுகிறார்கள்.

அயோத்தி கோயில்

அயோத்தி நகரம் தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்டது என்றும், சூரிய வம்சத்தவர்கள் ஆண்ட பூமி இதுவென்றும், ஸ்வர்கத்துக்கு இணையானது அயோத்தி என்றும் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இஷ்வாகு, பிரித்வி, உண்மைக்குப் பேர்பெற்ற ஹரிச்சந்திரன், கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த பகீரதன், தசரதன் போன்றோர் ஆண்ட பூமி அயோத்தி.

சரயு நதி

இராமாயணத்தை வால்மீகி அயோத்தியில் எழுதத் தொடங்கியதாக ஐதீகம். இராமாயணத்தின் ஆரம்பப் பகுதிகளில், வால்மீகி அயோத்தியை மிகவும் புகழ்ந்திருக்கிறார். பின்னாளில் கம்பரும், துளசிதாசரும் அயோத்தியின் பெருமைகளைப் பாடி இருக்கின்றனர். திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது. அதனால் 108 வைணவத் திருத்தலங்களில் அயோத்தியும் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

அயோத்தி கோயில்

குப்தர்கள் காலத்தில் அயோத்தி மிகப்பெரிய வணிக மையமாகத் திகழ்ந்திருக்கிறது. புத்தர் அயோத்திக்கு வருகை புரிந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. சீன யாத்ரீகரான ஃபாஹுயான் அயோத்தி பற்றியக் குறிப்புகளை எழுதி இருக்கிறார். அயோத்தி என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டே தாய்லாந்தின் ஒரு நகரம் ‘அயுத்தயா’ என்றும், இந்தோனேசியாவில், ‘யோகியாகர்தா’ என்றும் அழைக்கப்படுகின்றன. ராம்சரித மானசிலும், விஷ்ணு புராணத்திலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் அயோத்தி மண்ணை மிதித்தாலே பாவங்கள் அகலும் என்றும், புண்ணியம் சேரும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஹிந்து, புத்தம், ஜைனம் மற்றும் இஸ்லாம் வழிபாட்டுத் தலங்களும் அயோத்தியில் உள்ளன. அயோத்தியில் நூற்றுக்கணக்கான ராமர் ஆலயங்களும் மடங்களும் உள்ளன. இத்தலத்தில் ஸ்ரீராம நாமம் ஆண்டின் 365 நாட்களும் இரவு பகலாக இடைவிடாமல் ஜபிக்கப்பட்டு வருகிறது. ராம ஜன்ம பூமியில் இருக்கும் ஸ்ரீராமரை பக்தர்கள், ‘ராம் லாலா’ என்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீராமர் ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும். மீண்டும் மாலை 2 மணிக்குத் திறக்கப்படுகிறது.

அயோத்தி கோயில்

இக்கோயிலில் குழந்தை வடிவில் ஸ்ரீராமர் அருள்பாலிக்கிறார். 27 அங்குல உயரம் உள்ள இந்தத் திருவுருவம் பளிங்கினால் செய்யப்பட்டு, தங்கத்தால் இழைக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சந்திரதேஷ் பாண்டே என்பவர். இக்கோயிலில் ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட விசேஷ பல்லக்கு ஒன்றும் உள்ளது.

‘சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ’

என்று அயோத்தி ஸ்ரீராமரை நினைந்து குலசேகர ஆழ்வார் உருகிப் பாடிய பாடல் இத்தல ஸ்ரீராமரை தரிசித்து முடித்தபின்னும் நினைவில் ஒலித்தபடி இருக்கிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT