நடராஜர் எப்போதுமே வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை தூக்கித்தான் நடனமாடுவார். எல்லா இடங்களிலும் நடராஜர் சிலை அவ்வாறே அமைந்திருக்கும். ஆனால், மதுரை திருத்தலத்தில் மட்டும் இடது காலை தரையில் ஊன்றி வலது காலை தூக்கி நடனமாடியிருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முன்னொரு காலத்தில் மதுரையை ராஜசேர பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்து வந்தார். அந்த மன்னன் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்து சிறந்து விளங்கியிருந்தார். ஆனால், அவர் ஆடல்கலையை மட்டும் கற்றுக்கொள்ள விருப்பப்படவில்லை. ஏனெனில், அந்தக் கலை சிவனுக்கு உரியது என்று நினைத்தார். அவருக்கே உரித்தான புனிதமான கலையை நாம் கற்றுக்கொள்ளக் கூடாது என்று நினைத்தார்.
இப்படியிருக்கையில், ஒரு சோழ நாட்டுப் புலவர் பாண்டிய மன்னனை பார்க்க வருகிறார். அவர் சோழ மன்னனின் புகழைப் பற்றி பெருமையாகப் பேசும்போது, ‘அவருக்கு அனைத்து கலைகளுமே தெரியும். முக்கியமாக ஆடல் கலையில் அந்த சோழ மன்னன் சிறந்து விளங்குகிறார்’ என்று கூறுகிறார்.
இதைக்கேட்டு ஆடல் கலையை கற்றுக்கொள்ளாத பாண்டிய மன்னனுக்கு பெருத்த அவமானமாகப் போய் விடுகிறது. அதற்காகவே ஆடல்கலையை கற்றுக்கொண்டு சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணிய பாண்டிய மன்னன் ஆடல்கலையை நன்றாகக் கற்று கைத்தேர்ந்து விடுகிறார்.
அப்படி ஆடல்கலையை கற்கும்போதுதான் அந்த பாண்டிய மன்னனுக்கு ஒன்று விளங்குகிறது. ஆடல்கலையை கற்கும்போது அவருக்கு பயங்கரமாக கால்கள் வலிக்க ஆரம்பிக்கின்றது. அப்போது அந்த பாண்டிய மன்னன் நினைக்கிறார். 'சிறிது நேரம் நடனமாடியதற்கே கால்கள் இப்படி வலிக்கிறதே! பல யுகங்களாக நடராஜர் ஒரே காலிலேயே நடனமாடி நிற்கிறாரே? அவருக்கு எவ்வளவு வலிக்கும்' என்று தோன்றியிருக்கிறது.
இதனால் மிகவும் மனம் வருந்திய பாண்டிய மன்னன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைக்கிறார். 'எனக்காக ஒருமுறை உங்கள் கால்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்' என்று வேண்டுகிறார். இதனால், மனம் நெகிழ்ந்துபோன சிவபெருமான் தன்னுடைய பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்கி தனது கால்களை மாற்றி வைத்துக்கொள்கிறார். சிவபெருமானின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.