Tirupati Sri Venkatavan 
ஆன்மிகம்

பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் வரலாறு தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

திருமலை திருப்பதியில் பிரம்மோத்ஸவ விழா நாளை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12ம் தேதி சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது. ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் பிரம்மோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஒன்பது நாட்களும் திருமலையில் மக்கள் வெள்ளம் அலைமோதும். மலை முழுவதும், ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷம் எதிரொலிக்கும்.

இந்த பிரம்மோத்ஸவத்திற்கு ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. ஒரு சமயம் நாரதருக்கு மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘மும்மூர்த்திகளில் யாருக்காக முனிவர்கள் யாகம் செய்ய வேண்டும்? இந்த மூவரில் யாகத்தை ஏற்றுக்கொள்ளும் சாந்தமான மூர்த்தி யார்?’ என முனிவர்களிடம் கேள்வி எழுப்பினர் நாரதர்.

Tirupati Brahmotsavam

இதையடுத்து பிருகு முனிவர், மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என அறிய விண்ணுலகம் சென்றார். பிரம்மாவையும் சிவனையும் சோதித்து அவர்களே சிறந்தவர்கள் என அறிந்து கொண்டு வைகுந்தம் சென்றார். முனிவர் வந்ததை கவனிக்காமல் நிஷ்டையில் இருந்த மகாவிஷ்ணுவை பிருகு முனிவர் மார்பில் எட்டி உதைத்தார். ஆனாலும், மகாவிஷ்ணு பொறுமையாக, ‘என்னை உதைத்ததால் தங்கள் கால்களுக்கு வலி ஏற்பட்டிருக்குமே’ என கவலையுடன் கேட்டார்.

அதைக் கேட்ட பிருகு முனிவர் தனது செயலுக்காக மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். பெருமாளும் அவரை மன்னித்தார். ‘முனிவர்கள் செய்யும் யாக அவிர் பாகத்தைப் பெற சிறந்த மூர்த்தி மகாவிஷ்ணுவே’ என பிருகு முனிவர் தீர்ப்பளித்தார். ஆனால், மகாவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் திருமகளுக்கு முனிவர் மீதும் மகாவிஷ்ணு மீதும் கடும் கோபம் வந்தது. திருமகள் மகாவிஷ்ணுவிடம், ‘உங்கள் மார்பில் நான் குடியிருக்கிறேன். உங்களை நெஞ்சில் உதைத்தது என்னை உதைத்தது போல் ஆகும். நீங்கள் அவரை தண்டிக்காமல் மன்னித்து விட்டீர்களே’ என்று கேட்டார். ‘ஒரு நல்ல காரியத்தை நிறைவேற்றவே முனிவர் இதுபோல் நடந்து கொண்டுள்ளார்’ என பதில் கூறினார் நாராயணன்.

Tirupati Brahmotsavam

ஆனால், அந்த சமாதானத்தை மகாலட்சுமி ஏற்கவில்லை. கோபித்துக் கொண்டு பூலோகம் சென்று விட்டார். இதனால் வருத்தம் அடைந்த மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து திருமகளைத் தேடி அலைந்த அவர் திருமாலை திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு வகுளா தேவியை தனது தாயாக பாவித்து அவருடன் வசித்து வந்தார். துவாபர யுகத்தில் கண்ணன் தனது அவதாரத்தை முடித்துக்கொள்வது குறித்து அனைவரும் வருத்தம் அடைந்தனர். கண்ணன் அவர்களிடம் நீங்கள் அனைவரும் கலியுகத்தில் என்னோடு வாழ்வீர்கள் என வரம் அளித்தார். கண்ணனின் இரண்டு திருமணத்தையும் காண இயலவில்லையே என வருந்திய யசோதாவிடம், ‘கலியுகத்தில் திருவேங்கடத்தில் திருவேங்கடத்தான் உருவில் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன். நீங்கள் வகுளா தேவியாக உருவெடுத்து அங்கு எழுந்தருளியுள்ள வராக மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். நான் உங்களை அங்கு சந்திக்கிறேன்’ என திருவாய் மலர்ந்தருளினார் கண்ணன்.

