Bhakthargalin Venduthalgalai Niraivetrum Poo Vizhunki Vinayagar! 
ஆன்மிகம்

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் பூ விழுங்கி விநாயகர்!

நான்சி மலர்

ந்தியாவில் எத்தனையோ அதிசய கோயில்கள் உள்ளன. அந்த அதிசய கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் மட்டும் சாதாரணமாக இருந்துவிடுமா என்ன? அந்த சிற்பங்களிலும் கூட கலைநயத்தையும், ஆச்சர்யத்தையும் புகுத்தியே வடிவமைத்துள்ளனர் நமது முன்னோர்கள். அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யத்தை தாங்கி நிற்கும் கோயில்தான், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில், திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் அமைந்துள்ள புராதனவனேஸ்வரர் கோயிலாகும்.

புராதனவனேஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இத்தல இறைவனை புராதனவனேஸ்வரர் என்றும் பார்வதி தேவியை பெரியநாயகி என்றும் அழைப்பார்கள். இது தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.

ஒரு காலத்தில் இக்கோயில் அமைந்திருந்த பகுதி காடாக இருந்ததால்தான் புராதனவனேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்பட்டார். இத்தலத்தில் சிவபெருமான் வெகுகாலமாக தவம் புரிந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்திருந்தது. எனவே, சிவனின் தவத்தை கலைக்க மன்மதனைக் கொண்டு ஈசன் மீது மலர்க்கணையை தொடுக்கச் சொன்னார் பார்வதி தேவி. மன்மதனும் அவ்வாறே செய்ய, ஈசனின் தவம் கலைந்தது. அதனால் கோபமடைந்த ஈசன், மன்மதனை எரித்து சாம்பலாக்கி விட்டார். எனவே இவ்வூர் ‘மதன்பட்டவூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

தேவர்களும், பார்வதி தேவியும் மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று ஈசனிடம் வேண்டிக்கொண்டனர். இதனால் மனம் இரங்கிய ஈசன், மன்மதனின் சாம்பல் மீது பால் தெளித்து அவனை உயிர்ப்பித்தார். அதனால் இவ்விடம் 'பாலத்தளி' என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், 'காமன் கொட்டல்' என்ற இடத்தில் இன்றும் காமன் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியநாயகி அம்மனை வணங்கினால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும். எப்பேர்ப்பட்ட கொடிய நோயும் தீரும், திருமணம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. வரம் கைகூடப்பெற்றவர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

இக்கோயில் பெரியநாயகி சன்னிதியின் வலதுபுறத்தில் வீற்றிருக்கும் விநாயகரை, ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கே வரும் பக்தர்கள் நந்தியாவட்டை பூவின் காம்பினை கிள்ளி விட்டு விநாயகர் காதுகளில் தெரியும் துவாரத்தில் பூக்களை வேண்டுதலுடன் வைக்கிறார்கள். பூ வைத்தவுடன் உள்ளே சென்றுவிட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று அர்த்தம். பூ உள்ளே செல்ல தாமதமானால் நினைத்த காரியம் நடக்க தாமதம் ஏற்படும் என்று அர்த்தம். பூ உள்ளே செல்லாமல் அப்படியே இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறாது என்று அர்த்தம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இந்த விநாயகர் பக்தர்களுக்கு நல்வழி கூறுவதால் இவரை, ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள்.

உங்களுக்கும் ஏதேனும் வேண்டுதல் இருப்பின், இந்தக் கோயிலுக்கு வந்து விநாயகர் காதுகளில் பூ வைத்து அதன் பலனை தெரிந்து கொள்ளலாமே!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

SCROLL FOR NEXT