சீதா தேவியை அரக்கன் ராவணனிடம் இருந்து மீட்க ஸ்ரீராமர் வானரப் படைகளைத் திரட்டிக்கொண்டு இருந்தார். வானரங்களில் உயரமான, குட்டையான எனப் பல வகை இருந்தது. அதில் மிகவும் குள்ளமான சிங்கலிகா என்னும் ஒருவகை வானரப் படை இருந்தது. அதில் ஆயிரம் பேர் இருந்தார்கள். இவர்கள் எதிரிகள் மேல் அப்படியே விழுந்து பற்களாலும் நகங்களாலும் பேரணிக்கு உதவக் கடித்து விடுவார்களாம்.
போருக்கு எல்லோரும் புறப்படுவதற்கு முன்பு அவர்களது உற்றார், உறவினர்கள் எல்லோரும் கண்ணீர் வடித்து அழுதனர். எல்லோரும் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும் என்று. இதை ஸ்ரீராமர் கவனித்து விட்டார். யாரும் கவலைப்படாதீர்கள். அனைவரையும் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ப்பது எனது கடமை மற்றும் அது என் பொறுப்பு என்றார்.
ஸ்ரீராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில், ராவணன் கும்பகர்ணனை அழைத்துப் போரிடச் சொன்னான். ராட்சசனாக இருந்தாலும் கும்பகர்ணன் நல்லவன். அவன் சீதா தேவி மீண்டும் ஸ்ரீராமரிடமே திருப்பி அனுப்பிவிடச் சொல்லியும் அதை ராவணன் கேட்கவில்லை. யுத்தம் தொடர்ந்தது. ராம பாணம் பட்டு கும்பகர்ணன் இறந்து சாயும்போது, அவனது தேரிலிருந்த ஒரு பெரிய மணி உருண்டு சென்று அந்த ஆயிரம் சிங்கலிகாவை அப்படியே மூடியது.
தங்கள் அனைவரையும் ஏதோ ஒன்று மூடியது என்று எண்ணி வருத்தப்பட்டன சிங்கலிகா. காலம் கடந்தது சிங்கலிகாவை காப்பாற்ற யாரும் வராததால் அனைவரையும் சினந்து கொண்டது. வானரத் தலைவன் சுக்ரீவனும் வரவில்லை, அனுமனும் வரவில்லை, ஏன் நம்மைக் காப்பதாக வாக்கு கொடுத்த ஸ்ரீராமரும் நம்மைக் காக்க வரவில்லை என்று அனைவரும் அழுது புலம்பினர். அதிலிருந்த ஒரு மூத்த சிங்கலிகா மட்டும், ‘எல்லோரும் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக நம்மைக் காப்பாற்ற வருவார்கள். அதுவரைக்கும் கண்களை மூடி ராம நாமம் கூறி தியானத்தில் இருப்போம்’ என்றது.
போர் முடிந்து சீதையை அழைத்துக் கொண்டு போகும்பொழுது ஸ்ரீராமர், சுக்ரீவனிடம், "அனைத்து வானரங்களும் பத்திரமாக இருக்கிறார்களா" என்று எண்ணிவிட்டு வா" என்றார். உடனே சுக்ரீவன், “அனைவரையும் எண்ணிவிட்டேன். ஆனால், ஆயிரம் சிங்கலிகாக்களை மட்டும் காணவில்லை” என்றார். மீண்டும் எண்ணச் சொன்னார்? அதே எண்ணிக்கைதான் வந்தது. உடனே அனுமனை அழைத்துக்கொண்டு போர்க்களத்துக்குச் சென்று தேடினார்கள். யாரும் கிடைக்கவில்லை. உடனே அனுமனிடம், அங்கே இருந்த பெரிய மணியை எடுத்துவிட்டு தேடச் சொன்னார். அனுமனும் தனது வாலால் மணியை எடுக்கும்பொழுது அனைத்து சிங்கலிகாக்களும் ஸ்ரீராமரை தவறாகப் பேசியதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
அனுமனை வாலில் மணியுடன் தரிசிக்கும் பொழுது இந்தக் காட்சி மிகவும் சுந்தரமாக உள்ளது. ‘இந்த கோலத்தில் உன்னை காண்பவர்க்கு ஞானமும், வைராக்கியமும் உண்டாகும்’ என வாழ்த்தினார் ராமபிரான்.