ஒரு பக்கம் வயல்வெளி, இன்னொரு பக்கம் ஏரி என்று சிறு குன்றின் மீது அமைந்துள்ளது பனமலை சிவன் கோயில். இந்தக் கோயிலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலும் உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரியாக உள்ளன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனமலை என்னும் அழகிய கிராமத்தில்தான் இக்கோயில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் முதல் கருங்கல் கோயில் இதுதான் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காஞ்சி கைலாசநாதர் கோயில்தான் உலகின் முதல் கருங்கல் கோயில் என்று கூறுவார்கள். இந்த பனமலை கோயிலும், காஞ்சி கைலாசநாதர் கோயிலும் உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இரண்டு கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவ்விரு கோயில்களைக் கட்டியதும் ஒரே மன்னர் என்பதால் இவ்வாறு கூறுகிறார்கள்.
இக்கோயிலுக்குச் செல்லும் மலையடிவாரத்தில் இருக்கும் விநாயகர் கோயிலை பாறையிலேயே குடைந்திருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முகப்பு மண்டபத்தை அமைத்துள்ளனர். இந்த மலையில் இயற்கையாக அமைந்த சுணைகளும் உள்ளன. வலது பக்கத்தில் பச்சைப்பசேலேன்று வயல்வெளியும், இடதுபக்கம் பிரம்மாண்டமான ஏரியும் அமைந்திருக்கிறது.
இக்கோயிலை 1300 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் நரசிம்மன் என்ற ராஜசிம்ம பல்லவ மன்னனே 8ம் நூற்றாண்டில் கட்டினார். இந்த ராஜசிம்ம பல்லவ மன்னன்தான் ஒரே விதத்தில் மூன்று கோயில்களை கட்டியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், பனமலை சிவன் கோயில் ஆகியவையாகும்.
இந்த ஊருக்கு பனைமலை என்று பெயர் வரக்காரணம் இந்த மலையில் நிறைய பனை மரங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு பல்லவ மன்னன் தாளகிரீஸ்வரர் என்று பெயர் வைத்துள்ளார். ‘தாள்’ என்பது பனை மரத்தை குறிக்கும் சொல்லாகும். பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்ட சிவன் என்பதால் இது இத்தலம் பனமலை என்று அழைககப்படுகிறது.
மூலவருக்குப் பின்புறம் சோமாஸ்கந்தர் காட்சி தருகிறார். கோயில் கருவறையைச் சுற்றி நிறைய சிற்பங்கள் காணப்படுகின்றன. கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி இக்கோயிலை கட்டியிருப்பது தனிச் சிறப்பு. மேலும், இக்கோயிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சுவர் ஓவியம் ஒன்று இக்கோயில் கருவறையில் உள்ளது. அந்த ஓவியத்தை இப்போது பார்ப்பதற்கும் கலைநயத்துடனும், உயிரோட்டத்துடனும் உள்ளது. தற்போது இந்த ஓவியத்தில் எஞ்சியிருப்பது பார்வதி தேவி மட்டும்தான். இவருடைய நகைகள் அவ்வளவு நுணுக்கத்துடனும், கலைநயத்துடனும் வரையப்பட்டிருக்கிறது.
பார்வதி தேவி எதிரே இருக்கும் நடராஜரை பார்ப்பது போல இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. ஆனால், நடராஜரின் ஓவியம் முற்றிலுமாக சிதைந்த நிலையில் உள்ளது. கோயிலுக்கு பின்புறம் சுரங்கப்பாதை இருப்பதாகவும், அது செஞ்சிக்கோட்டை வரை செல்வதாகவும் சொல்லப்படுகிறது.
இக்கோயிலின் அருகில் இருக்கும் ஏரிதான் பனமலை கிராமத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்தக் கோயிலைக் கட்டிய காலத்தில்தான் இந்த ஏரியையும் வெட்டியிருக்கிறார்கள். பல்லவர்கள் எங்கே கோயில் கட்டினாலும் அங்கு ஓர் நீர்நிலையை அமைப்பது வழக்கம்.
இந்த அதிசயக் கோயிலை ஒருமுறையாவது சென்று தரிசித்து ஈசனின் அருளைப் பெறுவது சிறப்பாகும்.