ஹனுமன்மீது கோபப்பட்டு அவரை முற்றிலும் நிராகரித்த துரோனகிரி கிராம மக்கள் அவரை வழிபடுவதே இல்லை என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
அஞ்சனை மைந்தன் ஹனுமன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ராமாயணத்தில் ராமனுக்கு கடைசி வரை துணையாக நின்ற இவர், மக்களின் மத்தியில் ஒரு கடவுளாகப் போற்றப்படுபவர். சிரஞ்சீவிகளில் ஒருவரான ஹனுமன் இன்றும் உலகத்தில் எதோ ஒரு மறைவான இடத்தில் உயிர் வாழ்ந்துக் கொண்டுத்தான் இருக்கிறார். அனைவருக்கும் பிடித்தமான ஹனுமனை வெறுப்பவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால், அப்படியில்லை, ஹனுமனை வெறுக்கும் ஒரு கிராமமே இன்னும் இருந்து வருகிறது. அதற்கு ஒரு நிஜ கதையும் உள்ளது.
ஆம்! உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தேவகிரி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்து மக்களுக்குத்தான் ஹனுமனை பிடிக்காது.
ராமாயணத்தில் ராமன் சீதையை மீட்பதற்காக ராவணனுடன் போரிடுவார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்போது ஒருமுறை ராமரின் இளைய சகோதரர் லட்சுமணன் உயிர் கேள்விக்குறியாக இருந்த நேரத்தில், லட்சுமணனுக்கு சஞ்சீவினி மூலிகை தேவைப்படும். அந்த மூலிகை இருந்தால், அவரை குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர் கூறுவார். இதனையடுத்து ஹனுமன் அந்த மூலிகையைத் தேடி பறந்து செல்வார். ஹனுமன் ஒரு வயதான மூதாட்டியிடம் சஞ்சீவினி மூலிகை எங்கிருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அவர் துரோனகிரி மலையை கைக்காட்டியிருக்கிறார். ஹனுமனும் துரோனகிரி மலையின் மேல் சென்று மூலிகை இருக்கிறதா என்று பார்ப்பார். ஆனால் அவருக்கு கிடைக்காததால் அந்த மலையையே தூக்கிச் செல்வார் என்ற கதை நம் அனைவருக்குமே தெரியுமல்லவா?
இங்குதான் ஒரு பெரிய தவறே நடந்திருக்கிறது. மலையை கடவுளாக வழிபடும் முறை சில கிராமங்களில் அப்போது மட்டுமல்ல இப்போதும் காணமுடியும். அந்தவகையில், துரோனகிரி மலை அந்த மக்களின் கடவுள். மக்களால் போற்றி வணங்கப்படும் கடவுள். அப்படி கடவுளாக வழிபடும் மலையின் மேல்பாதியை பிரித்து எடுத்துச் சென்றதை அவ்வளவு பெரிய குற்றமாகப் பார்க்கின்றனர் அந்த மக்கள்.
கடும்கோபத்தில் இருந்த அந்த மக்கள் வழி சொன்ன மூதாட்டியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். அதுமுதல் ஹனுமனை அந்த மக்கள் வெறுத்தே விட்டனர். ஆகையால், அந்த கிராமத்தில் ஹனுமன் சிலையையோ அல்லது புகைப்படத்தையோ கூட வைக்கமாட்டார்கள். ஹனுமனை குறிக்கும் சிவப்பு கொடியையும் அவர்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கமாட்டார்கள்.
மேல் பாகம் இல்லாத தட்டையாக இருக்கும் அந்த மலையை மக்கள் இன்றும் வழிபட்டு வருகிறார்கள். வருடம் ஒருமுறை அவர் எடுத்துச் சென்ற தினத்தில் அந்த மக்கள் மலைக்கு புனித வழிபாடு செய்கிறார்கள். மேலும் அந்த நாட்களில் பெண்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடவும் மாட்டார்கள். அதாவது அந்த மூதாட்டியின் செயலுக்காக இன்றுவரை பெண்கள் அந்த தண்டனையை அனுபவிக்கிறார்கள்.
இதுதான் அந்த வெறுப்பிற்கு பின்னால், உள்ள காரணம்.