யசோதை அதன்படி தனது உடலை விட்டு கலியுகத்தில் வகுளா தேவியாக அவதாரம் எடுத்தாள். வகுளா தேவி, நாராயணனை சீனிவாசன் என அன்புடன் அழைத்து வந்தார். சீனிவாசன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் பத்மாவதியைச் சந்தித்து திருமணம் செய்ய விருப்பம் கொள்கிறார். பத்மாவதியும் சீனிவாசன் மேல் விருப்பம் கொள்கிறார். இவர்கள் விருப்பத்தை அறிந்த பத்மாவதியின் தந்தை ஆகாசராஜன் அவர்கள் திருமணத்தை விமர்சையாக நடத்தி வைத்தார்.

ஆகாசராஜன் மரணமடைந்த பிறகு அவரது சகோதரர் தொண்டைமான், சீனிவாசனிடம் ‘உங்களை எத்தனை தரிசித்தும் திருப்தி ஏற்படவில்லை. நீங்கள் தயைகூர்ந்து அருள்புரிய வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். சீனிவாசன், ‘உனது அண்ணன் பிரம்மச்சாரியாக இருந்த என்னை சம்சாரியாக்கினார். இந்த உலகில் எனக்குத் தங்க இடமில்லை. எனவே, எனக்கு ஒரு கோயில் கட்டி வை’ என்றார். சீனிவாசன் ஒரு இடத்தை குறிப்பிட்டுக் காட்டி, ‘இங்கு கோயில் கட்டு’ என்று கூறினார். பிரம்மதேவன் முதலிய தேர்ந்த வைணவத் தொண்டர்கள், வேதம் கற்றுத் தெரிந்த அந்தணர்கள் அனைவரும் பங்கேற்க ‘ஆனந்த நிலையம்’ என்று பெயரிடப்பட்ட கோயிலில் சீனிவாசனும் பத்மாவதியும் எழுந்தருள அப்போது பிரம்மதேவர் சீனிவாசனிடம் ‘நீங்கள் கலியுகம் முழுவதும் தங்களைக் காணவரும் பக்தர்களின் பாவங்களை தீர்த்து வைக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

‘வேங்’ என்றால் பாவம், ‘கடா’ என்றால் தீர்த்து வைக்கும் சக்தி என்று கூறிய சீனிவாசன், ‘இந்த இடம் வேங்கடா’ என அழைக்கப்படட்டும் என்றார். ‘திருவேங்கடம்’ என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் அருளும் சீனிவாசனும் வேங்கடேஸ்வரன் என்ற திருநாமம் பெற்றார். இதையடுத்து இந்த ஆலயத்துக்கு விழா எடுக்க பிரம்மன் விரும்பினார். சீனிவாசனிடம் சென்று ‘நாங்கள் இப்போது நடத்தவிருக்கும் விழாவுக்கு சம்மதிக்க வேண்டும்’ என்றார். இதற்கு வேங்கடநாதனும் சம்மதித்தார். பிரம்மனும் தேவர்களும் இணைந்து நடத்திய அந்த விழாதான் பிரம்மோத்ஸவம். இதுதான் பிரம்மோத்ஸவம் தொடங்கிய  வரலாறு.

திருமலை திருப்பதியில் பிரம்மோத்ஸவம் கடந்த 1400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல்லவ நாட்டை ஆண்ட பெருந்தேவி என்று அழைக்கப்பட்ட சமவை என்பவர்தான் முதன் முதலில் இந்த பிரமோத்ஸவத்தை நடத்தியுள்ளார் அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட மணவாள பெருமாள் எனும் சிலையை திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்த சிலைதான் போக சீனிவாச மூர்த்தி.

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

SCROLL FOR NEXT