தெலங்கானா மாநிலம், யாதகிரிகுட்டாவில் உள்ள நரசிம்மர் கோயில், 300 அடி உயரம் உள்ள பெரிய குன்றின் மீது அமைந்துள்ளது. புராணங்கள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு கண்கவர் வரலாற்றை இக்கோயில் கொண்டுள்ளது. இக்கோயில் நரசிம்மரின் ஐந்து வடிவங்களைக் கொண்டது.
புராணத்தின்படி, இக்கோயிலின் இருப்பிடம் யாதவ வம்சத்தின் ஆட்சியாளர் யதுவின் புராணக் கதையுடன் தொடர்புடையது. ரிஷ்ய ஷ்ருங்கரின் மகனான ஸ்ரீ யாதவ மகரிஷி ஆஞ்சனேயர் சுவாமியின் அருளாசியுடன் நரசிம்ம சுவாமியை நோக்கித் தவம் இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் அவருக்கு 5 திருக்கோலங்களில் காட்சியளித்தார். அவை: ஸ்ரீ ஜ்வாலா நரசிம்மர், ஸ்ரீ யோகானந்த நரசிம்மர், ஸ்ரீ உக்ர நரசிம்மர், ஸ்ரீ கந்தபெருந்த நரசிம்மர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் என ஐந்து திருக்கோலங்களில் தோன்றினார். இதனால் இந்தக் கோயிலுக்கு பஞ்ச நரசிம்மர் கோயில் என்று பெயர் வந்தது.
புராண இதிகாசங்களின்படி, யாதகிரி குட்டா, ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்ற பிறகு நரசிம்ம பகவான் ஓய்வெடுத்த இடமாக நம்பப்படுகிறது. இந்த இடம் தீமையின் மீது நன்மையின் வெற்றியை குறிக்கிறது.
புராண சிறப்புகளைப் பெற்ற இந்த நரசிம்மர் கோயிலுக்கு மக்கள் வந்து வணங்கி வேண்டிக் கொண்டால் அவர்களின் நோய் தீரும் என்பது ஆழமான நம்பிக்கை. இந்த கோயிலில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரை, 'வைத்திய நரசிம்மர்' என்று போற்றுகிறார்கள். மேலும், கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வந்து வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். இக்கோயிலில் 40 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தீராத நோய்களைக் கூட தீர்த்து வைப்பார் என்று மக்கள் கருதுகிறார்கள். பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் இது. விஜயநகர பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது சுயசரிதையில் இந்த நரசிம்மர் கோயிலுக்கு வழக்கமாகச் சென்று வழிபட்டு வந்ததையும், போருக்கு செல்லும் முன்பு இங்கு விசேஷ வழிபாடு செய்ததையும் பற்றிய குறிப்புகள் உள்ளன.
நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரமும் அதைத் தொடர்ந்து பல உள் மண்டபங்களும் கொண்ட இந்தக் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முக்கிய பூஜை மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் கருவறைக்கு முன்னால் ஒரு பெரிய மகா மண்டபம் உள்ளது. கர்ப்பக்கிரகம் ஒரு குறுகிய குகையில் நரசிம்மரின் அவதார உருவத்துடன் அமைந்துள்ளது. இந்த மலைக்கோயிலின் கருவறையில் ஜ்வாலா நரசிம்மர், கந்தபெருண்ட நரசிம்மர் (உருவம் இல்லாதவர்) மற்றும் யோக நரசிம்மர் ஆகியோர் வழிபாட்டில் உள்ளனர். மேலும், லட்சுமி நரசிம்மரின் வெள்ளி உருவமும் ஆண்டாளம்மா சன்னிதியும் உள்ளன.
கருவறை குகையின் சுவரில் உள்ள இரண்டு பாறை வடிவங்கள் முறையே ஜ்வாலா நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் என்று வணங்கப்படுகின்றன. ஜ்வாலா நரசிம்மர் உருவம் ஒரு பாம்பை ஒத்திருக்கிறது. அதே நேரத்தில் யோக நரசிம்ம உருவம் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. மலையடிவாரத்தில் வைகுண்ட துவார நுழைவாயில் உள்ளது. கோயிலின் உள் கருவறையில் சிகரத்தின் மேல் மகாவிஷ்ணுவின் தங்க சுதர்சன சக்கரம் மூணுக்கு மூணு அடி பரிமாணத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
கருவறையில் நரசிம்மரின் சிலைக்கு அருகில் நிற்கும்போது ஒரு சூடான உணர்வை அல்லது தெய்வத்தின் சுவாசத்தை அனுபவிப்பதாக மக்கள் அடிக்கடி தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வு தெய்வீக ஆசீர்வாதமாக கருதப்படுகிறது.