Bathe if the body is dirty; If the inside is dirty...? https://tamil.oneindia.com
ஆன்மிகம்

உடல் அழுக்கானால் நீராடலாம்; உள்ளம் அழுக்கானால்…?

இந்திராணி தங்கவேல்

சில வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி சென்றிருந்தோம். அப்பொழுது அங்கு ஒரு அருவியில் குளித்துக் கொண்டிருந்தோம். அந்த அருவியில் ஒரு முதியவரும் குளித்தார். ஒரு விஷமக்கார சிறுவன், அவர் குளித்துவிட்டு கரையேறும்போது அவர் கழுத்தில் துப்பினான். அவர் மீண்டும் அருவியில் குளித்துவிட்டு மேலே செல்ல திரும்பினார். அப்பொழுதும் அந்தச் சிறுவன் அவர் மீது துப்பினான். அந்த முதியவர் மீண்டும் அருவியில் நின்று விட்டு வெளியேறியவர், சட்டென்று அவன் இருக்கும் இடத்தைப் பார்த்து பார்வையைப் பதித்தார்.

மீண்டும் அவர் மீது துப்புவதற்காக வாய் நிறைய எச்சிலை குதப்பிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், அவர் பார்வையின் தகிப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் சட்டென்று அவர் காலில் விழுந்து பணிந்தான். அப்போது அந்த முதியவர், 'உனது பாவம் தொலைந்தது போ'என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்று மறைந்தார். அங்கு குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் இந்த நிகழ்வு புரட்டிப் போட்டது . அருவி ஓசையைத் தவிர எந்த ஓசையும் காதில் விழவில்லை. அப்படி ஒரு நிசப்தம் நிலவியது.

அருவியை விட்டு வெளியேறியவர்கள், அங்கு வந்து போனது யாராக இருக்கும் என்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். இதேபோன்ற ஒரு கதையை புத்தகம் ஒன்றில் படிக்க நேர்ந்தது. இதோ அந்தக் கதை உங்களுக்காக:

ஞானி ஒருவர் நாள்தோறும் கோதாவரி ஆற்றில் நீராடி விட்டு வருவார். ஒரு நாள் வழக்கம் போல அவர் நீராடி விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தீயவன் ஒருவன் மரத்தின் மேல் இருந்தபடி அவர் மீது எச்சிலை துப்பினான். இப்படியே பலமுறை நடந்தது. ஒவ்வொரு முறையும் ஏதும் பேசாமல் அந்த ஞானி ஆற்றுக்குச் சென்று நீராடி விட்டு வந்தார்.

ஞானியின் பொறுமையைக் கண்ட அவன், தனது செயலுக்கு வருந்தி, அவர் கால்களில் விழுந்தான். "ஐயா! என் தீய செயலை மன்னியுங்கள். இத்தனை முறை நான் உங்கள் மீது எச்சில் துப்பியும் நீங்கள் ஒரு முறை கூட என் மீது கோபப்படாமல் எப்படி இருக்க முடிந்தது?" என்று வியப்புடன் கேட்டான்.

அதற்கு அவர், "அன்பனே! நான் கோபப்பட்டு இருந்தால் என் உள்ளம் அழுக்காகி இருக்கும். உடல் அழுக்கானால் நீராடி தூய்மை செய்து கொள்ளலாம். உள்ளம் அழுக்கானால் எந்த வழியில் தூய்மை செய்வது? அதனால்தான் நான் அமைதியாக இருந்தேன்" என்று விளக்கம் கொடுத்தார்.

முகம் தெரிந்தவர்களும் முகம் தெரியாத எதிரிகள் போல உங்களுக்கு தீங்கிழைத்தால் அதை மறந்து விடுங்கள். தாங்கள் முக்கியமானவர்கள் என்ற அகந்தையை வெளிப்படுத்தவே அவர்கள் உங்களுக்குத் தீமை செய்து மகிழ்கிறார்கள். தள்ளி இருந்து ஒரு நாடகம் போல இதை ரசிக்கக் கற்றுக்கொண்டு விட்டால் போதும். ஆக்கபூர்வமாக எப்போதும் போல் உங்களால் வாழ முடியும்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT