திருச்செந்தூர் செந்தில் வேலவன் தனது வேலால் கிணறு ஒன்றை உருவாக்கினார். அக்கிணறே நாழி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் என்றாலே அங்கு கடற்கரையோரமாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் நினைவுதான் வரும். அந்த அளவுக்கு பிரசித்தி பெற்ற திருக்கோயில் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகத் திகழ்கிறது.
முருகப்பெருமானின் வாழ்வின் முக்கியமான நிகழ்வு நடைபெற்ற இடமாக திருச்செந்தூர் பார்க்கப்படுகிறது. அவர் சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து ஆட்கொண்ட இடமாக திருச்செந்தூர் தலம் உள்ளது. கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்தக் கிணறுகள் மணல் மூடி தூர்ந்து விட்டன.அந்த தீர்த்தக்கட்டங்களை குறிப்பிடும் கல்வெட்டுகளும் மறைந்து விட்டன. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஆறு நாட்கள் கடுமையான போர் நடைபெற்றது.
அசுரப்படைகள் வீழ்ந்த பின்னர் சூரபத்மன் மாமரமாக உருமாறினான். முருகப்பெருமான் தனது வேலினால் மாமரத்தை இரண்டாகப் பிளந்தார். மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும் மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன் சேவல் கொடியுடனும் மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார். போர் முடிந்த பின்பு தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே முருகன் தன் வேலால் கிணறு ஒன்றை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூரில் இதற்கு முன்பு காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவற்றில் கந்த புஷ்கரணி என்று அழைக்கப்பட்ட தீர்த்தமே இந்த நாழிக்கிணறு ஆகும். இங்கு மட்டுமே பக்தர்கள் தற்போது நீராடி வருகிறார்கள். கோயிலுக்கு தெற்கே இந்த நாழிக்கிணறு உள்ளது.
14 அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்திலும் இருக்கும். இந்தக் கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ளே இந்தக் கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்துள்ளது அதிசயமாகும். பெரிய கிணற்றுக்கு உள்ளே ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடி பரப்பும் ஏழடி ஆழமுள்ள இந்தத் தீர்த்தம் உப்பு தன்மையே இல்லாத நன்னீராக இருக்கிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள் சகல நன்மைகளையும் அடைவார்கள்.
இந்த ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள 24 தீர்த்தங்கள் முகாரம்ப தீர்த்தம், தெய்வானை தீர்த்தம், வள்ளி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சித்தர் தீர்த்தம், திக்கு பாலகர் தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், ஐராவத தீர்த்தம், பைரவ தீர்த்தம், துர்கை தீர்த்தம், ஞான தீர்த்தம், சத்திய தீர்த்தம், தர்ம தீர்த்தம், முனிவர் தீர்த்தம், தேவர் தீர்த்தம், பாவநாச தீர்த்தம், கந்த புஷ்கரணி தீர்த்தம், கங்கா தீர்த்தம், சேது தீர்த்தம், கந்த மாதன தீர்த்தம், மாதுரு தீர்த்தம், தென்புலத்தார் தீர்த்தம் என 24 தீர்த்தங்கள் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடுவது மிகச் சிறப்பு எனக் கூறப்படுகிறது.