புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே திருவேங்கடவனின் அடியார்கள் உள்ளமெல்லாம் சென்னையை நோக்கியே இருக்கும். தமிழ்நாட்டில் வேறு எந்த ஒரு ஊருக்கும் கிடைக்காத பாக்கியம் சென்னைக்கு உள்ளது. ‘தருமமிகு சென்னை என்பது உண்மைதான்’ என அவர்கள் வாய் முணுமுணுக்கும், மெய்சிலிர்க்கும் இதற்குக் காரணம் சென்னை கந்தப்ப செட்டி தெருவில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்படும் பதினொரு வெண்பட்டு குடைகள் திருப்பதி குடைகள்தான்.
திருப்பதி குடைகள் சென்னையில் உள்ள ஒரு பகுதியான யானை கவுனியை தாண்டுகிறது என்கிற வண்ணமயமான போஸ்டர்கள் சென்னை நகரெங்கும் திமிலோகப்படும். அது வேங்கடவன் பக்தர்களை பரவசப்படுத்தும். சென்னை மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள பக்தர்கள், ‘கோவிந்தா கோவிந்தா’ என்கிற கோஷத்துடன் இந்த திருக்குடை வைபவத்தில் உளப்பூர்வமாகக் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை உபய உத்ஸவ ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 4 மணி அளவில் யானை கவுனி பகுதியை தாண்டுகிறது.
சென்னையில் இருந்து பல ஊர்களைக் கடந்து செல்லும் இந்த குடைகள் ஐந்து நாட்களில் திருமலையைச் சென்றடையும். திருமலையில் மாட வீதிகளில் வலம் வந்து பத்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரியிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படும். பிரமோத்ஸவ வைபவத்தின் கருட சேவை நாளில் ஏழுமலையானுக்கு இந்தப் புதிய குடைகள் நிழல் தரும். திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஏழுமலையான் சேவைக்காக ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாக சென்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்கப்படும். இந்து தர்மார்த்த டிரஸ்ட் சமர்ப்பிக்கும் இந்த திருக்குடைகள் கருட சேவை மட்டுமின்றி ஆண்டு முழுவதும் திருமலை உத்ஸவங்களில் பயன்படுத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் தனது கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஏழுமலையான் தனது திருமணத்திற்காக யானை கவுனியில் கடன் வாங்கி இருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவார்களாம். இது நூற்றைம்பது வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் ஆகும். இந்தக் குடைகள் ஆதிசேஷனுக்கு நிகரான முக்கியத்துவம் பெறுகின்றன. திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்கலம் பெறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருப்பதி குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள் ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசனம் செய்யக் கூடுவார்கள். பிரம்மோத்ஸவத்தின்போது கோயில் உத்ஸவர் மலையப்ப சாமியை தினமும் காலை, மாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அப்போது உத்ஸவருக்கு முன்னும் பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகளை எடுத்துச் செல்வார்கள். இவை தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கப்படுகிறது.
பிரம்மோத்ஸவத்திற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுபதினம் ஒன்றில் நல்ல நேரத்தில் பூஜைகள் செய்து திருக்குடைகள் செய்யும் பணியை தொடங்குவார்கள். முழுக்க முழுக்க புதிய பொருட்களைக் கொண்டே இந்த திருக்குடைகள் செய்யப்படும். பட்டு துணியும் மூங்கில் ஜரிகை மின்னும் பொருட்கள் கொண்டு சுமார் ஏழு அடி விட்டமும் அதே உயரத்துடனும் பதினொரு வென்பட்டு குடைகள் தயாரிப்பார்கள். இந்தக் குடைகள் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் வைத்து தயாரிக்கும் பணிகள் நடைபெறும். இதைத் தயாரிக்கும் பேறு பெற்ற அன்பர்கள் விரதம் இருப்பார்கள். இந்தக் குடைகள் பக்தியுடன் தயாரானதும் இவற்றுக்கு பூஜை, ஆராதனை உட்பட சகல மரியாதைகளும் நடைபெறும். அதன் பிறகு மேள தாளம் வேதபிரபந்த கோஷங்களும் கோவிந்த நாமமும் முழங்க திருக்குடைகள் திருப்பதியை நோக்கிக் கிளம்பும்.
மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அழகான குடைகள் ஆடி அசைந்து வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். இவை தவிர, பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உத்ஸவ சிலைகள், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேச பெருமாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பவனி வரும்.
குடைகள் தயாரான இடத்திலிருந்து கிளம்பி அருகில் உள்ள யானை கவுனி பகுதியை தாண்டும்போது பக்தர்கள் கூட்டம் கோவிந்த நாமம் முழங்கி வழியனுப்பி வைப்பார்கள். இந்த நிகழ்ச்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும். இந்தக் குடைகள் எந்தெந்த வீதிகளில் பவனி வருவது, எங்கெங்கே தங்குவது என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதன்படி திருக்குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடு நடைபெறும். இந்தக் குடை பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் நெய்வேத்தியம், அன்னதானம், நீர் மோர் பானகம் விநியோகம் என அமர்க்களப்படும்.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் இரண்டு மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். அதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிகொடுத்த மலர் மாலை. மற்றொன்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக சென்னையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ஏழுமலையான் கருட சேவைக்கான வெண்பட்டு திருக்குடைகள். வைகுண்டத்தில் நாராயணனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே பெருமாள் எழுந்தருளும்போது திருக்குடையாகிறார் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையானுக்கு பிரம்மோத்ஸவ கருட சேவையின்போது திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு செல்கின்ற திருக்குடைகளை தரிசித்து ஏழுமலையானின் திருவருளைப் பெறுவோம்.