Do you know where the temple of Sudarsanar Moolava and Perumal Utsavar is located? https://www.tirunelveli.today
ஆன்மிகம்

சுதர்சனர் மூலவராகவும் பெருமாள் உத்ஸவராகவும் உள்ள கோயில் எங்குள்ளது தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கவான் மகாவிஷ்ணுவின் ஆயுதங்கள் சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி ஆகிய பஞ்ச ஆயுதங்கள் ஆகும். இந்த ஐந்து ஆயுதங்களில் மிகவும் சிறப்புடையது சுதர்சன சக்கரம். பக்தர்கள் கூப்பிட்டவுடன் பெருமாளுக்கு முன் விரைந்து வந்து சங்கடங்களை தீர்க்க வல்லவர். இவருக்கு சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என பல பெயர்கள் உண்டு. இவருக்கு ஆழ்வார் என அடைமொழி சேர்த்து சக்கரத்தாழ்வார் என சிறப்பித்துக் கூறப்படுகிறது. இவர் 16 கைகளை உடையவராகவும், சில இடங்களில் 32 கைகளைக் கொண்டவராகவும் பெருமாள் கோயில்களில் தனி சன்னிதியிலும் வீற்றிருக்கிறார். சுவாமி தேசிகன் சுதர்சனாஷ்டகம் என்ற நூலில் இவரைப் போற்றி பாடியுள்ளார்.

வேங்கடாசலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில்:

திருநெல்வேலி மாவட்டம், கரிசூழ்ந்த மங்கலம் என்ற ஊரில் உள்ளது அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில். இக்கோயில் மூலவர் சக்கரத்தாழ்வார் ஆகவும், உத்ஸவர் வேங்கடாசலபதி ஆகவும் காட்சி தருகிறார்கள். இக்கோயிலின் சிறப்பு அம்சமே மூலவர்தான். பொதுவாக, அனைத்து வேங்கடாசலபதி ஆலயங்களிலும் மூலவரும் உத்ஸவரும் பெருமாளாகத்தான் இருப்பது வழக்கம். ஆனால், இக்கோயிலில் உத்ஸவர் அலமேலு மங்கா சமேத வேங்கடாசலபதி ஆகவும், மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் காட்சியளிக்கின்றார்கள்.

சுதர்சன சக்கரத்தின் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகாசுதர்சன மூர்த்தி ஆகவும், பின்புறம் நான்கு கரத்திலும் சக்கரம் ஏந்திய நிலையில் யோக நரசிம்மராகவும் மூலவர் காட்சி தருகிறார். இந்தியாவிலேயே மூலவர் சக்கரத்தாழ்வார் ஆகவும், உத்ஸவர் பெருமாளாகவும் ஓரிரு இடங்களில்தான் உள்ளன. அவற்றில் இக்கோயிலும் ஒன்று.

KarisuzhnthamangalamPerumal Temple

சக்கரத்தாழ்வாருக்கு மாதத்திற்கு பத்து தினங்களுக்கு மேல் எண்ணெய் சாத்தி அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனாலும், எண்ணெய் சாத்தி அபிஷேகம் செய்த சில மணி நேரங்களிலேயே அந்த விக்ரகத்தின் மேல் எண்ணெய் பசையே இராது. உயிரோட்டமான கல் விக்கிரகத்தில் இவ்வாறு ஏற்படுவது இயல்பு என்று கூறப்படுகிறது. எனவே, இக்கோயில் மூலவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் எனப் போற்றப்படுகிறார்.

குழந்தைப் பேறு வேண்டும் தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து சிறிய குழந்தைகளுக்கு தாமிரபரணி நதி படித்துறையில் பாயசம் வழங்கினால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கையாகும். நிறைய பேர் இந்த பிரார்த்தனையை செய்து மழலைச் செல்வத்தை பெற்றுள்ளனர். இங்கு பெருமாளுக்கு கருட சேவை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கோயில் சுக்ரன் பரிகார தலமாகவும் போற்றப்படுகிறது. சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்ரனுக்கு அதிபதி. எனவே, இக்கோயில் சுக்ர பரிகார தலமாக விளங்குகிறது.

தசாவதாரங்களில் வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை இக்கோயில் சக்கரத்தாழ்வார் ஒருங்கே பெற்றவர். திருமால் இவரிடம் ஆயுள், ஆரோக்கியம் ஆகியற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையைத் தந்துள்ளதாக நம்பிக்கை. இக்கோயில் சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வாரை வழிபட எதிரிகள் விலகுவர். புத்தி, சாமர்த்தியம், வெற்றி இவற்றை அள்ளி வழங்கும் சக்கரத்தாழ்வாரை வழிபட, குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

SCROLL FOR NEXT