Do you know the secret hidden in the sound of temple bells? https://tamilminutes.com
ஆன்மிகம்

கோயில் மணி ஓசையில் மறைந்துள்ள ரகசியம்!

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

கோயிலுக்குச் செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோயில் மணி அடிப்பது. கோயிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். பூஜை செய்யும்போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின்னர் ஒரு அறிவியல் நுண்ணறிவும் அடங்கி இருக்கிறது. கோயில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், அது உண்மையல்ல.

ஆகம சாஸ்திரங்களின்படி, கோயில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. கோயில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்கச் செய்கிறது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

கோயில் மணியில் இருந்து வெளிப்படும் ஒலியில் ஒரு தனித்துவம் உள்ளது. அதற்கு கோயில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள்தான் காரணமாகும். கோயில் மணியில் இருந்து வெளிவரும் ஓசை, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்து விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.

கோயில் மணியடிப்பது என்பது துர்தேவதைகளை விரட்டுவதற்காக என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக, ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள். ‘தீய சக்திகள் விலகி, இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும்’ என்பது இதன் பொருள்.

மணியடிப்பது என்பது அதற்காக மட்டுமல்ல, பூஜையின்போது நமது மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும், முக்கியமான தருணத்திலாவது இறைவனின்பால் நமது மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகவே மணி ஓசையை எழுப்புகிறார்கள். தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் அநாவசிய பேச்சுகளை நிறுத்தி இறைவனின்பால் நமது சிந்தனையைச் செலுத்துகிறோம். மணி ஓசை கேட்டதும் நம்மையும் அறியாமல் நமது கரங்கள் இறைவனைத் தொழுகின்றன. சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்காக மணியடிக்கப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்து.

நைவேத்யம் செய்யும்போது கண்டிப்பாக மணி ஓசையை எழுப்ப வேண்டும் என்கிறது சாஸ்திரம். மணி ஓசையைக் கேட்டதும் இறைவன் ஓடோடி வந்து நமது நைவேத்யத்தை ஏற்றுக்கொள்கிறான் என்கிறது ஆகம சாஸ்திரம். மணி ஓசையினால் நமது சிந்தனையும் ஒருமுகப்படுகிறது. சிரத்தையோடு இறைவனின்பால் நமது கவனமும் செல்கிறது. சிரத்தையுடன் கூடிய பக்தியைத்தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். நைவேத்யம், தீபாராதனை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் கோயில் மணியை அடிப்பது தவறு.

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

SCROLL FOR NEXT